நண்பர்களே,
நாம் அதிக அளவு வாசிப்பதை காட்டிலும் வாசித்தவற்றை தெளிவாக்கி அதை தொகுத்து வரிசைப்படுத்தி நினைவில் பதிய வைத்துக் கொள்வது
மிக முக்கியம் என நினைக்கிறேன்.
அப்பொழுதுதான் சுயமாக சில அவதானிப்புகள் அல்லது சிந்தனைகள் அமையப் பெறும், அறிவு சேகரம் ஆவதும் முறையாக நடைபெறும்.
நாம் ஒரு வாசக குழுமத்தில் இருந்தாலும் வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு காலகட்டத்தில்
வெவ்வேறு புத்தகங்களை வாசிப்பதால் அதைப் பற்றிய தீவிரமான உரையாடல்கள்
இல்லாமலாகிறது. அனைவருமே சில புத்தகங்களை பொதுவாக படித்திருந்தாலும் நினைவில்
இருந்து தான் அதை மீட்டெடுத்து அதைப் பற்றி சில கருத்துக்களை சொல்ல முடிகிறது.
ஆனால் நாம் அனைவரும் ஏதேனும் ஒரு புத்தகத்தை
தேர்வு செய்து கூட்டாக ஒரே சமயத்தில் வாசித்து, வாசித்துக் கொண்டிருக்கும் போதோ அல்லது முடித்த பின்போ அனைவரும் அது
குறித்து குறைந்தது ஐந்து பத்திகள் எழுதினால் அந்தப் புத்தகத்தை தெளிவாக உள்வாங்கிக் கொள்வதற்கும்
நம் மனதில் பகுத்து தொகுத்து நினைவில் நிறுத்திக் கொள்வதற்கும் உதவிகரமாக
இருக்கும். வாசித்துக்
கொண்டிருக்கும் பொழுது இது தொடர்பான வேறு புத்தகங்களையும் அல்லது வேறு
தகவல்களையும் நமக்குள் பரிமாறிக்கொள்வது நமது வாசிப்பை மேலும் செழுமை செய்யும்.
இந்த இணை வாசிப்பு திட்டத்தை அறிவிக்கிறேன். நாம் அனைவரும் ஒரு துவக்கம் முடிவு தேதிகளை
குறித்துக் கொள்வோம். குறைந்தபட்சம் 200 அதிகபட்சம் 400 பக்கங்களுக்குள் அடங்கக்கூடிய எளிதில் கிடைக்கக்கூடிய தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட அல்லது நேரடி தமிழில் உள்ள ஒரு
புத்தகத்தை தேர்வு செய்வோம். புனைவாகவோ அல்லது அபுனைவாகவோ இருக்கலாம்.
அவ்வாறு தேர்வு செய்த புத்தகத்தை குறித்து இடை இடையிலும் இறுதியாகவும் நாம் மின்னஞ்சல்
வழி உரையாடலாம். இதில் இணையும் நபர் வாசித்து முடித்தவுடன் குறைந்தது ஐந்து பத்திகள் அந்த புத்தகத்தை
பற்றி எழுத வேண்டும் என்பது கட்டாயம். வெறுமனே பார்வையாளனாக இருக்க இங்கு இணைய வேண்டாம். அவ்வாறு ஒரு புத்தகத்தைக் குறித்து அனைவரும் எழுதிய பின்னர் இந்த வலைப்பக்கத்தில் அவை தொகுக்கப்படும்.
இதில் இணைந்து கொள்பவர்கள் எனக்கு ஒரு தனி மடல் இடுக, தனிமடலில்
புத்தக சிபாரிசுகளையும் வரவேற்கிறேன்.
கிருஷ்ணன்
salyan.krishnan@gmail.com
No comments:
Post a Comment