Monday, December 2, 2019

கசார்களின் அகராதி - மிலோரட் பாவிக்




சந்திரசேகர் - ஈரோடு

கசார்களின் அகராதி நாவலலை படித்த முடித்த போது, முதிரா இரும்பு தாதுக்களை அடங்கிய செந்நிற பாறைகள் அடங்கிய கண்டிகோடா பள்ளதாக்கில் ஜெ கூறியது ஞாபகத்திற்கு வந்தது. ஒரு சிறந்த புகைப்படக்கலைஞன், ஒரு இடத்தை மற்றவர்கள் பார்க்காத கோணங்களை காட்சிப்படுத்துவான்.அது அந்த கலைஞனின் தனித்துவம் சார்ந்தது.  அது போல் இந்த நாவல் ஒரு இனம் அழிந்த அல்லது கரைந்த வரலாற்றை மூன்றுவித சமயங்கள் என்ற கண்ணாடி கொண்டு நமக்கு காட்சிப்படுத்துகிறார் மேலும் பல உப கண்ணடிகளையும் வாசகன் வசம் விட்டுவிடுகிறார், நூலாசிரியர் மிலோரத் பாவிச். உண்மை எப்பொழுதும் பல பக்கங்களையும் கோணங்களையும் உடையது.
முதல் வாசிப்பில் இந்த நாவல் பெரியதாக பிடி கிடைக்கவில்லை. முக்கியமாக கதாபாத்திரங்களின் பெயர்கள் நினைவில் வைக்க சிரமமாக இருந்தது. அப்புறம் நமக்கு அறிமுகமில்லாத தொன்மங்கள்.
ஒருவாறு இந்த நாவலை புரிதலுக்காக, கீழ்கண்டவாறு வரிசைப்படுத்திக்கொள்கிறேன்.

கசார்கள் 7 ஆம் நூற்றாண்யடிலிருந்து 10 ஆம் நூற்றாண்டு வரை  காஸ்பியன் கடலுக்கும் கருங்கடலுக்கும் இடையில் அமைந்த பகுதியில் வாழ்ந்த ஒரு இனம். இவர்கள் துருக்கிய மரபிலிருந்து வந்தவர்கள். அடிப்படையில் போர் மரபினர். கசார்களின் அரச மரபினரின் பெயர் காகன். இளவரசி அதே, இவள் பாதுகாக்கும் கனவு வேட்டையர்கள்.”கனவு வேட்டையரின் இலக்கென்பது ஒவ்வொரு விழிப்பும் கனவிலிருந்து விடுபடுதல்களின் ஒரு படிநிலை என்று புரிந்துகொள்வதுதான். அதன் மூலம் உண்மையான பகலை தேடுவான். இது ஒருவனை உணர்வு நிலையிலிருப்பதைக் காட்டிலும் அதிக விழப்புணர்வோடு வைத்திருக்கும்.”   8 ஆம் நூற்றாண்டு வாக்கில் ஒரு காகனுக்கு ஒரு கனவு வருகிறது. அந்த கனவுக்கான விடையை அவன் தேடுகிறான். தன் இனத்தில் அந்த தேடுதலை தொடங்கி நிறைவுறாமல் அப்போதிருந்த முக்கிய மதங்களில் தேடுகிறான். அந்த கனவுக்கான விளக்கமாக கசார் விவாதம் நடைபெறுகிறது. அதில் கான்ஸ்டன்டிநோபிளிலிருந்து கிருஸ்துவ அறிஞர்களும், பாரசீகத்திலிருந்து முஸ்லீம் அறிஞர்களும், யூத மதத்தினரும் கலந்து கொள்கிறார்கள். தற்போது கசார் இனம் இல்லாத சூழலில் ஒவ்வொரு மதத்தினரும் தன்னுடைய மதத்திற்கு மாறினார்கள் என வரலாற்றின் துணை கொண்டு நிறுவ முயற்சிக்கிறார்கள். கசார் பேருரைகளை அது நடந்த காலத்திலேயே அதில் கிருஸ்த்துவம் சார்பில் கலந்து கொண்ட சிரில் அவருடைய சகோதரரான  மெதோடியஸ் மூலம் ”கசார் பேருரைகள்” என கிரேக்க மொழியில் பதிவு செய்யப்படுகிறது. மேலும் கசார் விவாதத்தில் இஸ்லாமியத்தை பிரநிதித்த  .ஃபராவி இப்னு கோராலும் எபிரேயத்ததை பிரநிதித்த ஈசாக் சங்காரியாலும் பதிவு செய்யப்படுகிறது.

11 ஆம் நூற்றாண்டு வாக்கில் கசார் வரலாறு கவனிக்கப்படுகிறது.       அல்-பக்ரி என்ற ஸ்பானியர் கசார்களை பற்றி அரேபிய மொழியில் பதிவு செய்கிறார். கிட்ட தட்ட அதே காலத்தில எபிரேயத்தின் சார்பில் யூதா ஹவேலவியால் பதிவு செய்யப்படுகிறது. இவர் ஸ்பெயினின் முன்னனி மூன்று எபிரேயக் கவிஞர்களுள் ஒருவர். இவர் ஸ்வெயினின் மூரிஷில் விரிவான கல்வியை பெற்றவர்.

17 ஆம் நுாற்றாண்டில் கனவுகளால் துரத்தப்படுபவர்களான அவ்ரம் ப்ராங்கோவிச் (1651-1689), யூசுஃப் மசூதி (1651-1689), சாமுயேல் கோஹென் (1660-1689)  ஆகியவர்களால் கசார் வரலாறு தட்டியெழுப்படுகிறது. இவர்கள் முறையே கிருஸ்துவம், இஸ்லாம் மற்றும் யூத மதத்தை சார்ந்தவர்கள்.
நிகான் செவாஸ்ட் புனித நிக்கோலஸ் மடாலயத்தின் தலைமை படியெழுத்தாளர். இவருடைய உதவியாளராக இருந்தவர் பாதிரியார் தெயோஸ்டிஸ் நிகோல்ஸ்கி. இவர் தன்னுடைய மனனம் மூலம் சிவப்பு மற்றும் பச்சை பிரதிகளையும் மீட்டெக்கிறார். மேலும் எபிரேய பிரதியான மஞ்சள் புத்தகத்தை போர்களத்தில் கோஹனிடமிருந்து பெறுகிறார். இதை தாவுப்மன்னூஸ் என்ற பதிப்பாளிரின் வசம் ஒப்படைப்தன் மூலம் கசார்களின் வரலாற்றை புத்தகமாக பதிவு செய்வதில் முக்கிய பங்காற்றுகிறார்.

20ஆம் நூற்றாண்ட சேர்ந்தவர்கள் பேராசிரியர்கள் இசைலோ சூக், அபு கபீர் முவேவியா மற்றும் டோரத்தியா ஷீல்ட்ஸ். இவர்களின் மூலம் கசார்களின் வரலாறு மீண்டும் தட்டியெழுப்படுகிறது. இறுதியாக முனைவர் இசைலோ சூக் மற்றும் முனைவர் அபு சபீர் முவேவியா மர்மமான கொலையிலும்.  

அபு சபீர் முவெவியா கொலைகாரனை கண்டுபிடிக்கப்படாத நிலையிலும், இசைலோ சூக் கொலைக்காக தண்டனையை முனைவர் டோரத்தியா பெற்றும் நாவல் முடிவடைகிறது.

இந்த கொலைக்கான முடிச்சுகளை அவிழ்பதற்கு  மும்மதங்களின் நரகங்களிலிருந்து வந்த சாத்தான்களாக உருவகிக்கப்படும் நிகான்செவாஸ்ட் (கிருஸ்துவம்), யாபிர் இப்னு அகூஷானி (இஸ்லாம்),இப்ராசினியா லுகரேவிச் (யூதம்) ஆகியோரின் குறிப்புகளை படிப்பதன் மூலம் ஒரளவு தெளிவு கொள்ளலாம். (நிகான் செவாஸ் மீண்டும் 290 வருடங்களுக்கு பிறகு வருவதாக பதிவு செய்கிறார்.  அகூஷானியின் குறிப்புகளை பற்றிய இறுதியில் வரும் வருடமும் பெல்ஜியம் கடவுச் சீட்டும், இப்ராசினியாவனி் இரட்டை கட்டை விரல்)
”இளவரசி அதேயின் பகுதியில் வரும் விரைவான மற்றும் மந்தமான கண்ணாடி, விஷ காளானை் செடியை உண்ணும் மான், அவ்ரம் ப்ராங்கோவிசின் வளர்பு மகனான பெத்குதின் அவன் மனை கலினாவின் கதை, முனைவர் இசைலோ சூகி்ன் பகுதியில் வரும் முட்டை மற்றும் வயலின் வில்லின் கதை, கு என்ற பழத்தை பற்றிய விவரணை, ஆதம் ருஹானியின் கதை, குழந்தைகளின் மரணம் குறித்த கதை, பயணி மற்றும் பள்ளியை பற்றிய கதை. கோஹனினின் பகுதியில் வருமு் ஆதம் சத்மோனை பற்றிய குறிப்பு.” ஆகிய தொன்மங்கள் கசார் அகராதியை கசார் முரசோ(வெண்முரசு) கசார்புரமோ (விஷ்ணுபுரம்) என நினைவூட்டியது.

ஒரு எல்லையில் கசார்கள் வாழ்ந்த பகுதியை குறிப்பிடும் போது கசார்கள் பகுதி  என்பதை விட யூதர்கள் அல்லாத பகுதி, முஸ்லீம்கள் இல்லாத பகுதி, கிருஸ்த்துவர்கள் இல்லாத பகுதி என குறிப்பிட்டார்கள். அப்பொழுதே தங்கள் அடையாளத்தை இழப்பதன் மூலம் கசார் அழிய ஆரம்பித்துவிட்டார்களோ?

இந்த நாவல் வரலாற்றையும் புனைவையும் கலந்து கொடுக்கின்றது. புனைவு எங்கே தொடங்கியது என தெரியாமலும் நாவலை படைத்திருக்கிறார் நூலாசிரியர் மிலோரத் பாவிச்
இந்த நாவல் பலவிதமான கேள்விகளை எழுப்பிகிறது.
ஒரு இனம், மொழி, மதம்  போன்றவைகள் ஏன் அழிகின்றன?
ஏன் தொடருகின்றன?
இனத்திற்கும் மொழிக்குமான தொடர்பு என்ன?
மதத்திற்கும் மொழிக்குமான உறவு என்ன?
இனத்திற்கும் மதத்திற்கான தொடர்பு என்ன?
தொன்மங்களுக்கும் மொழிக்குமான தொடர்பு என்ன?
தேடலை இழக்கும் சமூகம் (அ) இனம் அழிகிறதா?
தேடலுக்கு பதிலளிக்காத சமூகம் அழிகிறதா?
என பல கேள்விகளை இந்த நாவல் எழுப்புகிறது.
செளந்தர்யலகரி விளக்க உரையின் முன்னுரையில் யதி குறிப்பிடுவார் ”தொன்மங்கள் ஒரு கலையின் விதைப் படுகைகள் போன்றதாகும்.” தொன்மங்களை இழக்கும் சமூகம் தன் மொழியை இழக்கும். மொழியை இழக்கும் சமூகம் தன் இலக்கியத்தை இழக்கும். இலக்கியத்தை இழக்கும் சமூகம் தன்னையே இழக்கும் அதுவே கசார்களுக்கு நடந்ததோ.
மிலோரத் பாவிச் கசார்களை பற்றிய ஒரு விதைநெல்லை தான் இந்த நாவலின் மூலம் விதைத்துள்ளாரோ?
நல்லதொரு வாசிப்பனுபவம். பரிந்துரைத்த நண்பர்களுக்கு நன்றி.

சந்திரசேகரன்.
ஈரோடு

****
செந்தில்குமார் – சென்னை

நாவல் என்பதற்கு அகராதியில் காணப்படும் எந்த ஒரு விளக்கத்திற்கும் உட்படாத நாவல் கசார்களின் அகராதி. 
ஒரு கதை அல்லது பிரச்சனையை மையமாக கொண்டு அதற்கான கதாபாத்திரங்களை உருவாக்கி அதன் வழியே கதையை/பிரச்சனையை ஒரு கோர்வையாக விவரிப்பது என்ற அறிந்த வடிவத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்ததால் பல பக்கங்களை தாண்டிய பிறகும் குழப்பத்துடனும், மிகவும் சிரமத்துடன் படிக்க வேண்டியதாக இருந்தது. பிறகு ஒரு வழியாக உள் நுழைந்தேன். இருப்பினும் நாவலை முழுமையாக புரிந்து கொண்டேன் என்று கூறமுடியாது. 

ஒரு கால கட்டத்தில் குறிப்பிட்ட பகுதியை செல்வாக்குடன் ஆட்சி செய்து வந்த ஓர் இனம் அல்லது குழு காலத்தின் கட்டாய சூழலால் தனது கலாச்சாரம், பண்பாடு, மொழி, என்று அனைத்து அடையாளங்களையும் மற்றொரு மதத்திற்கு மாறுவதன் மூலம் இழந்து, கரைந்தது.

இந்த ஒரு வரி உண்மையை விளக்குவதற்கு அந்த இனத்தின் அரசன் கனவு காண்பது போலவும் அந்தக் கனவில் வரக்கூடிய விஷயங்களை விளக்குவதற்காக மூன்று மதத்தில் இருந்த முக்கியமான ஆளுமைகளை வரவழைத்து அதற்கான விளக்கங்களை கேட்பதாகவும், கூறப்படும் பதில்களின் அடிப்படையில் நிறைவாகவும், சிறந்தது என்று கருதும் மதத்தை அந்த இனம் முழுவதும் ஏற்றுக்கொண்டது  என்பது ஒரு நாவலுக்கு உரிய நல்ல கருதான். 
இதை அடிப்படையாகக் கொண்டு  கசார்களின் இனத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கு கனவுகளில் வரும் கதைகளில் அவர்களின் தொன்மங்களை விவரிப்பதும், கனவை விளக்குவதற்காக வரும் ஞானிகள் அதன் மூலம் தங்கள் மதங்களின் சிறப்புகளை விபரிப்பதும் நல்ல உத்தி.

ஆனாலும் நாம் அறிந்த உலகத்தையும் அல்லது மாய கற்பனை ஆயினும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு உலகத்தையும் இந்நாவல் முன்வைக்கவில்லை. 
இந்த நாவலின் மூலம் எனக்கு எழுந்த முக்கிய கேள்வி எதற்காக மனிதர்களுக்கு இத்தனை கதைகள் தேவைப்படுகின்றன? தொல்காலத்திலிருந்து இன்றுவரை மனிதனுக்குள் புழங்கிய கதைகள் கணக்கிலடங்காதவை. பரிணாமத்தில் மனிதன் தன் வாழ்வை மேலும் மேம்படுத்தவும் நிறைவு செய்வதற்கும் தேடலையும், கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்துகிறான். இறந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கு இடையேயான பெரும் அகலியை கதைகள் போட்டு நிரப்புகிறான்.

 தன்னால் புரிந்துகொள்ள முடியாத விசித்திரங்களை அல்லது குறியீட்டு ரீதியாக இருண்ட பகுதிகளை விளக்குவதற்கு பேய் சாத்தான் மற்றும் இன்னும் பல விந்தையான, பயங்கரமான விஷயங்களை கதைக்குள் கூறுகிறான் என்று தான் இன்று வரை நான் நம்பிக் கொண்டிருக்கிறேன் ஆனால் இந்த மாதிரியான நாவலை படிக்கும் பொழுது வெறும் தான் புரிந்துகொள்ளமுடியாத விஷயத்தை விளக்குவதற்கு அல்லது குறியீட்டு ரீதியில் சொல்வதற்கு, நம் பகுத்தறிவுக்கு உட்படாத இப்படி ஒரு மாபெரும் விந்தையான உலகத்தை எதற்காக கதைக்குள் கொண்டு வருகிறான் என்ற கேள்வி ஆழமாக எனக்குள் எழுகிறது. 
உண்மையில் என் சிற்றறிவு அறிய முடியாத வேறு ஒரு மாய உலகம் இருக்குமோ என்ற பயமும் பற்றிக்கொள்கிறது. இதை வலுசேர்க்கும் விதமாக ராஜமாணிக்கம் போன்ற நண்பர்கள், மனிதனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ஏதோ ஒன்று நம் கண்ணுக்குத் தெரியாமல் இந்த உலகத்தில் உலவி வருவதாக உறுதியாக  நம்புகிறார்கள். மேலும் சமீபமாக ஜெயமோகனும் ஆன்மா,  மறுபிறப்பு போன்றவற்றில் தனக்கு நம்பிக்கை இருப்பதாக கூறுகிறார். 

எதுவாகினும் மனிதனின் பரிணாம வளர்ச்சியில் கதைகளுக்கு ஒரு மாபெரும் பங்கு இருப்பதை யாரும் மறுக்க முடியாது. 

பின்னிணைப்பு:
ஒரு மொத்த இனத்தின் எதிர்காலமும் அரசனின் கனவில் அமைந்துள்ளது என்ற நிலையிலிருந்து இன்று அரசன் என்ன செய்ய வேண்டும் என்பதே ஒரு தனி மனிதனின் கையில் உள்ளது என்ற மாற்றம் ஜனநாயகத்தின் மாபெரும் வெற்றி. 

செந்தில்குமார்

******
சுசில்குமார் – கோவை

நண்பர்களுக்கு வணக்கம், 
                                                          கசார்களின் அகராதி வாசிப்பு கிட்டத்தட்ட ஒரு சமூகவியல் ஆராய்ச்சி மாதிரி நடந்து முடிந்திருக்கிறது. புத்தகம் குறித்த இணையத்தேடல்கள் முதலே தொற்றிக்கொண்ட ஆர்வம் புத்தகம் வாசித்து முடியும் வரையும், இப்போது அதைப்பற்றி எழுதும்போதும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

இப்போதும், மிக நுணுக்கமாக திட்டமிட்டு எழுதப்பட்ட ஒரு புனைவை மட்டுமே வாசித்திருக்கிறோமா இல்லை இப்புனைவின் ஊடாக பின்னப்பட்டிருக்கும் வரலாறல்லாத வரலாறு எந்த அளவுக்கு உண்மையாக இருக்கும் என்ற சிந்தனை ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆசிரியரின் முதல் முழு நீள புதினம் இது! நூலின் வடிவம், அதன் பின் மறைந்துள்ள யதார்த்தம், தத்துவம், மாய எதார்த்தம், மதம் மனிதம் குறித்த விவாதங்கள், இதற்கெனவே மெனக்கெட்டு உருவாக்கப்பட்ட நிலப்பரப்பு, அதில் வாழும் நிஜ மற்றும் கற்பனைக் கதாப்பாத்திரங்கள் என நூல் முழுவதும் வாசகனை நூலுடன் கட்டிப்போடும் நுணுக்கங்கள் அற்புதம்.
காகனின் கனவைக் குறித்த விவாதத்தை விளக்கும் மூன்று மதங்களைச் சார்ந்த தத்துவவாதிகளின் வழியாக தான் தொட்டுச்செல்லக்கூடிய எல்லைகள் அனைத்தையும் ஊடுருவி ஒரு விளையாட்டை ஆடிப் பார்க்கிறார் மிலோராத் பாவிச். இதில் வரலாற்று நிகழ்வுகளை பிணைத்திருக்கும் விதம் அருமை.
 படைத்தவர் உன் எண்ணங்களினால் மகிழ்வுற்றிருந்தாலும் உன் செயல்கள் குறித்து மகிழ்வுற்றிருக்கவில்லைஎன்கிற கனவு வாக்கியத்தைக் குறித்த விவாதங்களும், அதை நிரூபிக்கும் விதமாக நிகழும் இறந்த, நிகழ் மற்றும் எதிர்கால சம்பவங்களும் இப்புதினத்தை நடத்திச் செல்லும் சரடு.
அங்கங்கே சிதறிவிடப் பட்டிருக்கும் தத்துவங்களும், கவிதைகளும் வாசிப்பின் போது வியப்பளித்தன. ஒற்றை நாசித்துவாரம் கொண்டவனும் கொண்டவளும், எழுத்துக்களுடன் உயிரைப் பிணைத்து வாழ்பவளும், வாள் சுழற்சியால் தன்னைச் சுற்றி ஒரு கூண்டினை அமைத்துக்கொள்ளும் அவெர்கி ஸ்கீலாவும், அவ்ரம் ப்ரங்கோவிச்சின் வாழ்வு மூன்று புத்தகங்களிலும் இணைக்கப்பட்ட விதமும், கசார்களை உயிர்த்தெழச் செய்த தாவுப்மன்னூஸ் மற்றும் வரலாற்றில் கசார்களுடன் தொடர்புடைய சிரிலும் மெத்தொடியசும், இறுதியில் கொல்லப்படும் முனைவர் முவேவியா மற்றும் கொலைக் குற்றத்திற்குள்ளாகும் முனைவர் டோரத்தியா, சங்கிலித் தொடரின் கடைசித் துண்டாக சாக்கலேட் பாலருந்தி புதிரை அவிழ்த்த சிறுவனும் இன்னும் பல நிகழ்வுகளும் கதாப்பாத்திரங்களும் புனைவின் அற்புத அனுபவங்கள்தான். என்றாலும், தொடர்ந்த தேடலையும் நினைவில் வைத்தலையும் கோருவதால் பல இடங்களில் சலிப்பையும் ஏற்படுத்துகிறது இப்படைப்பு.
ஒருவனுடைய கனவில் இன்னொருவன் வாழ்வதும், ஒரு கனவில் இறந்துபடுபவன் நிஜத்தில் விழிக்காமல் போவதும், கனவுகளுக்குள் சென்று நினைவுகளை மாற்றி எழுதும் கனவு வேட்டையரும், தொடர்ந்து அலைக்கழிப்பில் ஆழ்த்தும் கனவுகளுமாக இப்புத்தகம் கனவு, நிஜம், இறப்பு குறித்து நிறைய அலசிச் செல்கிறது. கிறிஸ்டோபர் நோலனையும் கோணங்கியின் பிதிராவையும் அடிக்கடி நினைவில் கொண்டுவந்தது இந்நாவல்.   
மூன்று புத்தகங்களிலும் அந்தந்த மதத்தைச் சார்ந்த அறிஞர்கள் காகனின் கனவை விளக்கும் முயற்சியில் ஆசிரியர் புதுப் புது கதாப்பாத்திரங்களின் கதைகளுக்குள் நம்மை இழுத்துச் செல்கிறார். அங்கங்கே அவற்றின் தொடர்பு நமக்கு நினைவுக்கு வந்தாலும், பல இடங்கள் குழப்பமூட்டின.
இப்படியொரு நாவலை ஆசிரியர் ஏன் எழுத முனைந்திருப்பார் என்ற கேள்வி தொடர்ந்து இருந்தது. ஒரு மிகப்பெரிய மக்கள் குழு தங்கள் நிலப்பரப்பில் இருந்து வெளியேறி சிதைந்து வரலாற்றில் இல்லாமல் போவதற்கு என்னென்ன காரணங்கள் இருக்க முடியும்? மொழியை இழப்பது, கலாச்சாரத்தில் ஏற்படும் திரிபுகள், அச்சமூகத்தின் ஆண் மற்றும் பெண் சார்ந்த மூட நம்பிக்கைகளும் பழக்கங்களும், அச்சமூகத்தில் நிலையாக இல்லாத ஒரு வழிபாட்டு முறை, எல்லாவற்றிற்கும் மேலாக அதை வழிநடத்தும் தலைமையின் கனவுகள் மற்றும் அதைச் சார்ந்த பிழைகளும் தான் என்பதை இந்நாவல் பதிவு செய்கிறது. ஆசிரியரின் வெற்றியே வாசகனை கசார் இனம் குறித்து வாழ்நாள் முழுதும் நினைவில் வைத்திருக்கச் செய்வதும், மேலும் தொடர்ந்து அது குறித்து தேடச் செய்வதும்தான். 

நன்றி!
 
with regards, 
Sushil Kumar K.G

***** 

நவீன் GSSV

கசார்களின் அகராதி
2018 ஊட்டி காவிய முகாமில் கவிதை விவாதத்தில் லட்சுமி மணிவண்ணன் ஒன்று கூறினார். கவிதையுள்ள எல்லாம் சொல்லி முடித்த பின் மேலும் என்ன? (what's next) என்று கேள்வி எழுப்பும் போது அங்கே ஒன்று மேலெழுந்து வர வேண்டும் அப்போது தான் அது நல்ல கவிதை என்று. இந்நாவலை முடித்தவுடன் எனக்கும் அதே கேள்வியே எழுந்தது. இந்நாவலை பற்றிய என் தரப்புகளை அல்லது புரிதல்களை பின் வருமாறு விளக்கிக் கொள்ள முயற்சிக்கிறேன்.
வடிவியல் சோதனை:
சோதனை முயற்சி நாவல்களுக்கு (Experimental Novel) எப்போதுமே ஒரு பாங்கு உண்டு. நான் இதுவரை சொல்லப்படாத ஒன்று இதுவரை சொல்லிடாத கோணத்தில் சொல்ல போகிறேன் என்ற அறைகூவலுடனே அது வெளிவரும். அந்த தன்மையாலேயே சில காலத்திற்கு நிலைத்து நிற்கும். ஆனால் அதை தக்கவைத்து கொள்வதும், நீடித்து நிலைப்பதும் அதன் வடிவியல் முயற்சியில் இல்லை கதை கொண்ட ஆழத்தால் என்பது காலம் கடந்த பின்பு அது கொள்ளும் கனத்தாலேயே தெரிய வரும்.
விதவிதமான வடிவியல் சோதனைகள் நடந்துள்ளன, உதாரணமாக நாம் இவ்வாண்டு ஊட்டி காவிய முகாமில் விவாதித்த சைன்ஸ் அண்ட் சிம்பல்ஸ் சிறுகதையை சொல்லலாம். அக்கதையில் பயின்று வரும் குறியீடு தன்மைகள் எவ்வகையிலும் கதையை தாங்கி செல்லாது என்பதை ஜெ விளக்கினார்.
என்ர்ஸ்ட் விண்செண்ட் ரைட்(Ernesh Vincent Wright) என்ற பிரெஞ்ச் நாவலாசிரியர் எழுதிய கெட்சிபை(Gadsby) என்ற நாவலையும் இங்கே குறிப்பிடலாம். இந்த நாவல் முழுவதும் ஆங்கில வார்த்தையான ‘E’ உள்ள சொற்கள் இடம் பெறாமல் எழுதப்பட்டுள்ளது.
இதே போல் எண்ணற்ற நாவல்கள் வடிவ சோதனை முயற்சி என்ற பெயரில் அந்த முயற்சிக்கான எந்த அர்த்தத்தையும் விளைவிக்காமல் வெறுமனே பெயருக்காக செய்யப்படும் சோதனை முயற்சிகளாக நம் முன் இப்போது தேங்கிக் கிடக்கின்றன.
அந்த வகையில் கசார்களின் அகராதி பாராட்டுவதற்குரிய வடிவியல் சோதனை முயற்சி நாவல்களின் வரிசையில் ஒன்று என்பதே என் துணிபு. குறைந்தபட்சம் ஒரு முட்டாள்தனமான விளையாட்டை நம்முடன் விளையாடாமல் ஒரு அகராதியை ஒத்த நாவலை எழுத முயற்சித்திருப்பது பாராட்டுக்குரிய விஷயமே. ஆனால் அதைத் தாண்டி இதன் செவ்வியல் தன்மை என்பது உலக செவ்வியல்களின் வரிசையில் வைத்துப் பார்க்கும் போது மிகவும் பிந்திய நாவல் கசார்களின் அகராதி.
வரலாற்று மறுப்பு:
ஜெயமோகன் ஒரு கட்டுரையில் செவ்வியல் நாவலுக்கான இயல்புகளைக் குறிப்பிடும் போது இரண்டு விஷயங்களை முன் வைக்கிறார். அவை ‘முழுமை’ மற்றும் ‘சமநிலை’. இங்கே முழுமை என அவர் குறிப்பிடுவது வாழ்வையும், வரலாற்றையும் புனைவின் மூலம் முழுமையாக சொல்லிசெல்வது. அவர் ஆகவே நாவலாசிரியனுக்கு வரலாற்றுப் பிரக்ஞை மிக முக்கியம் எனக் குறிப்பிடுகிறார்.
ஆனால் அதனோடு சேர்ந்த வாழ்வையும் சொல்ல முயல்வதே ஒரு நல்ல இலக்கிய நாவலுக்கான அழகு என நினைக்கிறேன். இதனைக் கருத்தில் கொண்டு யோசிக்கும் போது கசார்களின் அகராதியின் இடம் நமக்கு தெளிவாக புலப்படும்.
உதாரணமாக, இதற்கு முன் குறிப்பு எழுதிய சந்தரசேகர், கசார்களின் வரலாறு பிண்ணனியை அதன் அரசர்கள், கசார் விவாதம் நடந்த காலம் அவற்றை குறித்த மும்மதங்களிலும் இருக்கும் தரவுகள் என புத்தகம் கூறு வரலாற்றை தனி தனியாக பகுத்துக் கூறுகிறார். ஆனால் நாவல் கூறும் வாழ்க்கை முழுமையை பற்றி ஒரு வரிக் கூட ஒரு நாவலிலிருந்து எழுந்து வர முடியவில்லை என்பதே இதனை இரண்டாம் நிலைக்கு தள்ளுகிறது.
இங்க நான் வாழ்வோடு ஒன்றுதலை இப்படி வரையறை செய்கிறேன். இன்று நாம் வாசித்துக் கொண்டிருக்கும் வெண்முரசு நம் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தை யோசித்துப் பார்க்கலாம் கர்ணன்னும், சல்லியனும் நமக்கு என்ன உறவென்ன நாம் அறிவோம். அர்ச்சுணனும், அஸ்வதாமனும் இன்னும் அக்கம், பக்கம் வீட்டிலுள்ள பிள்ளைகளாய் சண்டைப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு அடுத்த போர்ஷன் பீஷ்மருக்கு என நம்மோடு ஒட்டிய நாவல்கள் மட்டும் நம்மோடு பயணிக்கும் என்பது என் எண்ணம்.
இதனை இவ்வாறு விளக்கிக் கொள்கிறேன், நீலம் நாவலை எடுத்துக் கொள்வோம். அது கொண்ட கவித்துவ நடை முதன்மையானது, அது நம்மோடு பேசும் கதை முதன்மையானது. கிருஷ்ணனும், கம்சனும் நம்மோடு ஒன்றுவது முதன்மையானது. ராதையின் பித்துநிலை நாம் நாளுக்கு ஒருவரைக் காணும் போது ஏற்படும் ஒப்புமையாலேயே மேலோங்குவது. இவை அனைத்து தவிர்த்து விட்டுவிட்டு நீலம் வசிஷ்ட்டாத்வைதம் மட்டும் பேசுவதாக வைத்துக் கொள்வோம். அந்நாவல் வசிஷ்ட்டாத்வைதம் பேசத் துணிவதால் மட்டுமே அதனை ஒரு செவ்வியல் நாவல் வரிசையில் கொண்டு அமர்த்த மாட்டோம். இங்கே கசார்களின் அகராதி வரலாற்றைப் புனைவால் ஓர் அகராதி வடிவில் கூறுவதால் மட்டுமே ஒரு செவ்வியல் தன்மையைப் பெற்றுவிடாது என்பதே என் புரிதல்.
தொன்மங்களின் பின்னணி:
கசார்களின் தொன்மம் புரியாததால் எனக்கு இந்நாவலில் சொல்லப்படும் தொன்மங்களும், கதைகளும் ஒட்டாமல் சென்றதா எனக் கேள்வி எழுப்பினால். அதற்கும் இல்லை என்றே பதில் சொல்வேன். தஸ்தோவஸ்கியின் குற்றமும், தண்டனையும் படிக்கும் போது எனக்கு எவ்வித மேற்கத்திய தத்துவ அறிதலோ, அவை குறித்த குறைந்தபட்ச பின்புல அறிவோ இல்லாத நாட்களில் வாசித்த நாவல் ஆனால் இன்றளவும் ரஸ்கால்நிகாவ் என்னுடன் பயணம் செய்துக் கொண்டிருக்கிறான். அதனினுள்ள ஒவ்வொரு பாத்திரங்களும் இன்று வரை என்னோடு பயணம் செய்பவைகளே ஆனால் நேற்று வாசித்த கசார்களின் அகராதி மனிதர்கள் வெறும் பெயரளவில் மட்டுமே என்னோடு ஒட்டிச் செல்கின்றனர். அதே’, காகன் போன்று நாவல் முழுதும் தொடரும் கதாப்பாத்திரங்கள் குட்டி குட்டி தகவல்களோடே நினைவில் நின்று செல்கின்றனர்.
உதாரணமாக, அதே’ கதாப்பாத்திரம் கொள்ளும் முயற்சிகளான கண்களில் விஷ எழுத்துகளை மாட்டிக் கொண்டு தூங்குவது, காகன் தன் இணையை உருவகித்தபின் அவனைக் கொல்லச் சொல்லி உத்தரவிட்ட பின் அவன் கிரேக்கர்களோடு இணைவது போன்ற வரலாற்றுத் தகவல்களைப் புனையும் பின் புலத்தில் மட்டுமே கொண்டு அணுக முடிகிறதே தவிர. வாழ்வோடு ஒன்றுதல் (connect with the life) என்ற தன்மை நாவல் இடம்பெறவில்லை என்பதே முற்றும் உண்மை.
மேலும் இத்தகைய சோதனை முயற்சி நாவல்களுக்கு நாம் எவ்வித முக்கியத்துவமும் படித்த மாத்திரத்தில் கொடுத்துவிட வேண்டாம். நாட்கள் கடந்தும் இந்நாவல் வெறும் செய்தியாக நம்மோடு பயணிக்காமல் ஆழ்ந்த கேள்விகளை நம்முள் எழுப்புமாயின் அப்போது என் கருத்தை மாற்ற நான் விழைகிறேன். ஆனால் அவை நடக்காது என்பது தான் அறிதல்.

நன்றி,
நவின்.ஜி.எஸ்.எஸ்.வி.

****
கல்பனா ஜெயகாந்தன்

நண்பர்களுக்கு,
     ’Dictionary of the Khazars’ என்ற இந்த புத்தகத்தின் பெண் பிரதியை நான் ஆங்கிலத்தில் வாசித்தேன். Milorad Pavic  என்ற ஸெர்பியர் எழுதிய புதினம் இது. ‘புதினம்’ என்ற சொல்லுக்கு முழு நியாயம் செய்திருக்கிறது இந்த நாவல்.
   முற்றிலும் புதிய வடிவத்தைக் கொண்டிருக்கிறது இந்த நாவல். நாவலின் முக்கியமான பாத்திரங்கள் மற்றும் சம்பவங்கள் அகர வரிசையில் அடுக்கப்பட்டுள்ளன.  எந்த மொழியில் மொழிபெயர்க்கப்படுகிறதோ அந்த மொழியின் அகர வரிசைக்கேற்ப இந்த வரிசை மாறட்டும் என்கிறார் ஆசிரியர். முற்றிலும் fluid-ஆன ஒரு structure-ஐக் கொண்டிருக்கிறது இந்த நாவல்.
     மேலும் Red book, Green book, Yellow book என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது இந்த நாவல். ‘Khazar Polemic’ என்ற ஒரு மைய சம்பவத்தை கிறஸ்தவர்கள், முஸ்லீம்கள் மற்றும் யூதர்கள் அவரவருக்கு உகந்த வகையில் சித்தரிக்கிறார்கள். இது அடுத்த ‘level of fluidity’. இதுகாறும் வரலாறுகள் யாவும் இங்கனமே எழுதப்படுகின்றன அல்லவா?

      ஆசிரியர் காலங்காலமாக புத்தகம் எழுதுவதற்கான கற்பனைத்திறன் எழுதுபவருக்கான பொறுப்பாக இருக்கிறது, அது வாசிப்பவருக்குமாக மாற வேண்டும் என்பதால் இந்த புத்தகத்தை இங்கனம் எழுதியதாக கூறுகிறார்.

     கலைக்கப்பட்ட சீட்டுக் கட்டைப் போல   சிதறிக் கிடக்கும் சீட்டுகளை அடுக்கி அவரவருக்கான ரம்மியை சேர்ப்பது வாசகரின் கற்பனைத்திறனுக்கு விடப்பட்டுள்ளது. இந்த நாவல் ஒவ்வொரு வாசகருக்கும் புதிய வாசிப்பனுபவத்தை அளிக்க வல்லது.

     ஒரு சிற்பத்தையோ ஓவியத்தையோ பார்க்கும் போது அதை வெவ்வேறு கோணங்களிலிருந்து பார்க்கலாம்.  சுற்றி வந்தும் பார்க்கலாம். முற்றிலும் non-linear வடிவங்கள் அவை. ஆனால் இசையும் இலக்கியமும் மட்டும் linear-ஆன வடிவங்கள். ஏன் அப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பதிலாக இப்புதினத்தை படைத்திருக்கிறார் ஆசிரியர்.  இந்த புதினத்தை எங்கு தொடங்கியும் எப்படியும் வாசிக்கலாம். நானும் முதல் 75 பக்கங்களை நேராகவும் பின்னர் அடுத்த 75 பக்கங்களை பின்னாலிருந்தும் வாசித்தேன்.  உண்மையில் இந்த முறை novel-ஐ மேலும் assimilate செய்து கொள்ள எனக்கு உதவியது. 

     அடுத்ததாக என்னை மிகவும் கவர்ந்தது இதன் மாயத்தன்மை.
‘Here lies the reader
Who will never open this book
He is here forever dead’.
என்ற வரிகளில் ஆரம்பிருக்கிறது இந்த நாவல். இந்நாவலை விடாமல் படித்து முடிக்க வைத்தது இந்த மாயத்தன்மை.

    புத்தகத்தின் முன்னுரையில் இந்த புத்தகத்தின் அனைத்து கைப்பிரதிகளும் இரண்டைத் தவிர அழிக்கப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.  அந்த இரண்டிலும் ஒன்று poisoned ivy ink-ல் எழுதப்பட்டதாகவும், அதை வாசிப்பவர் தொடர்ந்து 9 பக்கங்கள் வாசித்தால் , ஒன்பதாவது பக்கத்தின் ஒரு குறிப்பிட்ட வரியை வாசிக்கும் போது இறந்து விடுவார் என்பதும் மிகுந்த சுவாரஸ்யமான எச்சரிக்கையாக இருந்தது. இந்த நாவலின் மாயத்தன்மையை இந்த எச்சரிக்கை பல மடங்கு கூட்டி விடுகிறது. இந்தப் புத்தகத்தை இந்தக் குழுமத்தில் பரிந்துரைத்தவரைப் பார்த்து-என்னா ஒரு வில்லத்தனம் என்று கேட்க வேண்டும் போல் இருந்தது:)). நான் வாசித்தது pdf என்பதாலும், என் gadget-ல் என்பதாலும் மட்டுமே மேலும் வாசித்தேன்:)).

   இப்புதினத்தில் என்னை மேலும் கவர்ந்தது, வரிக்கு வரி கண்ணி வெடிகளை போல் ஒளிந்துள்ள கவிதைத் தன்மை.  பல வரிகளை என் குடும்பத்தாரிடம் பகிர்ந்து கொண்டேன். உதாரணத்திற்கு சில வரிகள்.
1. Eye is the target of all objects.
2.  It is only an illusion that our thoughts are in our heads.  Our heads and we as a whole are in our thoughts. Thought is the sea- body is the current in the sea. Body makes room for itself in the world by forging through thoughts.
3. Silence was one hour’s walk long and two hours’ walk wide.
4. Humans have separated body from passion. For here below(in the dream) passion and the body are indistinguishable.
5. Meat of smart fish is harmful and tougher than that of stupid fish. Stupid eat both the stupid and the smart, whereas the smart pick and choose the stupid.
6. When two persons dream each other and one’s dream builds the other’s reality, a small part of the dream is always left over-these are ’children of the dream’
7. Dream is shorter than reality and is deeper than reality. So there is some left over that cannot completely fit into the reality of the person but spills into the reality of a third person.  The 3rd person who thereby becomes a sort of hermaphrodite who leans towards one dreamer one moment and the other dreamer the next.
   என்ன ஒரு கற்பனை. இந்த கட்டற்ற கற்பனையே இந்நாவலின் தனித்தன்மை.  சில சமயங்களில் ஆசிரியர் delirious-ஆக இருக்கிறாரோ என்று எண்ணும் அளவுக்கு கட்டற்றதாக இருக்கிறது இந்த நாவல். ‘Creativity unleashed’ என்ற சொற்களே மனதில் சுற்றிக் கொண்டிருந்தன. பாவிச் இயல்பில் ஒரு கவிஞர் என்பதும் காரணமாக இருக்கலாம்.

   இந்த நாவல் ஆண் பிரதி மற்றும் பெண் பிரதியாகக் கிடைக்கிறது.வெறும் 7 வரிகள் மட்டுமே இரண்டிலும் வேறு வேறாக இருக்கின்றன. ஒரு jigsaw puzzle-ஐப் போல இரண்டையும் இணைத்து வாசித்தால் நாவல் திறந்து கொள்ளும் என்கிறார் ஆசிரியர்.

    ஆண் பிரதியில் Muawia தரும் அந்த pile of papers-ஐப் பார்க்கும் Dr. Scultz, Muawia-வின் விரல் நகங்களைப் பார்க்கிறார். Halevi யின் ‘மரம்’ என்ற குறியீட்டை நினைத்துக் கொள்கிறார். ஆம், இது இங்கனம் தான் இருக்க முடியும் என்று பரவசத்துடன் எங்கு கிடைத்தன இவை என்று Muawia-வைக் கேட்கிறார்.

     பெண் பிரதியில்- அவர்கள் இருவரின் விரல் நுனிகள் தொட்டுக் கொள்வதாகவும், தன் இறந்த காலமும் எதிர் காலமும் தொட்டுக் கொள்வதைப் போல் உணர்ந்ததாகவும், அந்த pile of papers-ஐப் படிக்கும் போது நூற்றாண்டுகளின் ஊடாக ஒரு பயணம் செய்ய ஆரம்பித்தவர் அல்ல பயணம் முடித்து வந்தவர் என்றும் கூறி Dr. Schultz, இவை எங்கு கிடைத்தன என்று கேட்டு மேற்கொண்டு உரையாடலைத் தொடர்வதாக வருகிறது.

    இவையிரண்டும் எப்படி ஒன்றோடொன்று பொருந்துகின்றன என்று என் சிற்றறிவுக்கு எட்டவில்லை :)).
மனதிலேயே ஊறி ஊறி எப்போதாவது மின்னல் அடிக்கலாம்.
சில முக்கிய புள்ளிகள்:
1. Ateh, Kaghan, Khazar polemic, khazars பற்றி மூன்று புத்தகங்களிலும் தரப்பட்டுள்ளது.
2. Polemic-ல் கலந்து கொண்டவர்கள்- Cyril, Sangari, Ibn Kora.
3. அவர்களின் விவாதத்தைத் தொகுத்தவர்கள்- Methodius. Halevi, Al-Bakri.
4. பதினேழாம் நூற்றாண்டில் அந்த அகராதியைப் பின்தொடர்ந்தவர்கள் Brankovich, Cohen, Masudi
5. 20-ம் நூற்றாண்டில் இவர்களின் மறுபிறப்பாக வந்து அகராதியை பின் தொடர்ந்தவர்கள் Suk, Schultz, Muawia.
6. சாத்தான்களாக இந்த தொகுப்பு உருவாவதைத் தடுப்பவர்கள்-Sevast, Ephrosinia Lukarevich, Akshany.
இந்தப் புள்ளிகள் நாவலைத் தொகுத்துக் கொள்வதில் உதவலாம். இவர்களின் வாழ்வும், இறப்பும் ஒன்றே போல் இருப்பதும், காலத்தால் பின்னால் கேட்கக் கூடிய சொற்றொடர்கள் முன்னாலேயே கேட்பதும், முன்னாட்களிலிருந்து கையளிக்கப்பட்ட சொற்றொடர்கள் புது வெளிச்சத்தைத் தருவதமாக வினோதமான நிகழ்வுகள் இவர்களை நூற்றாண்டுகளின் ஊடாக இணைக்கின்றன.
   Non-linear-ஆன ஒரு படைப்பை linear-ஆக்கி புரிந்து கொள்வதிலேயே நம் மனம் கவனம் செலுத்துகிறது என்பதை ஒரு புன்னகையோடு அறிகிறேன்.
   Dr. Scultz தன் இளமை உருவுக்கு எழுதும் கடிதங்கள் கவித்துவத்தின் உச்சம்.
   Ateh மீண்டும் மீண்டும் தன் காதலனான Mukaddasa Al  Safer-க்கு தன் அறையின் சாவியை அனுப்பிக் கொண்டிருக்கிறாள்.
   Suk, October 2 1982-ல் expire ஆகும் முட்டையை October 8 1982-ல் தன்னைக் காப்பாற்ற அழைக்கிறார்.
   இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். கடைசியாக சந்திரசேகரன் சாரின் கேள்விகளுக்கான என் பதில்கள்:
1.முஸ்தாக்கின் காலம் 17ஆம் நூற்றாண்டு தான். அச்சுப் பிழை என்று தான் நினைக்கிறேன். ஆனால் ஆங்கில வடிவத்திலும் அதே பிழையைச் செய்வார்களா என்ன?
2. “Our false victim saved our lives” என்பதே அந்த வரி. Suk-ஐ கொன்றதாக alibi கொடுத்ததினால் தான் Dr.Schultz, premeditated murder என்னும் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்கிறார். அதனால் வெறும் 6 ஆண்டுகள் தான் அவர் தண்டனைக் காலம். அவர் வெகு நாட்களாகவே Muawia-வைக் கொல்வதாக உறுதி பூண்டிருக்கிறார். துப்பாக்கியையும் அதற்காகவே கொண்டு வந்தார்.  ஆனால் தவறுதலாக ஸுக்கை அவர் கொன்றார் என்று ஒப்புக் கொள்கிறார். அதுவே அவ்வரியின் பொருள் என்று எண்ணுகிறேன்.
Engrossing novel.

நன்றி,
கல்பனா ஜெயகாந்த்.

***** 

அழகிய மணவாளன்
1.கூண்டில் அடைத்து கொல்லப்பட்ட தன் (கள்ளக்)காதலன் மொகதஸா அல் சபீருக்கு 
இளவரசி அடே தன் கனவு வழியாக தங்க நாணயத்தைகொண்ட தன் படுக்கையறையின் 
சாவியை அனுப்புக்கொண்டே இருக்கிறாள். மொகதஸா அல் சபீரும் ஆமை ஓடுகளில் தன் 
பற்களால் எழுதி அனுப்புகிறான். ஆனால் இருவருக்குமே மற்றவரின் செய்தி கிடைக்கவில்லை. 
நிறைவேறாத ஆன்மாக்களாக அவர்கள் நூற்றாண்டுகளாக வேறு வேறு மனிதர்கள் வழியாக 
தங்களின் சென்றுசேராத காதல் சின்னங்களை அனுப்பியபடியே இருக்கிறார்கள்.    
           ஸ்பானியனான அல்-பக்கரியாக, சாமுவேல் கோஹனாக மொகதஸா அல் சபீர் 
இளவரசி அடேவை தேடியபடியே இருக்கிறார். மறுமுனையில் அடேயும் தன் காதலனுக்கு 
கனவில் சாவியை அனுப்பிக்கொண்டே இருக்கிறாள். கடைசியாக, 20ம் நூற்றாண்டைச் சேர்ந்த 
பேராசிரியர் ஐசலோ சுக் ஒரு நாள் தன் படுக்கையிலிருந்து விழித்துக்கொள்ளும்போது தன் 
வாயிலிருந்து ஒரு தங்க நாணயத்தை பிடியாகக்கொண்ட சாவியை வெளியில் எடுக்கிறார்.
      2. அவ்ராம் பிராங்கோவிச்சின் இறப்பை கனவுகாணும் கோஹனின் கனவை யூஸூப் 
மஸூதி அறிகிறான். அந்த கனவில் அவ்ராம் ப்ராங்கோவிச் இறப்பது தன்னுடைய இறப்பையல்ல. 
தன் மைந்தன் க்ரூகரின் இறப்பை. கூடவே தலையணையால் அழுத்திக் எதிர்காலத்தில் 
கொல்லப்படப்போகும் பாதிஉடைத்த முட்டையுடன் பேராசிரியர் ஐசலோ சுக்கின் இறப்பை.
    
          இவ்வாறான குறைந்தது இருபது புதிர்களை திரும்பத் திரும்ப வரும் சில கதைகள், 
உவமைகள் வழியாக இணைத்து   தொகுத்துக் கொள்ளத்தக்க சுவாரஸியமான மையக்கதை என 
ஒன்றை/ சிலவற்றை இந்த நாவலுக்குள்ளிருந்து நம்மால் உருவி எடுத்துவிடமுடியும். ஆனால் 
அவ்வளவு சிரத்தையுடன் இந்த புதிர்களை விடுவிப்பதனால் நமக்கு எந்த இலக்கிய அனுபவமோ, 
தரிசனமோ கிடைக்கப்போவதில்லை. நவீன் இதையெல்லாம் விரிவாகவே எழுதிவிட்டார்.
     கார்டூன்தனமான உவமைகள், கதாப்பாத்திர சித்தரிப்பு. மரணம், காலம் பற்றிய 
செயற்கையான கவியுருவகங்கள், ஸ்டேட்மெண்டுகள். இவற்றைக்கொண்டு இதை ஒரு மேலான 
இலக்கிய ஆக்கம் என நம்பவைக்க ஆசிரியர் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் சில 
கவித்துவமான பகுதிகளும் இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை. அவ்வாறு எனக்குத் தோன்றிய 
பகுதிகளில் சில கீழே:
1. மரணம் எனும் பேரிருப்பு பற்றி இபின் யாபிர் அக்‌ஷனாய்க்கும் (சாத்தன்) ஒரு காவல்காரனுக்கும்  நடக்கும் உரையாடல் பகுதி
2. எப்ரோசினியா லுக்ரேவிச்சிவின் கதையில் வரும் வெள்ளை நாணல்
3. நாவலின் கடைசி பகுதியில் வரும் நிகோல்ஸ்கி தன்னுள் இருக்கும் சாத்தானை கண்டுகொள்ளக்கூடிய தருணம்
4. ஆடம் ரூஹானி பற்றிய உருவகம், மீன்மாவு, கஸார் ஆண்டுகள் போன்ற கற்பனைகள், குழந்தைகளின் மரணம் என்ற பகுதி.

****

கிருஷ்ணன் – ஈரோடு

கான்ஸ்தன்தீன் கம்பிகளுக்கு வெளியே உள்ள ஜாடியை உடைத்து சில்லு சில்லாக  சிறை கம்பிகளுக்குள்  எடுத்தார் பின்பு மீண்டும் காலடி மண்ணை குழைத்து தனது எச்சிலால் அதை ஒட்டவைத்தார் என்கிற குறுங்கதை வருகிறது.   இது வரலாறு உருவாக்கத்தின் இயல்பு, இப்படி தான் இந்த புனைவு எழுதப்பட்டிருக்க வேண்டும் என்கிற ஒரு நோக்கை தருகிறது.  "அடியற்ற ஜாடியின் கதை "  என்கிற இடத்தில் அது வேறுவிதமாக சொல்லப்பட்டிருப்பதை நாம் காணலாம்.   கூடவே  இது நஞ்சூட்டப்பட்ட புத்தகம் என்கிற பகுதியையும்  மொழிபெயர்க்கும் போது  5 ஐ 50 என மொழிபெயர்த்து, அதை படித்த ஒரு துறவி  50 நாட்கள் உண்ணா நோன்பிருந்து இறந்துபோகும் பகுதியையும் இணைத்து நாம் ஒருவாறாக  இந்த புனைவை அணுகலாம்.   

கசார் விவாதம் என்கிற பகுதி சிவப்பு பச்சை மஞ்சள் என  ஒவ்வொரு புத்தகத்திலும் அதற்குள்ளேயே  பல்வேறு வகைப்பட்ட முறைகளில் கசார்கள் மதம் மாறியதாக கூறுகிறது அதாவது ஒரு பகுதிகுள்ளேயே பல கதைகள் வருகிறது :

 கிறிஸ்தவ சிவப்பு புத்தகத்தின் படி தத்துவவாதி சிறில் கசார்  விவாதத்தில் பங்கேற்கிறார்,  இது போன்ற முக்கியமான பகுதிகளில்  எல்லாம் மொழிபெயர்ப்பு படு சுமாராக உள்ளது. வழியில் அவர் தூதுவனை சந்திக்கிறார் அவர் உங்களிடம் ஏன் எப்பொழுதும் ஒரு புத்தகம் உள்ளது எங்களிடம் புத்தகம் எதுவும் இல்லை என வினவுகிறார், பின்னர் மும்மை குறித்தும் யூதரின் கேள்வியான ஒருவர் கடவுளை பெற்று எடுக்க முடியுமா என்பது குறித்தும் விவாதம் நகர்கிறது, இஸ்லாமியர்கள்  கிறிஸ்தவர்களின் வீட்டிற்கு வெளியே ஏன் சாத்தான்கள் படம் உள்ளது என கேட்பது குறித்தும் இதில் உள்ளது, இளவரசி அதே யூதர்களை பார்த்து நீங்கள் உங்கள் கடவுளால் சபிக்கப்பட்டு துரத்தப்பட்டவர்கள் ஆகவே நாங்கள் கிறிஸ்துவத்திற்கு செல்கிறோம் என்பதுடன் இது முடிகிறது. இதில் கஸார் கண்ட "படை தலைவன் " கனவின் விளக்கம்  இல்லை 

இஸ்லாமிய பச்சை புத்தத்தின்படி  இப்னு கோரா  கஸார் விவாதத்தில் பங்கேற்கிறார், மற்ற இரு மதங்களுக்கு மாறினால் உங்கள் மொழியை துறக்கவேண்டும் என்கிறார் , இஸ்லாத்திற்கு மாறினால் அது தேவை இல்லை என்கிறார். இளவரசி அதே பறவை விற்பவனின் ஓவியன் தந்தை, கவிஞன் மகன் கதையை கேட்டு, தனது துணையாக கவிஞனை தெரிகிறாள், கவிக்கு தான் மிலி தேவை இல்லை என்கிறாள். இப்னு கோரா   "படை தலைவன் "
 கனவிற்கு விளக்கமளிக்கிறார், நீங்கள் ஒரு புதிய புத்தகத்தை உருவாக்க முயற்சிக்கிறீர்கள், ஆனால் குரான் ஏற்கனவே உள்ளது அதை பின்பற்றுக என்கிறார், அதன் ருகாணியை பற்றி சொல்கிறார் . கஸார்கள் இஸ்லாத்தை தழுவுகிறார்கள் பழைய பெயரை எரித்துவிடுகிறார்கள்.     

யூத மஞ்சள் புத்தகத்தின்படி ஈசாக் சிங்காரி கஸார் விவாதத்தில் பங்கேற்கிறார், போரில் இருந்து திரும்பிய யூதன் கஸார் என்கிறார், விஷக்காளான் மற்றும் அதை தின்னும் மான் கதை வருகிறது, இளவரசி அதே தலையிட்டு   "படை தலைவன் "  கனவை விளக்குகிறார், இரண்டு தூதுவர்கள் கதை வருகிறது.  சங்காரி நீங்கள் ஏற்கனவே யூதர்கள் தான் என்கிறார், அதை உள்ளுணர்வால் உணர்ந்து யூதத்திற்கு திரும்புகிறார்கள்.  

கஸார்களின் வரலாறும்  மூன்று புத்தகங்களிலும் வெவ்வேறாக கூறப்பட்டுள்ளது : 

கிறிஸ்துவ சிவப்பு புத்தகத்தின்படி கஸார் வரலாற்றில் ஒரு பெருவரை பட தோல் எனும் பகுதி வருகிறது, கஸாரின் தூதுவன் ஒருவனின் உடலில் கஸார்களின் நிலம் குறித்த வரைபடமும் அவர்களின் வரலாறும் பொறிக்கப்பட்டுள்ளது, அது கஸார் மொழியில் கிரேக்க லிபியில் எழுதப்பட்டுள்ளது, அவர் பைஸாந்திய சபைக்கு  வருகிறார், போலி கஸார்கள் இஸ்லாமிய சபையில் தோன்றியது குறித்து சொல்கிறார். எழுதப்பட்டுள்ளதற்கு முரணாக அவர் பேசுகிறார். 

இஸ்லாமிய பச்சை புத்தகப்படி கஸார்களின் நிலம் மீன்களால் உரமிடப்பட்டு அதன் மீது கோதுமை பயிரிடப்படும் இடமாகும். மற்ற மதத்தினருடன் கூடி வாழ்கிறார்கள், போர்களின் போது பிற இரு சமயத்தினரும் தத்தமது மதத்தினருக்கு சாதகமாக  இருக்கும் போது கஸார்கள் மட்டும் தமது இனத்திற்கும் தேசத்திற்கும் விசுவாசமாக இருக்கிறார்கள். பின்பு துரோகம் இழைத்தவர்களை மறந்துவிடும் இயல்புடையவர்களாக இருக்கிறார்கள்.    

யூத மஞ்சள் புத்தகத்தின்படி, கஸார்கள்  "இஸ்லாமியர் அல்லாதவர்கள்" , "கிரிஸ்துவர் அல்லாதவர்கள்" என வெவ்வேறு இடங்களில் அழைக்கப்டுகிறார்கள். பத்து தலைப்புமுறைகளுக்கு ஒருமுறை இடம் பெயர்கிறார்கள். இவர்களிடம் கஸார் அகராதி என ஒன்று உள்ளது, அதில் ஆண் பெண் என இரு பிரதிகள் உள்ளது, இதில் ஒன்று உண்மை மற்றது பொய்.   

      மேலே குறிப்பிட்டுள்ள கதைகளை ஒரு சேர வாசிக்கும்போது இவற்றிக்கிற்கு இடையே எவ்வித தொடர்போ அல்லது முரணோ காணப்படுவது இல்லை. ஏழு உப்புகள் தொன்மம் தவிர பொதுவான தொன்மங்கள் எங்கும் இல்லை. "படை தலைவன்" கனவு,  கஸார்கள் விவாதமும், கஸார் வரலாறு, காகன் , இளவரசி அதே ஆகிய பகுதிகள் பொதுவானது.  ஆனால்  எங்கும் ஒன்றை ஒன்று நிரப்பவில்லை.  இது  ஒரு புனைவாக சிறப்பாக அமையவில்லை. ஆனால் இதில் வசீகரிக்கும் சில கதைகள் வருகிறது. நான் விரும்பிய  சிலவற்றையும், சில விவரணைகளையும்  கீழே தருகிறேன் : 

       அவ்ராம் பிரான்கோவிச் பகுதியில்  " எப்போதும் எதை பற்றியும் சிந்திப்பதை மிக விரைவில் நிறுத்தி விடுகிறேன், எனவே விஷயங்கள் எனக்குள் பாதி உருவானதோடு நின்று நம் இடுப்பு வரை மட்டுமே காட்டுகின்றன" 

"மனிதர்களாகிய நீங்கள்  உங்கள் காலடியை எடுத்துவைக்கும் வரை சாதங்களாகிய நாங்கள் ஒரு அடியைக்கூட  எடுத்து வைக்க முடியாது, எங்களின்  ஒவ்வொரு பாதச்சுவடும் உங்களோடு பொருந்த வேண்டும், நாங்கள் எப்போதும் உங்களுக்கு ஒரு அடி  பின்னால் இருக்கிறோம்" 


" மிதொடியஸ் -துறவி நாம் படிக்கும்போது எழுதப்பட்டுள்ள அத்தனையும்  நம்மை வந்தடைவதில்லை. நம் சிந்தனைகள் பொறாமை மிக்கவை, அவை தொடர்ந்தது மற்றவரின் சிந்தனைகளைத் தடுத்துக்கொண்டே இருக்கும், ஏனெனில் ஒரே சமயத்தில் இரண்டு வாசனைகளை நம்மில் இடமில்லை"

"ஹங்கேரியனின் முட்டை புதிர்" 

" இசைலோ சூக் - வாழ்வில் ஒரு மனிதனின் செயல்களே உணவு போல, மேலும் அவனது சிந்தனைகள் மற்றும் உணர்வுகள் மேலே இடப்படும் சுவையூட்டிகள். சோலாப்பழத்தின் மீது உப்பை அல்லது இனிப்பின் மீது காடியை ஊற்றுபவன் எவனாயினும் குறைவாகவே உண்ணுவான் "

" முனைவர் முவேவியா  சேகரித்த பொருட்கள்" - என்கிற பகுதியில் 200 ஆண்டுகளுக்கு முன் இருந்த உலகம் எப்படி நமக்கு புதுமையாக இருக்கிறது என வரும் இடம் சுவாசார்யமானது. அது 200 ஆண்டுகளுக்கு பிறகு வரப்போகும் உலகும் அப்போது புழங்கும் பொருட்களைப்போன்றே  வினோதமாக தோன்றும்.   

"மேக்தசா அல் சபார் -தனது 1000 குழந்தைகளுக்காக ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு முறை இறந்தார் "

"உடல் பலவீனப்பட்டு இருக்கும் போது  ஆன்மா பலப்படும்" .

சுவாரஸ்யமான பல  துணுக்குகள் உள்ள புனைவு இது. இதை அவசியம் படிக்கவேண்டிய நாவல் என சொல்ல மாட்டேன், ஆனால் படித்தால் நட்டமில்லை.  

கிருஷ்ணன் .  

****

ஸ்வேதா
நண்பர்களுக்கு

வகுப்பிற்குத் தாமதமாக வரும் மாணவியை போல் என் பதிவை இன்று பகிர்கிறேன். 

கசார்களின் அகராதி Kindle unlimited இல் விலையில்லா நூலாகக் கிடைத்ததினால் நான் ஆங்கிலப் பிரதியைப் படித்தேன். ஆங்கில மொழிபெயர்ப்பு சிறப்பாக இருந்ததினால் எனக்கும் கல்பனா அக்காவிற்கும் மற்ற குழாம் நண்பர்கள் எதிர்கொண்ட மொழிபெயர்ப்பு சிக்கல் இல்லை. ஆனால் நாவலின் வடிவமும் கதையும் பிடிபட சில காலம் எனக்குத் தேவைப்பட்டது.

மேலும் ஜெ அவர்கள் அமெரிக்கப் பயணத்திற்கு விமானம் ஏற பெங்களூர் வந்திருந்தார். அப்போது நவீனும் நானும் கசார்களின் அகராதியை நமது இணை வாசிப்பிற்குத் தேர்வு செய்ததை பற்றிக் கூறினோம், அவர் முதலில் Ivo Andric எழுதிய The Bridge on the Drina நூலைப் படிக்கும்படி சொன்னார். முதலில் முடியாவிட்டாலும் கசார்களின் அகராதியைப் படித்த பின் அந்நூலைப் படித்தேன். மிகச் சிறந்த ஒரு செவ்வியல் படைப்பு. இரு நூல்களை முன்வைத்து நான் எழுதிய விமர்சனத்தைப் பகிர்கிறேன். 

1) 

2)
ஏறத்தாழ இதே கட்டுரை ஆங்கிலத்தில்,

3)
அனைவரும் படிக்க வேண்டிய ஒரு சிறந்த ஆக்கம் ட்ரினா நதிப் பாலம்.  ஜெ அவர்கள் எழுதிய ட்ரினா நதிப் பாலம் அறிமுகக் கட்டுரையின் சுட்டி,   
 https://m.jeyamohan.in/362

சந்திரசேகர் sir, கல்பனா அக்கா அவர்களின் விரிவான குறிப்புகளுக்கு நன்றி. 

நன்றி
ஸ்வேதா
*****