இணை வாசிப்பிற்காகப் பரிந்துரைத்த நூலான அழகிய மரம் வாசித்து முடித்துவிட்டேன். வாசிக்க வாசிக்க என்னளவில் வியப்பும், ஆச்சரியம் ஏற்படுத்தும் தகவல்கள் அடங்கிய நூல். நம் மேலோட்டமான வரலாற்று புரிதல்களுக்கும், உண்மைக்கும் இடையேயான பாலமாகத் தான் இப்புத்தகத்தைச் சொல்வேன்.
மேலும் இந்த புத்தகம் குறித்து என் பார்வையை என் தளத்தில் எழுதியுள்ளேன், அதற்கான சுட்டி கீழே,
நன்றி,
நவின்.ஜி.எஸ்.எஸ்.வி.
********
நண்பர்களே,
அழகிய மரம் குறித்த கட்டுரையை என் தளத்தில் பதிவேற்றியுள்ளேன்.
நல்லதொரு படைப்பு. பரிந்துரைத்த நண்பர்களுக்கு நன்றி
நன்றி
ஸ்வேதா
******
வெங்கெட்ரமணன் கண்ணன்
நண்பர்களே,
S L பைரப்பா தன் சுயசரிதமான பிட்டியில் (Bhitty) தன் மாணவப்பருவ வாழ்க்கையை மிக விரிவாகப்பதிவு செய்துள்ளார். 50 களில் கல்லூரியில் தத்துவவியலை முக்கிய பாடமாக படித்துள்ளார்.
ஈரோடில் விவாத பயிற்சிபட்டறை சந்திப்பில் ஜெ-யிடம் ஏன் இப்பொழுதைய கல்லூரிப் பாடத்திட்டங்களில் (BA/MA) தத்துவவியல் இல்லை என்ற கேள்விக்கு ஆர்வமின்மை, வேலைவாய்ப்பு இன்மை போன்ற பொதுக் காரணங்களுடன், வடமொழி சாஸ்திர நூல்களை கற்றுக்கொடுக்க தக்க ஆசிரியர்கள்வழி இல்லாததும் ஒரு காரணம் என்று கூறினார். கிட்டத்தட்ட நம் சமகாலத்திலேயே ஒரு முக்கிய அறிவுப்பிரிவு கல்வித்துறையிலிருந்து மறைந்தது தெரிகிறது.
ஒரு மாபெரும் தேசத்தின் கல்வி பாரம்பரியமே முற்றிலுமாக வழக்கொழிந்து போனதை அழகிய மரம் எனும் இந்தப் புத்தகம் பதிவுசெய்கிறது. மேலும் காந்தீய சிந்தனையின் பார்வை முறையையும் இப்புத்தகம் தொட்டுச்செல்கிறது.
1931-ல் வட்டமேசை மாநாட்டுக்காக சென்ற காந்தியின் ஒரு லண்டன் உரையில் :-
“இந்தியாவும் பர்மாவும் 50 அல்லது 100 வருடங்களுக்கு முன்னால் இருந்ததைவிட இப்பொழுது படிப்பறிவில் பின் தங்கியுள்ளது. பிரிட்டன் இந்தியாவிற்குள் அடியெடுத்து வைத்தபோது, இந்திய பாரம்பரிய முறைகளை புரிந்துகொள்ளாமலேயே, அவற்றை தீவிரமாக அப்புறப்படுத்தும் முயற்சியில் இறங்கியது. மரத்தின் அடிமண்ணை தோண்டி வேரைப்பார்த்துவிட்டு திறந்தபடியே விட்டுவிட்ட காரணத்தால் இந்திய கல்விப் பாரம்பரியம் எனும் அழகிய மரம் பட்டுவிட்டது”
என்று ஆங்கிலேய ஆட்சியில் இந்தியக் கல்வியின் வீழ்ச்சியை பதிவு செய்கிறார்.
அழகிய மரம் எனும் காந்திஅடிகளின் சொற்பிரயோகத்தை தலைப்பாகக் கொண்டு, 18-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சாமானிய மக்களின் கல்விகற்பதற்கான வசதி வாய்ப்புகள் இங்கிலாந்தில் எப்படி இருந்தன எனும் சித்திரத்துடன் தரம்பால் இந்த படைப்பை தொடங்குகிறார்.
16 மற்றும் 17-ம் நூற்றாண்டுகளிலேயே இருநூறு வருடங்களைக் கடந்த பல்கலைகழகங்களும், மில்டன், ஷேக்ஸ்பியர் போன்ற ஆளுமைகளும் இங்கிலாந்தில் தோன்றியபோதிலும், பொது மக்களுக்கான கல்வி வாய்புகள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தது. “ஞாயிறு பள்ளிகள்” எனப்படும் மத போதனைக் கல்வி கூட மிகுந்த தயக்கத்துடனே பரவலாக்கப்பட்டன.
இந்தப் பின்னனியில், அதே காலகட்டத்தில், இந்தியாவில் பரவலாக இருந்த கல்விமுறைகள், பயிலும் கால அளவு, கற்பதற்கான வாய்ப்புகள், கல்வியின் மற்றும் கற்பிப்பவர்களின் தரம் எல்லாவிதத்திலும் மேம்பட்டதாகவும், அனைவருக்கும் கிட்டுவதாகவும் இருந்திருக்கிறது.
தாமஸ் மன்றோ எனும் மதராஸ் மாகாண கவர்னரால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் தரவுகள், மற்றும் பஞ்சாப், வங்காளம், பீகார் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இதை உறுதி செய்கின்றன. முக்கியமாக :
1) ஆரம்பப் படிப்பு என்பது சாதிப் பாகுபாடின்றி எல்லோருக்கும் கிட்டுவதாக இருந்தது, அதிகபட்சமாக ஒரு சில மாவட்டங்களில் 40 சதவிகிதமும், மற்ற மாவட்டங்களில் பொதுவாக 12 முதல் 20 சதவிகித மாணவர்களே முற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது,
2) பொதுவான மொழிப்பயிற்சி தாண்டி அடிப்படை கணக்கு வழக்குகளும் பயிற்றுவிக்கப்பட்டன.
3) கல்விச்சாலைகளுக்கும், ஆசிரியர்களுக்கும் ஊர் வருவாயில் ஒரு குறித்த பாகமோ, பிரம்மதேயம் போன்ற மன்னர் காலங்களில் அளிக்கப்பட்ட நிலத்திலிருந்து வரும் நிதியோ பயன்படுத்திக்கொள்ளப்பட்டது.
4) உயர்கல்வி பொதுவாக 100/150 கி.மீ தூரத்திற்குள் கிட்டுவதாக இருந்தது. இதில் இறையியல், வானியல், ஜோதிட சாஸ்திரம், தர்க சாஸ்திரம், சட்டம், மருத்துவம், மொழி இலக்கியங்கள் போன்றவை கற்பிக்கப்பட்டன.
5) கல்வி கற்பிப்பதற்கென தனியாக பெரிய அளவில் கட்டுமாணங்களோ வேறு வசதிகளோ இருந்ததில்லை. வீடுகளும், பொது இடங்களும் கல்விச்சாலைகளாகப் பயன்படுத்திக்கொள்ளப்பட்டது.
6) பெண்களின் முறைப்படியான பள்ளிப்படிப்பு என்பது மிகக்குறைவாகவே இருந்திருக்கிறது.
பாரம்பரியத் தொழில்நுட்பம், கைவினை, இசை, நாட்டியம் போன்றவை எவ்வாறு கற்பிக்கப்பட்டன என இந்த ஆய்வுகளில் ஆவணப்படுத்தப்படவில்லை. கள ஆய்வாளர்களின் ஆர்வமின்மை ஒரு காரணமாக இருக்கலாம் எனப்படுகிறது. மேலும் தொழில்நுட்பம் /கைவினை திறன்கள் பெரும்பாலும் குடும்பத்திற்குள்ளேயே கற்றுக்கொள்ளப்பட்டதாலும், இசை, நாட்டியம் போன்ற பயிற்சிகள் குடும்ப அளவிலும், கோவில்களிளும் கற்றுக்கொடுக்கப்பட்டதாலும் அவைற்றை ஆவணப்படுத்த முயற்சி எடுக்கப்படவில்லை எனத்தோன்றுகிறது.
(கல்வி சம்பந்தமான ஆய்வைத் தவிரக் இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு தகவல், ஒரு ஆர்வத்திற்காக : வரி விதிப்பிற்காக மதராஸ் மாகாணத்தில் பட்டியலிடப்பட்ட சமூகம் சார்ந்த தொழில் நுட்பங்கள் மட்டுமே 70க்கும் மேல் – உம். குளம் வெட்டுதல், பேனா செய்தல், எண்ணெய் தயாரித்தல் ..... துணி நெசவு சம்பந்தமானது மட்டுமே 25 வகைகளுக்கும் மேலாகப் பகுக்கப்பட்டுள்ளது - உம்.. மெல்லிய துணி நெய்பவர்கள், படுதா போன்ற கெட்டித்துணி நெய்பவர்கள், கட்டிலுக்கான நாடா நெய்பவர்கள்....இந்த தொழில் சார்ந்த பயிற்சி முறைகள் கல்வி சம்பந்தமான ஆய்வில் கணக்கெடுத்துக் கொள்ளப்படவில்லை).
ஏன் ஆங்கிலேயர்கள் இந்திய ஞானம், படிப்பறிவு மற்றும் கல்விசாலைகள் பற்றி ஆராய்ந்தார்கள் என்பதற்கு மூன்று முக்கியக் காரணிகளைச் சுட்டுகிறார்கள்.
அ. தன் நிர்வாகமுறைகளை அமுல்படுத்த சமூகத்தின் கல்வி நிலையை புரிந்துகொள்ள வேண்டிய அவசியம், - British Indology – உருவாக்கத்திற்கான ஒரு காரணமாக இது குறிப்பிடப்படுகிறது.
ஆ. அலெக்ஸாண்டர் மேக்கனக்கி போன்ற ஆங்கிலேய சீர்திருத்தவாதிகள் அமெரிக்காவை கையகப்படுத்தி அங்கிருந்த பூர்வகுடிகளை வேரோடு அழித்தபோது அக்குடிகளின் சமூக ஞானமும் தடயமின்றி அழிந்ததுபோல் வேறெந்த காலனி நாடுகளிலும் நடக்கலாகாது; அவற்றை முறையாக ஆவணப்படுத்தவேண்டும் என்று இங்கிலாந்தில் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால்;
இ. இந்தியக்குடிகளுக்கு கிருஸ்துவ ஞானத்தை, அதன் புனித நூல்களை பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு போதிக்கப்பட்டால்தான், மக்களை சட்டப்படியும் மத நிர்வாகப்படியும் ஒருங்கிணைக்க முடியும் என்ற நம்பிக்கை காரணமாக;
பாரம்பரிய கல்விமுறையின் அழிவு :
ஆங்கிலேயர்கள் இந்திய கல்விமுறைகளை ஒழிக்க நேரடி அடக்குமுறைகளை மேற்கொள்ளாவிட்டாலும், பொருளாதார வசதிகளை நிறுத்துதல், கல்விமுறைகளை தரக்குறைவானதென்று மட்டம் தட்டுதல் போன்ற நடவடிக்கைகளால் பாரம்பரிய கல்வி முறைகளைத் தேங்கவிட்டு தானாகவே அழியவைத்தனர்
1750-80 வரை நிதி வருவாயில் மூன்றில் ஒரு பங்கு சமூக மற்றும் கலாசார தேவைகளுக்காக ஒதுக்கப்பட்டது. இது பல்வேறு மாகாணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை மாணியங்களாகவும், நேரடி உரிமைகளாகவும் படிப்பு, மருத்துவம், வழிப்போக்கர்களுக்கான உணவு வசதிகள் போன்றவைகளுக்காக வழங்கப்பட்டன. வரிவிதிப்பை அதிகப்படுத்தும் நோக்குடன், இத்தகைய நிதி ஒதுக்கீடுகள் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் பெருமளவில் குறைக்கப்பட்டன.
டி பி மெக்காலே, ஜேம்ஸ் மில் (Author : The History of British India), வில்பர்ஃபோர்ஸ் போன்றோர் இந்திய குடிமக்கள் எல்லாவிதங்களிலும் ஐரோப்பிய சமூகங்களைவிட நாகரீகத்தில், சுத்தம் சுகாதாரங்களில், கட்டுமாணம் மற்றும் நகர மேலாண்மைகளில், மருத்துவம், கல்வியறிவில் பல படிகள் பின்தங்கி இன்னமும் நாடோடி வாழ்க்கையே வாழ்கிறார்கள். ஆங்கிலேயர்களால் மட்டுமே இந்தியர்களை உய்விக்கமுடியும் என்பதை மீண்டும் மீண்டும் பதிவுசெய்துகொண்டே இருந்தார்கள். ஆங்கிலேயர்களின் கல்விமுறைதான் உகந்தது என்று மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டது.
சர்ச்சைகள் :
காந்தியின் இந்தியப் பாரம்பரியம் எனும் அழகிய மரம், ஆங்கிலேயர்களால் அழுகவிடப்பட்டது எனும் பேச்சை ஆதாரமில்லாதது என, ஆங்கில ஆளும் வர்கம் தள்ளுபடி செய்தது. பிலிப் ஹார்டாக் எனும் டாக்கா பல்கலைகழகத்தின் முன்னாள் துணை வேந்தர் இந்த கோணத்தை முன்னெடுத்து காந்தியுடன் இதைப்பற்றி தொடர்ந்து கடிதம் மூலமாகவும் நேரடியாகவும் விவாதித்து வந்தார். ஒரு கட்டத்தில் காந்தி தன் ஜெயில் வாசம் காரணமாக, கே.டி.ஷா எனும் பேராசிரியரை தன் சார்பாக தரவுகளைக் கொடுக்குமாறு நியமித்தார். பல்வேறு தகவல் பரிமாற்றங்களுக்குப் பின்னும் காந்தியின் பேச்சில் இருந்த கள எதார்த்தத்தை ஹார்டாக் ஏற்றுக்கொள்ளவேயில்லை. கிட்டத்தட்ட இதே நிலையைத்தான் அரசு இயந்திரமும் எடுத்தது என்பது கண்கூடு.
காந்தியின் பேச்சிற்கு 50 வருங்களுக்குப்பின் தொகுக்கப்பட்ட தரம்பாலின் இந்த நூல், நாம், நம் கல்விப் பாரம்பரியத்தின் தொடர்பை இழந்த வருத்தத்தை அளித்தாலும், அமெரிக்க பூர்வகுடிகளுக்கு நேர்ந்த கதி நமக்கு ஏற்படாமல் வரலாற்றை பின்நோக்கி பார்க்க ஒரு வாய்ப்பை விட்டுச்சென்றிருக்கிறது எனும் சிறு மன சமாதானத்தை அளிக்கத்தான் செய்கிறது.
*******
செந்தில்குமார், சென்னை
காந்தி கூறிய ஒற்றை வரிக்கு உயிர்கொடுக்கும் பொருட்டு தரம் பால் அவர்கள் பெரும் சிரத்தை எடுத்து 18ஆம் நூற்றண்டு இந்தியாவில் இருந்த பாரம்பரியக் கல்வி பற்றி மிக விரிவாகவும், தரமாகவும் ஆய்வு மேற்கொண்டு எழுதிய புத்தகம் "அழகிய மரம்".
உணவில், உடையில், நடவடிக்கையில் முக்கியமாக சிந்தனையில் மேற்கத்தியவைகள் தான் சிறந்தது என்றும் நாம் சார்ந்த அனைத்திலும் பெரும் தாழ்வுணர்வுடனும் செயல்பட்டு வருகிறோம். இதற்கு முக்கிய காரணம் நம் கல்வி முறை. சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் கடந்தும் நம்மால் இந்த தாழ்வுமனப்பான்மையை கடக்க முடியாத அளவிற்கு ஆங்கிலேயரின் கல்வி முறை நம்மை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது.
கல்லூரி ஒன்றில் உரையாற்றும் பொது ஜெயமோகன் கூறியது, "நம் மாணவர்களால் எந்த கருத்தையும் (concept) புரிந்துகொள்ள முடியாது மாறாக அனைத்தையும் தகவல்களாக மட்டுமே உள்வாங்கி கொள்ளமுடியும்" அவ்வாறுதான் நம் கல்வி முறை வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார். நம் கல்வியின், சமூகத்தின் மிக முக்கிய பிரச்னை இது.
ஆங்கிலேயர்தான் நவீன கல்வி முறையை இங்கு அறிமுகப்படுத்தி அதன் மூலம் நாகரிக, நவீன இந்தியாவிற்கு அடித்தளமிட்டார்கள் என்று நமக்கு தொடர்ச்சியாக சொல்லிக்கொடுக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. இது ஒரு வடிகட்டிய பொய் என்பது மட்டுமன்றி ஆங்கிலேய காலனி ஆட்சிக்கு முன் இந்தியாவின் கல்வி முறை எவ்வாறு சிறப்பாக இருந்தது என்பதை மிக விரிவாகவும், மறுக்க முடியாத தரவுகளுடனும் அழகிய மரத்தில் நிறுவியிருக்கிறார் தரம் பால்.
பிரிட்டிஷார் இந்தியா வருவதற்கு முன்னால் உலகின் பிற பகுதிகளில் கல்வி எப்படி இருந்ததோ அதைவிட மேலான நிலையில் இந்தியாவின் கல்வி இருந்திருக்கிறது. பிரிட்டிஷாரின் காலனி ஆட்சியில் தான் இந்திய கல்வி நிலை மற்றும் தரம் பெரும் வீழ்ச்சி அடைந்தது என்பதை பல்வேறு ஆவணங்கள் மூலம் குறிப்பாக ஆங்கிலேய அதிகாரிகளின் அறிக்கைகள் மற்றும் கடிதங்கள் வழியாக நிருபிக்கிறார்.
ஒரு உதாரணத்திற்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 15ம் நூற்றாண்டிலிருந்து 18ம் நூற்றாண்டுவரை கற்பிக்கப்பட்ட பாட பிரிவுகள், ஒவ்வொன்றிலும் ஆசிரியர், மாணவர்களின் எண்ணிக்கை என்று பல்வேறு தரவுகளை முன்வைத்து அதன்மூலம் இரு தேசங்களின் கல்வி நிலையை பற்றிய மதிப்பீட்டை முன்வைக்கிறார்.
1770களில் இந்திய அறிவு, கல்விமையங்கள் தொடர்பாக மூன்று அணுகுமுறைகள் பிரிட்டிஷாரின் பிடியில் இருந்த இந்தியப் பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டதாக கூறுகிறார். இவை மிக மிக முக்கியமான ஒன்று.
1.பிரிட்டிஷாரின் அதிகார பெருக்கம் மற்றும் நிர்வாக தேவைகள்.
2. நாகரிகத்தை ஆக்கிரமித்து தோற்கடிப்பது
3. மக்களை நிறுவனமயப்படுத்தி, எளிய, சட்டத்துக்குட்பட்ட கிறிஸ்துவ சமுதாயத்தை உருவாக்குதல்.
இவற்றின் அடிப்படையில்தான் இந்தியாவிற்கான கல்வி முறை வடிவமைக்கப்பட்டு, வெற்றிகரமாக அதை காலனி இந்தியாவெங்கும் திணித்து காந்தி கூறியது போல் அழகிய மரத்தை அளித்துவிட்டார்கள்.
இதற்கு மற்றொரு முக்கிய காரணம் மேற்கத்திய கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் அனைவரும் ஒன்றுபோல் இந்தியாவை ஒன்றும் தெரியாத, பழமைவாதத்தில் மூழ்கிய, நாகரிகமற்ற கிட்டத்தட்ட காட்டுமிராண்டி கூட்டம் என்பதுபோலவும் தங்களை இந்த பாவிகளை இரட்சித்து, காப்பாற்றவேண்டிய பொறுப்பும், கடமையும் தங்களுக்கு உள்ளது என்றும் கண்மூடித்தனமாக நம்பினாரக்ள். இந்தியாவை பற்றி மார்க்ஸ் போன்றவர்கள் கூட கொண்ட எண்ணம் அதிர்ச்சியளிக்கிறது.
இங்கு புகுத்தப்பட்ட கல்வி என்பது இந்தியர்கள் எதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று பிரிட்டிஷார் விரும்பினார்களோ அவற்றையும் பிரிட்டிஷ்க்காரரின் புதிய கோணத்திலான விளக்கங்களையும் மட்டுமே.
இந்திய பாரம்பரிய கல்வியானது எவ்வாறு பரந்துபட்டு, சிறப்பான முறையில் செயல்பட்டு வந்தது என்பதையும், அந்தந்த கிராம/நகரதில் உள்ள கல்வி மையங்கள் அங்கிருந்த அனைத்து மக்களின் பங்களிப்போடும் எவ்வாறு நடைபெற்றது என்பதையும் விளக்கமாக விவரிக்கிறார். பிரிட்டிஷாரின் ஆட்சி காலத்தில் வருமானமானது மைய அதிகாரத்தின் கீழ் குவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்தப் பாரம்பரிய அமைப்பு சிதைந்து அழிந்துவிட்டது என்பது மிக முக்கியமான அவதானிப்பு.
பள்ளி/கல்லூரிகளின் எண்ணிக்கை, ஆசிரியர் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை, படித்த மாணவர்களின் ஜாதி,மதம் சொல்லிக்கொடுக்கப்பட்ட பாட பிரிவுகள், சமூகத்தால் கல்வி நிலையங்களுக்கு அளிக்கப்பட்ட ஆதரவு, பொருளாதார உதவி அனைத்து தகவல்களும் பிரமிப்பாகவும், ஆச்சர்யமூட்டுவதாகவும் உள்ளது. இன்றுவரை நம் சமூகத்தின் பொதுபுத்திக்கு மேல் சொன்ன தகவல்களுக்கு முற்றிலும் மாறான பிம்பம்தான் உள்ளது என்பது மிகவும் வருத்தமான, வெட்கப்படவேண்டிய விஷயம்.
இந்த புத்தகத்தின் மற்றொரு சிறப்பம்சம் என்பது 18ம் நூற்றாண்டு கல்வி நிலையை பற்றி விளக்கும் வேளையில் அன்றைய சமூகத்தின் நிலையையும் ஓரளவு புரிந்துகொள்ளும் வகையில் அமைந்துள்ளது.
சசிதரூரின் இந்தியாவின் இருண்ட காலம் புத்தகமானது ஆங்கிலேயர் எவ்வாறு நமது வளமான பொருளாதார நிலையை சீரழித்து இங்கிருந்த செல்வங்களை கொள்ளையடித்து சென்றார்கள் என்பதை பற்றி மிக விரிவாக, ஆதாரபூர்வமாக நிறுவுகிறது.
தரம்பாலின் அழகிய மரம், இந்திய பாரம்பரிய கல்வியை அழித்து அதன்மூலம் பல்வேறு சமூக அவலத்திற்கு காரணமாயிருந்த ஆங்கிலேயரின் அராஜகத்தை எடுத்துரைக்கிறது.
ஆங்கிலேய காலனி ஆட்சிக்கு முன் இருந்த இந்தியாவையும், ஆங்கிலேய ஆட்சியின் அவலத்தை பற்றியும் இந்த இரு புத்தகங்கள் நமக்கு ஒரு பெரிய தெளிவை அளிக்கின்றன. குறைந்தது தற்போதுள்ள அரசு இந்த புத்தங்களை ஆசிரியர் பயிற்சி பள்ளியின் பாட திட்டத்தில் கட்டாய படமாக வைக்கவேண்டும். முதலில் ஆசிரியர்கள் நம்மை பற்றி உண்மை நிலை தெரிந்து அதை மாணவர்களுக்கு போதிக்கட்டும். அதே வேளையில் வெற்று கூச்சலையும், போலி பெருமிதங்களையும் இனங்கண்டு ஒதுக்கி வைக்க வேண்டும்.
செந்தில்குமார், சென்னை
******
மதன்.எஸ்
அன்புள்ள நண்பர்களுக்கு
அழகிய மரம் பற்றிய எனது பார்வையை பகிர்ந்துள்ளேன். இப்புத்தகத்தை பரிந்துரைத்தவர்களுக்கு நன்றி.
அழகிய மரம் பற்றிய எனது பார்வையை பகிர்ந்துள்ளேன். இப்புத்தகத்தை பரிந்துரைத்தவர்களுக்கு நன்றி.
ஆங்கிலேயே ஆட்சியில் கடந்த நூறு வருடங்களில், இந்தியாவில் கல்வி பெறுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது என வட்ட மேஜை மாநாட்டில் ஆற்றிய உரைக்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் கேட்கிறார் ஆங்கில ஆட்சியின் அதிகாரியான பிலீப் ஹெர்டாக். 1921 ஆம் ஆண்டு தொடங்கிய இவ்விவாதம் 1931 வரை நீள்கிறது. இந்த விவாதத்தின் பகுதியாக காந்தியின் உத்தரவின் பேரில் காந்தியவாதிகளும், செயல்பாட்டாளர்களும் அவரது கூற்றுக்கு வலிமை சேர்க்க தொகுத்த ஆவணங்களே இப்புத்தகம்.
இந்திய சுதந்திர போராட்டத்தில் பல இடங்களில் காந்தி தன் உள்ளணர்வின் மூலம் சில விஷயங்களை சொல்கிறார். சில சமயம் அவை எந்த அடிப்படையில் சொல்லப்படுகின்றது என்பது தெரிவதே இல்லை. உதாரணமாக உப்பு சத்யாகிரகம், அன்றைய சூழலில் நில வரியே மேலோங்கி இருந்தது. மக்களை நேரடியாக பாதிக்க கூடிய பிரச்சனையையும் நில வாரியாகவே இருந்தது. ஆனாலும் காந்தி, உப்பு வரியை எதிர்த்து தனது போராட்டத்தை துவங்குகிறார். ரிச்சர்ட் அட்டன்பரோவின் காந்தி திரைப்படத்தில் காந்தி உப்பு சத்யாகிரகத்தை கையில் எடுக்கும் காட்சி மிக அழகாக படமாக்க பட்டிருக்கும். கடலை பார்த்து அமர்ந்து கொண்டே ஒரு நிருபரிடம் பேசி கொண்டே இருப்பார், நிருபர் அடுத்து உங்கள் போராட்டம் என்ன என கேட்டு கொண்டிருக்க, தெரியவில்லை என்று சொல்லி கொண்டிருந்தவர், நினைவு வந்தவராக ஒரு குழந்தைக்கான குதூகலத்துடன் எழுந்து ஓடுவார். நேரு உட்பட அத்தனை தலைவர்களும் முழு மனதில்லாமலே போராட்டத்தை தொண்டங்குவர். ஆனால், அது ஆங்கில சாம்ராஜ்யத்தையே உலுக்குவதாக அமையும். அந்த படத்தை பார்த்த போது கூட, ஏன் உப்பு அவ்வளவு பெரிய குறியீடாக ஆனது என புரிந்து கொள்ள முடியவில்லை. கிட்டத்தட்ட 80 வருடங்கள் கழிந்து ராய் மாக்ஸிமின் "உப்பு வெளி" வந்த பின், உப்பு வரியும் அதன் பின் ஏற்பட்ட பஞ்சமும் இந்தியாவின் ஆழ் மனதில் எப்படி பதிந்துள்ளது என்பதையும், உப்பு குறியீட்டு ரீதியாக எப்படி ஒரு தேசத்தை ஒன்றிணைத்து என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது. இந்த புத்தகமும் கிட்டத்தட்ட அந்த வகையை சார்ந்தது.
விருச்சமென வளர்ந்திருந்த அழகிய மரமொன்றை தோண்டி, அதன் வேரை எந்த விதமான பாதுகாப்பும் இல்லாமல் மட்கி வாடும் படி விட்டு விட்டார்கள் என்கிறார் காந்தி. நமது பாரம்பரிய கல்வி முறையை உரமும், மண்ணும், நீரும் சரியாக அளிக்கப்பட்டு தன்னிச்சியாய் தனக்கான இயல்பான ஆற்றலோடு வளர்ந்த அழகிய மரமாய் உருவகிக்கிறார். அது பட்டு போனதற்கான காரணம் தேடியும், அது ஆங்கிலேயர்கள் இங்கு வந்த போது இருந்த நிலையையும் பல்வேறு ஆவணங்கள் மூலம் தொகுத்து அளித்திருக்கிறார் இந்நூலின் ஆசிரியர் தரம்பால்.
இப்புத்தகம் ஏழு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் ஐந்து பகுதிகள் வெவ்வேறு ஆவணங்கள் வழியே பல்வேறு மாகாணங்களின் இந்திய பாரம்பரிய கல்வியை பற்றிய சித்திரமும், விவரங்களும் கூறப்பட்டுள்ளது. ஆறாம் பகுதி காந்திக்கும் பிலீப் ஹெர்டாகிற்கும் இடையேயான உரையாடலும், கடைசி பகுதி தஞ்சை பகுதியில் ஊதியம் பகிர்ந்து பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது.
நவீன காலக்கட்டம் உருவாகி வருவதற்கு முன்பு தொகுக்கப்பட்ட ஆய்வறிக்கை என்பதால், பல செய்திகள் இன்றைய நோக்கில் சரியானவை அல்ல என்பது போல் பொருள்படுபவையாக உள்ளது. உதாரணமாக, அறிக்கையை மைய படுத்தி, காந்தி மீண்டும் மீண்டும் லட்ச கணக்கான பள்ளிகள் இருந்ததையும், அதற்கான ஆதரவு பல வகையில் சமூகத்தில் இருந்ததையும் சுட்டி காட்டுகிறார். ஆனால், பிலீப் ஹெர்டாக் ஒரு அரசியவாதிக்கான தோரணையுடன் அவற்றை நிராகரிப்பதை பார்க்க முடிகிறது. திண்ணைகளிலும், கோவில்களிலும், மதராஸ்களிலும், குருக்களுங்களிலும் கற்பிக்க பட்டவற்றை ஆதாரபூர்வமானவையாக எடுத்து கொள்ள முடியாது என வாதிடுவதை பார்க்க முடிகிறது. அதே சமயம் அந்த காலகட்டத்தில் இங்கிலாந்தில் சர்ச்களில் வாரம் ஒருமுறை வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தது.
இந்திய பாரம்பரிய கல்வி பற்றி ஆராய்ந்த ஆங்கிலேய அதிகாரிகளுக்கு, இந்திய மக்களையோ அல்லது அவர்களின் தரத்தையோ புரிந்து கொள்வதை விட, அவர்களின் நூல்களை கற்று அவற்றை தங்களுக்கு சாதகமாக எப்படி மாற்றி அவர்களை கீழ் பணிய வைக்க முடியும் என்ற நோக்கிலேயே இருந்ததாக பதிவு செய்கிறார் தரம்பால். இந்தியாவின் பாரம்பரிய கல்வியில் ஆசிரியர்களுக்கான ஊதியம் பெரும்பாலும் மாணவர்களிடம் நேரடியாக தரும் பணமாகவோ, அரிசி, பருப்பு போன்றவையாகவோ அல்லது புரவலர்கள் தரும் தானமாகவோ இருந்து வந்துள்ளது. பல இடங்களில், வீட்டை விட்டு சென்று குருகுலத்தில் தங்கி, உணவிற்கு அந்த கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று இரந்து உண்டு வாழும் நிலையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எப்போது ஆங்கில அரசு மையப்படுத்தப்பட்ட ஆட்சியின் கீழ் உபரியை சுரண்டி எடுக்க தொடங்கியதோ அப்போதே இந்த கல்விக்கான ஆதரவு குறைய தொடங்கியது. தாது வருஷ பஞ்சமும், பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட பஞ்சமும் விரிவாக பல அறிக்கைகளில் இன்று நமக்கு கிடைக்கிறது. இவை கல்வியில் நேரடியான பாதிப்பை செலுத்தியது.
நமது பொது புத்தியில் பதிந்து உள்ளபடி, பிராமணர்கள் மட்டும் கல்வி அறிவு பெற்றவர்காளாக இல்லை. எல்லா சாதியினரும் அவரவர் தொழிலுக்கு ஏற்ற படி, அடிப்படை கல்வி அறிவு பெற்றவர்களாகவே இருந்துள்ளனர். பல இடங்களில், பிற்படத்தப்பட்டோருக்கானா கல்வி நல்ல நிலையில் இருந்துள்ளது. இறையியல், மருத்துவம், வானியல், சோதிடம் ஆகியவை பெரும் அளவில் கற்பிக்க பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்வது பெரும்பாலும் நாவிதர்களுக்கான தொழிலாக இருந்துள்ளது. (இவை முழுக்க உடலுக்கு வெளியே செய்யப்படும் அறுவை சிகிச்சை, நவீன அறுவை சிகிச்சை ஆன்டி பையோட்டிக் கண்டுப்பிக்க பட்டபின் வளர்ச்சி அடைந்தது). அதே போல, சில இடங்களில் பெண்கள் கல்வி பெற்று இருந்தாலும் (பெரும்பாலும் நடன பெண்கள்), பொதுவாக அவர்களின் கல்வி சதவிகிதம் குறைவாகவே இருந்துள்ளது. இதை காந்தியும் குறிப்பிட்டு உள்ளார்.
சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஒரு குறிப்பிட்ட இனம் அல்லது மொழி பேசுபவர் பற்றிய பொதுவான மனப்பதிவு எந்த அளவு அவர்களை பாதிக்கிறது என்பதை பற்றி. உதாரணமாக சீன பெண்களுக்கு கணிதம் வராது என்பது அப்படியான ஒன்று. முதலில், ஒரு கணித கேள்வித்தாளை
கொடுத்து அவர்களின் மதிப்பெண்களை கணக்கிட்டனர். அதன் பின், அதே அளவு சிக்கலான இன்னொரு கணித கேள்வித்தாளை கொடுத்தனர். ஆனால் இம்முறை, அவர்கள் என்ன இனம், என்ன பால் என்பதை குறிப்பிட சொன்னார். இம்முறை அவர்களின் சராசரி குறைவானது. இதை வெவ்வேறு குழுக்களிடம் நடத்தி உறுதி செய்தனர். இந்த நூலை படிக்கையில் தொடர்ந்து நமக்கு சொல்ல பட்டதும், நம்மை பற்றி நாமே நினைத்து கொண்டதை பற்றியும் யோசித்து கொண்டே இருந்தேன். ஜெமோ சொன்னது போல், இன்றைய உலகம் கோழி முட்டை போல, ஒரு வெள்ளை உலகம் ஒரு மஞ்சள் உலகம், நாமெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பது போல. தனிப்பட்ட முறையில், இது எனக்கு பெரிய திறப்பை அமைந்தது. தொடர்ந்து நம்மை பற்றி நமக்கு சொல்ல பட்டவற்றை ஆராயும் தரும் என எண்ணி கொண்டேன்.
எவ்வாறு முன்னாலும், எந்த சிறுமையும் உணராமல், எவ்வித தாழ்வுணர்ச்சியும் இல்லது நிமிர்ந்து நடந்த அந்த அரையாடை கிழவனை நினைத்து கொண்டேன்.
தரம்பால் அவர்களின் மொத்த படைப்பும் ஐந்து தொகுப்புகளாக வெளிவந்துள்ளது.
1. பதினெட்டாம் நூற்றாண்டில் இந்திய அறிவியலும் தொழில்நுட்பமும்
2. இந்திய பண்பாட்டில் ஒத்துழையாமை
3. அழகிய மரம் : 18 ஆம் நூற்றாண்டு இந்தியாவில் பாரம்பரிய கல்வி
4. பஞ்சாயத் ராஜ்
5. பாரம்பர்யம், மீட்பு மற்றும் சுதந்திரம் பற்றிய கட்டுரைகள்.
இவை அனைத்தும் pdf மற்றும் கிண்டில் வடிவில் இணையத்தில் கிடைக்கிறது.
நன்றி
மதன்.எஸ்
மதன்.எஸ்
******
கல்பனா ஜெயகாந்த்
அன்புள்ள நண்பர்களுக்கு,
காந்தியடிகள் ’சத்தம் ஹவுஸ்’ உரையில், பாரம்பரிய இந்தியக் கல்வி முறையை ஒரு 'அழகிய மரமாக' உருவகிக்கிறார். பிரிட்டிஷ் அரசாங்கம் அம்மரத்தின் வேர்களை எடுத்து ஆராய்ந்து விட்டு அங்கனமே அதை வாட விட்டு விட்டதாகக் குற்றம் சாட்டுகிறார். அதனால் சீண்டப்பட்ட ஹார்டாக் என்ற பிரிட்டிஷ் கல்வியாளர் காந்தியை விவாதத்துக்கு அழைக்கிறார். காந்தி அளிக்கும் ஆதாரங்கள் அவரைப் பெரிதாக திருப்திபடுத்துவதில்லை. அதனால் காந்தியின் உருவகத்தை மறுக்கும் விதமாக மூன்று லெக்சர்களை அளித்து விட்டு அவற்றைப் புத்தகமாக தொகுத்து விடுகிறார் ஹார்டாக்.
பின்னர் காந்தி இறந்த 20 ஆண்டுகள் கழித்து, சில புள்ளி விவரங்கள் காந்தியவாதியான திரு. தரம்பால் அவர்களின் கவனத்தைப் பெறுகின்றன. அவை, மதராஸ் மாகாணத்தில் ஸர் தாமஸ் மன்ரோ அவர்களால், 1820-களில் அப்போதைய கலெக்டர்களின் மூலம் திரட்டப்பட்ட தகவல்கள். இத்தகவல்கள் அக்காலத்தைய இந்தியக் கல்வி முறை மற்றும் சமூகக் கட்டமைப்பின் மீது பாய்ச்சும் வெளிச்சம், காந்தியடிகளின் உருவகத்தை பலப் படுத்துவதால் அவற்றைத் தொகுத்து புத்தக வடிவில் அளித்திருக்கிறார் தரம்பால். காந்தியின் ஒரு உவமையால் உந்தப்பட்டு, அதை நிரூபிக்கும் முகமாக மேலும் பல ஆய்வுகளை மேற்கொண்டு, அனைத்துத் தரவுகளையும் தொகுத்திருக்கிறார்.
இப்புத்தகத்தில், இரண்டு விஷயங்கள் மிக முக்கியமானவையாக எனக்குத் தோன்றுகின்றன. அவை,
1. 1820-களில் இருந்த இந்திய சமுதாயத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றம், மற்றும் பாரம்பரியக் கல்வி முறை ஆகியவை.
2. கடிதங்களின் மூலம் வெளிப்படும் காந்தியின் உள்ளம் செயல்பட்ட விதத்தின் ஒரு மிடறு.
இக்கல்வி முறையின் எச்சங்களாக நம்மிடம் இப்போதும் உள்ள பழக்கங்கள், சடங்குகள் பற்றிய ஒரு சிறு அலசலும் செய்ய விழைகிறேன்.
1820-களில் இந்தியச் சமுதாயம் நான்கு வர்ணங்களாக பிரிக்கப்பட்டிருந்த போதும், அடிப்படைக் கல்வியான எண்ணும் எழுத்தும் அனைவருக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு மேற்பட்ட கல்வி, அவரவர் தொழில் சார்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் கற்க ஆர்வமுள்ளவர்கள், ’ஜிஞ்ஞாஸா’ என்ற ஞானத் தேடல் உள்ளவர்கள், ஆசிரியர்களைத் தேடிச் சென்று கற்றிருக்கிறார்கள். ஊ.வே.சா அவர்கள் செய்ததைப் போல, ஒவ்வொரு ஆசிரியரிடமாகச் சென்று மாணவர்கள் தனக்கான பெட்டியை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்களின் சாதியோ ஆசிரியர்களின் சாதியோ இம்முறையில் முக்கியமனதாக இருக்கவில்லை.
திண்ணைப் பள்ளிக்கூடங்களில். ஆசிரியர்கள் பெரும்பாலும் மிகச்சிறிய அளவிலான கட்டணமே பெற்றுக் கொண்டதும், ஏழை மாணவர்கள் தங்களால் இயன்றதை மட்டுமே அளித்ததும், பணம் படைத்தவர்கள் அதை ஈடு செய்யும் விதமாக அதிகமாக அளித்ததும், ஆசிரியர்தம் தேவைகளுக்கு ஊர் பொதுவில் நிலம் மானியமாக வழங்கப்பட்டதும் என ethically உன்னதமான ஒரு சமூகக் கட்டுமானம் இருந்ததைக் காண்கிறோம். எந்த மாணவனுக்கும் அவனின் பொருளாதார நிலைமையைக் காரணம் காட்டி கல்வி மறுக்கப்படவில்லை.
குருகுலங்களில் ஆசிரியரே தன் கூரைக்குக் கீழ் மாணவர்களுக்கு அடைக்கலம் அளிக்கிறார். ஆசிரியரால் அவர்களை sustain செய்ய முடியாத நிலைமைகளில், ஊருக்குள் சென்று மாணவர்கள் இரந்து பெற்றுக் கொண்டு வருவதும், அவர்களுக்கு உவந்து பொருள் அளிப்பதும் என எந்த ஒரு இளக்காரத்திற்கும் உட்படாத சமன்பாடு இருந்திருக்கிறது. இன்றும், உபநயனத்தின் போது, வடு ‘பவதீ பிக்ஷாம் தேஹி’ என்று இரக்க பயிற்றுவிக்கப்படுகிறான். ‘உஞ்ச வ்ருத்தீ’ என்ற சடங்கில் தெருவில் பாடிக் கொண்டே செல்லும் பாகவதரை நமஸ்கரித்து அவர் தம் பாத்திரத்தில் அரிசியிடுவதும், அவர் சில அரிமணிகளை பிரசாதமாக அளிப்பதும் அப்பிரசாதத்தை வீட்டில் வைத்திருப்பதால் வீடு செழிப்பாக இருக்கும் என்று நம்புவதும் இப்பாரம்பரியத்தின் தொடர்ச்சி தான்.
கற்றலின் மீதும் , கல்வியை கடைக்கோடி வரை கொண்டு சேர்ப்பதின் மீதும் மிகப்பெரிய ஈடுபாடு கொண்ட சமூகமாக இருந்திருக்கிறது நம் இந்தியச் சமூகம். இன்றும் நம் நாட்டில் பாரம்பரியக் கலைகளான இசைக்கல்வியும், நடனமும் இங்கனமே கற்றுத் தரப்படுகின்றன. திறமையான ஆசிரியர்கள் சில மாணவர்களைக் கொண்டு வகுப்புகளைத் தொடங்குகிறார்கள். மாணவர்களின் பெற்றோரே கல்விக்கானக் கட்டணத்தை அளிக்கிறார்கள். திறமையான மாணவர்கள் என்றால் கட்டணம் பெரிதாகக் கொள்ளப்படுவதில்லை. குறிப்பிட்ட பாடத்திட்டம் என்ற ஒன்று இல்லை. மாணவர்களின் திறமையே அவர்களை அடுத்த நிலைக்கு உயர்த்துகின்றது. மேலும் எதைச் சொல்லி தருவது என்பதை ஆசிரியரே மாணவரின் திறமையை வைத்து கணக்கிட்டு சொல்லித் தருகிறார். தன்னை மீறும் மாணவர்களைத் தானே தன்னை விட சிறந்த ஆசிரியர்களிடம் அனுப்பி வைக்கிறார். நம் முந்தைய தலைமுறையைச் சேர்ந்த பிரபலப் பாடகரான செம்மங்குடி ஸ்ரீநிவாஸ அய்யர், தன் மாணவர்களிடமிருந்து எந்தக் கட்டணத்தையும் பெற்றுக் கொண்டதில்லையாம். நிறையப் பாடகர்கள் இங்கனம் இலவசமாக இசைக் கல்வி அளித்ததாகத் தெரிகிறது.
கல்வியைப் பொறுத்த வரை, 1850-களில், ஆங்கிலேயர்கள் இத்தகைய ஊர்களிலிருந்த உபரியை வரிகளின் மூலம் உறிஞ்சி எடுத்த போது, இவ்வமைப்புகள் வலுவிழக்க ஆரம்பித்திருக்கின்றன. கற்றலையே தொழிலாகக் கொண்ட பிராமணர்களும், கற்றலின் மீது பெரும் ஆர்வம் கொண்ட மற்றவர்களும் ஆங்கிலேயர் திறந்த பள்ளிகளில் சேர்ந்து பயன் பெறுகின்றனர். இப்பள்ளிகள், குறைந்த இடங்களைக் கொண்டிருந்ததாலும், தூரத்தில் இருந்ததாலும், வரிகட்ட வேண்டியிருந்ததால் அடிப்படைத் தேவைகளுக்கே போராட வேண்டியிருந்த சமூகத்தவர்கள், இப்புதிய கல்வித் திட்டத்திலிருந்து வெளியே தூக்கி எறியப்பட்டிருக்கிறார்கள். இங்கனம் 2-3 தலைமுறைக்காலம் கல்வியிழந்தவர்கள், நிரந்தரமாக கல்வி வாசனையற்றவர்களாக மாறிப்போயிருக்கிறார்கள்.
இதைத் தன் உள்ளொளியால் உணர்ந்த காந்தியடிகள், முன்னர் சொன்ன பிரபல உருவகத்தை தன் உறையில் சொல்கிறார். டாக்கா யுனிவெர்சிடியின் சான்ஸலராக இருந்த ஹார்டாக் இதை வன்மையாக மறுக்கிறார். பெரும்பாலான ஆங்கிலேயர்கள் தங்கள் கல்வித்திட்டம் குறை கொண்டது என்பதை நம்ப மறுக்கின்றனர். காந்தியடிகளுக்கும் இவருக்கும் நடந்த கடிதப் பரிமாற்றம் மிகுந்த சுவாரஸ்யமாக இருக்கின்றது.
குறிப்பாக, காந்தி ஹார்டாக்கிடம்-’நீங்களும் சத்தியத்தை நோக்கி பயணிக்கிறீர்கள் என்பதாலேயே நான் உங்களுக்கு பதில் எழுதுகிறேன். நான் நீங்கள் ஒப்புக் கொள்ளும் தரவுகளை அளிக்க முயல்கிறேன். நான் சொல்வது தவறு என்று நிரூபிப்பீர்களானால், என் வாக்கியத்தை அனைவரும் அறியும் வண்ணம் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்’ என்று கூறுகிறார்.
இந்தக் கடிதப் பரிமாற்றங்களில், காந்தி ஒரு முறைக் கூட தன் வார்த்தைகளிலிருந்து ஓடி ஒளியவில்லை. ஒரு முறைக் கூட சந்திப்பதை தவிர்க்க வில்லை. ‘வாருங்கள், நாம் இருவரும் சேர்ந்து சத்தியத்தைத் தேடுவோம்’ என்ற காந்தியின் கூற்று என்னை மிகுந்த உளயெழுச்சிக்கு ஆளாக்கியது. என் கணவரோடு இதைப் பற்றி பேசிக்கொண்டிருந்த போது இது நேராக உபநிஷத் வாக்கியம் என்றார். காந்தி சத்தியத்தையே உடும்புப் பிடியாக பிடித்திருக்கிறார். அக்கிழவனின் கையில் உள்ள கோல் சத்தியத்தின் புறவடிவமே போலும்.
கடைசியாக, இப்புத்தகத்தில் உள்ள தரவுகள் மூலம், காந்தியடிகள் சொன்னது போல ‘to the shame of men’, பாரம்பரியமான கல்வி பெண்கள் விஷயத்தில் almost இல்லை என்பது தெரிய வருகிறது. இந்திய மன அமைப்பின் மீது உள்ள மிகப் பெரிய கறை இது. பெண்கள் மற்றும் பஞ்சமர்கள் மீது இந்தியக் கூட்டு மனம் செய்த, செய்து கொண்டிருக்கிற சுரண்டல், அம்மனம் அடைந்த அனைத்து உச்சங்களையும் nullify செய்து விடுகிறது என்பது என் துணிபு. பெண்களுக்கும் கல்வி என்பது ஆங்கிலேயர்கள் ஏற்படுத்திய கல்வித்திட்டத்தின் மூலமாகவே தொடங்கியது என்பது மறுக்க முடியாத உண்மை.
நன்றி,
கல்பனா ஜெயகாந்த்.
****
செந்தில்குமார், சென்னை – பெண் கல்வி குறித்த விவாதம்
கல்பனா அவர்களுக்கு,
அழகிய மரம் பற்றி தங்களது கருத்து நன்றாக இருந்தது. வழக்கம் போல் தெளிவாகவும், நன்றாக தொகுத்தும் வழங்கியுள்ளீர்கள். பாரம்பரியமான கல்வியில் பெரும்பாலும் பெண்களுக்கு அனுமதி இல்லை என்பது உண்மை. அழகியமரத்தின் பல்வேறு தரவுகள் அதை உறுதிப்படுத்துகின்றன. ஆனால் பெண்களுக்கும் கல்வி என்பது ஆங்கிலேயர்கள் ஏற்படுத்திய கல்வி திட்டத்தின் மூலமாகவே தொடங்கியது என்பது வழக்கம்போல் சூத்திரர்களுக்கு கல்வி கொடுத்து அவர்களை மேம்படுத்தியது ஆங்கிலேயர்கள், அனைவருக்கும் பொது நீதியை, மானிட சமுத்துவதை அறிமுகப்படுத்தியது ஆங்கிலேயர்கள், இன்னும் பல சமூக நன்மைகளை அளித்தது ஆங்கிலேய அரசு என்று எவ்வித அடிப்படையும் இல்லாமல் இந்திய மரபை குறை கூறும் ஒரு கூற்றாகதான் கொள்ளமுடியும்.
ஜெ. திரும்ப திரும்ப கூறுவது போல் நாம் ஒரு காலகட்டத்தை தாண்டி வந்து நின்று, இன்றைய மதிப்பீடுகளின் அடிப்படையில் அன்றைய நிலையை விமர்சிப்பது எவ்வகையிலும் சரியில்லை. 17,18ம் நூற்றாண்டுகளில் இங்கு பெண்களுக்கு கல்வி இல்லை, எவ்வித தனியுரிமையும் இல்லை, மிகவும் மோசமாக நடத்தப்பட்டார்கள் என்பது முழு உண்மை ஆனால் அது இங்கு மட்டுமல்ல நீங்கள் கூறும் ஆங்கிலேய தேசத்திலும் அது தான் நிலைமை.
(Eighteenth Century England was a time in which women had little to say in society. They did not have the right to vote, they were not allowed to own properties, when married and as the husband was the chief breadwinner, they were not supposed to work. As they could not leave the house alone without being considered a prostitute, they were confined to the home where they would have to take care of the children and the household, “a subordinate role [...] in society”(August in 2005: 2). As a consequence, as girls did not need to go to school to learn their future tasks as housewives, they were educated at home by their mothers who acted as a role model.)
18ம் நூற்றாண்டில் இங்கிலாந்திலும் பெண்களின் நிலை மிகவும் மோசமாகத்தான் இருந்தது என்பதற்கு பல்வேறு ஆவணங்கள் உள்ளன. தனது சொந்த நாட்டு பெண்களை பற்றி கவலை படாத ஆங்கிலேய அரசு, இந்திய பெண்களின் நலனுக்கா பாடுபட்டுருக்கும்? பெண் கல்வி மட்டுமல்ல, தனிமனித சுதந்திரம், சமத்துவம், பெண்ணுரிமை, சமநீதி என அனைத்தும் 19ம் நூற்றாண்டு ஆரம்பத்திலிருந்துதான் மிக வேகமாக உலகமெங்கும் பரவத்தொடங்கியது. அதன் தொடக்கம் மற்றும் மையம் ஐரோப்பா என்பது உண்மை ஆனால் ஆங்கிலேயர் இங்கு வரவில்லை என்றாலும் இந்த மாற்றம் இங்கு நிச்சயம் நடந்திருக்கும். இன்னும் சீக்கிரமாக, மேம்பட்டதாக.
******
கல்பனா அவர்களின் பதில்
செந்தில்குமார் அவர்களுக்கு,
காந்தியடிகள் பெண்கள் கல்வி இந்தியாவில் neglect செய்யப் பட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தது 1931-ல்- ஹார்டாக் அவர்களின் கடிதத்திற்கு பதில் அளிக்கும் போது. 1931-ல் இங்கிலாந்தில் பெண்களின் நிலைப் பற்றி சில தகவல்கள்-
1. இங்கிலாந்தில் 1840-ல் , 60% பெண்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள், ஆனால் 1860-ல் , 40% மட்டுமே எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்.
2. 1830-லேயே Mechanics’ Institute in London பெண்களுக்கும் திறந்து விடப் பட்டுவிட்டது.
3.1880 Education Act மூலம் 5 முதல் 10 வயதுக் குழந்தைகள் (பெண் குழந்தைகள் உட்பட) அனைவருக்கும் அரசாங்க நிதி உதவியில் கட்டாயக் கல்வி வழங்க உத்தரவு இடப்பட்டது.
4. 1878-ல் பெண்களுக்கு முதல் டிகிரி University of London-ல் வழங்கியாகிவிட்டது
5. 1918-ல் right to vote வழங்கியாகி விட்டது.
6. 1928-ல் right to vote on equal terms with men வழங்கியாகி விட்டது.
1931-ல் காந்தியடிகள் தன் உரையில், 50 வருடங்களுக்கு முன் இருந்ததைப் போல அப்போதைய கல்வி இல்லை என்று ஆங்கிலேயர்களைக் குற்றம் சாட்டுகிறார். ஹார்டாக் அதை மறுக்கிறார். அவர்கள் இருவரும் 1870-களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். அப்போதைய இங்கிலாந்தில் 1860-லேயே 60% மகளிர் படிப்பறிவு பெற்று விட்டனர். அதனால் ஹார்டொக்-க்கு அத்தனை உரிமையும் இருக்கிறது இந்தியாவில் ஏன் பெண்களின் கல்வி வெறும் 2% மாத்திரமே இருந்தது என்ற கேள்வி எழுப்ப. அவர்கள் late-ஆக ஆரம்பித்தாலும் மிக சீக்கிரமாக progress செய்து விட்டனர்.
நம்முடைய வேத காலத்தில் லோபாமுத்ரா, கோஷா, கார்கி, மைத்ரேயி ஆகிய பெண் ரிஷிகளும், சங்க காலத்தில் சுமார் 154 பெண் கவிஞர்களும் இருந்திருக்கின்றனர். வரலாறு எப்போதுமே முன்னோக்கியே ஒழுகுவதில்லை. இரண்டு அடி ஏறினால் முழம் சறுக்கத் தான் செய்கிறது. அதனால் எப்பொழுதோ எதனாலோ சறுக்கிய பெண்களின் graph இன்னும் நிமிர்ந்த பாடில்லை. ஆங்கிலேயர்கள் தான் அனைத்து நல்லதையும் கொண்டு வந்தார்கள் என்று சொல்வதில் எனக்கும் உடன்பாடில்லை. ஆனால் பெண்கள் விஷயத்தில் அவர்கள் திறந்த பள்ளிகள் மிகவும் முக்கியமானவை. ஆங்கிலேயர்களும் மாத விலக்கின் போது பெண்கள் பள்ளிக்கு வரக் கூடாது என்று வைத்திருந்தால், கண்டிப்பாக இத்தனை progress வந்திருக்காது.
ஆங்கிலேயர்கள் வராமல் இருந்திருந்தால் இன்னும் சீக்கிரமே அனைத்து முன்னேற்றங்களும் நடந்திருக்கும் என்பது, economical realm—ல் வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம்(வரி கொடுத்தே அழிந்திருக்க மாட்டோம்). ஆனால் பெண்கள் விஷயத்தில் அப்படி இல்லை. இன்னமும் பெண்களைப் பற்றிய அந்த taboo இருந்திருக்கும்.
இந்நாட்களில் கூட பாரம்பரிய குருகுல கல்வி பெற்ற வேத வித்துகள், மீபொருண்மை சார்ந்த விஷயங்களை அநாயாசமாக quote செய்யக் கூடியவர்கள் கூட, பெண்களின் விலக்கு சமயங்களை தோஷம் என்று தான் கூறுகின்றனர்(நானே கூட விலக்கு என்று தான் அழைக்கிறேன் ). சங்கரர் போல ராமானுஜர் போல ஒரு reformist-ஆல் தான் நம் மனங்களில் உள்ள இந்த conditioning-ஐ மாற்ற முடியும். பள்ளியையாவது accessible-ஆகச் செய்ததால் தான் இவ்வளவு முன்னேற்றமாவது கிடைத்துள்ளது.
*****
செந்தில்குமார், சென்னை
கல்பனா அவர்களுக்கு,
விளக்கத்திற்கு நன்றி. தங்கள் தரப்பை இனி கருத்தில் கொள்கிறேன்.
****
ராஜமாணிக்கம், திருப்பூர்
அழகிய மரம் ஒரு பெரிய காணாமல் போன ஓவியத்தின் சிறிய பகுதிகள் துண்டு துண்டாக கிடைத்திருப்பதை கோர்த்து அதிலிருந்து அந்த ஓவியத்தின் முழுமையை ,விரிவை, அதன் நுணுக்கத்தை கற்பனையில் விரிக்கும் விதமான ஒரு படைப்பு. 18 ஆம் நூற்றாண்டில் இருந்த கல்வி அமைப்பு, பாரம்பரிய கல்வி முறை, சமூகத்தில் அதன் ஆழமான ஊடுருவல் இவைகள் பற்றி எல்லாம் வேறு வேறு கால கட்டங்களில் நிர்வாக அதிகாரிகள், ஆட்சியர்களின் குறிப்புகளில் இருந்து நம்மால் இப்போது நமக்கு கல்வி, பாரதத்தின் கல்வி கற்பித்தல், கற்றல் பற்றிய கற்பிதங்களை சுக்கு நூறாக்குகிறது.
நம்மிடம் தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் பொய், ஆங்கிலேயர்கள் வராமல் இருந்தால் நாம் கல்வி கற்க வாய்ப்பே இல்லை. இஸ்லாமியர்கள் வந்து தான் நமக்கு கழிப்பறை கட்டி கழிய கற்றுக்கொடுத்தார்கள். கணிதம், வானியல் இவை எல்லாம் மேற்கத்திய கொடைகள் நம்மிடம் கல்விக்கான சுவடு இல்லை. உயர் ஜாதியினர் மட்டுமே கற்றனர் மற்றவர்கள் கல்வி மறுக்கப்பட்டனர் என்ற பொய்யை மதம் மாற்றிகளும், கூலி எழுத்தாளர்கள், கோடாரிக்காம்பு சிந்தனையாளர்கள் உரத்து சொல்வதை கேட்டு உள்ளூர குமைந்திருப்போம். அதற்கு பதில் சொல்கிறது இந்த மாபெரும் ஆவணம். காந்தியின் உள்ளார்ந்த இந்திய பண்பாடு சார் பெருமிதம், நம்பிக்கையிலிருந்து ஒளியை பெற்றுக்கொண்டு புதைந்தும் , மறைந்தும் போன வரலாறுகளை ஒரு தொல்லியலாளன் போல மறு கட்டமைப்பு செய்து கண் முன் நிறுத்தி இருக்கிறார் தரம்பால் அவரின் பொற்பாதங்களில் நாம் பணிந்து நன்றி சொல்ல வேண்டும்.
தரம்பாலின் நூலை படிப்பதற்கு முன் பாரதத்தின் அறிதல் முறை பற்றிய பெருமிதம் வந்த கணத்தை துல்லியமாக நினைவு கூர்கிறேன். ஆதிச்ச நல்லூர் அகழ்வாய்வில் கிடைத்த பானை ஓடுகளின் ஆதன் கலம், சாத்தன் கலம் என்று கள் சேமிக்கும் பானைகளில் இருந்த பொறிப்புகள், குறியீடுகள். சங்கப்புலவர்களில் மயிலின் காலடி போல இருக்கும் இலைகளின் உதிரும் சத்தம் கேட்கிறது என காதலனுக்காக காத்திருக்கும் பெண்ணின் அரிய தருணத்தை சொன்ன கொல்லன் அழிசியும், இடையனும், கூல வணிகர்களும், பெருந்தச்சர்களும் எழுதிய காலத்தால் அழியாத சங்கப்பாடல்கள் நமக்கு காட்டுவது கல்வியின் தாக்கம் எவ்வளவு என்றும் அந்த கல்வி மனஙகளை மலரச்செய்து காலத்தில் அமரத்துவம் பெற்ற கவி மனஙகளாக மாற்றியது என்பதை நினைக்கிறேன். ஆதி கவியான அந்த வேட்டுவ முனியையும், அற்புதமாக ஞானத்தை தொகுத்த அந்த மீனவ கவியையும் நமக்களித்த பாரத பண்பாட்டின் பாரம்பரிய பெருமையை நான் நம்பிக்கையோடு அணுகவும், நம்பவும் இவையே போதுமானவை தான் ஆனாலும் பிரத்யட்சமான உண்மையை இந்த நூல் முன் நிறுத்துகிறது. பாரதத்தின் பாரம்பரிய கல்வி ஒரு ஞான வாகினியை போல தொடர்ந்து பொங்கி வந்து கொண்டே இருக்கிறது. சரஸ்வதி நதி அந்தர்யாமியாய் சென்றதை போல நம் அறிதல் முறைகளும், கற்கும் முறைகளும் அனைவருக்கும், அவரவர்க்கான கற்றல்களும் தற்காலிகமாக மேற்கத்தியர்கள் கிளப்பிய புழுதியின் புகையில் மறைந்திருக்கிறது. இனி அது மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும்.
18 ஆம் நூற்றாண்டில் ஒவ்வொருவரும் கற்ற நூல்கள், ஆசிரியர் மாணவர் விகிதம் இவைகளை கண்டால் ஆச்சர்யமாக இருக்கிறது. அதிகப்பட்சம் 12 பேருக்கு ஒரு ஆசிரியர் என்ற அளவில் இருந்திருக்கிறது. பொதுவாக அனைவருக்கும் காப்பியஙகளும்,இலக்கண இலக்கிய அடிப்படைகளும் கற்பிக்கப்பட்டிருக்கிறது. அதில் சில சுவாரஸ்யஙகளை பார்க்கிறேன். பெல்லாரியில் பயிலப்பட்ட அகராதிகள், நிகண்டு, உமரா,சப்தமம்ப்ரீ,சப்த முனி தர்ப்பணா,வியாகரணம்,ஆந்திர தீபிகா, ஆந்திர நாம சங்க்ரஹா என ஒரு பிரிட்டிஷ் ஆட்சியர் பதிவு செய்திருக்கிறார். கணிதம், பாவலூரி கணிதம், சப்தம ஸ்கந்தம், அஷ்டம ஸ்கந்தம், ரசிகாஜன மனோபரணம் இதோடு வான சாஸ்திரம் படித்தவர்களையும் பட்டியல் இடுகிறார்.
ராஜ முந்திரியில் இருக்கும் கலெக்டர் கொடுக்கும் பட்டியலில் இருக்கும் நூல்களை பாருங்கள்.
ரிக், யஜீர்,சாம,திராவிட வேதங்கள், ஸ்ரெளதம், பின்னர் ரகு வம்சம், குமார சம்பவம்,மேக சந்தேசம்,பாரவி, மகும்,அர்த்த சாஸ்திரம்,நயேஷதம், சமஸ்கிருத இலக்கணம், சித்தாந்த கெளமுதி,தர்க்கம், ஜோதிடம்,தர்ம சாஸ்திரம், காவியங்கள் என்று ஒரு மாபெரும் கனவை தீற்றுகிறார். இங்கு கற்பிக்கப்படும் பாரசீக மொழி புத்தகஙகளான கரமே அகமது நாமா, ஹர்கரம்,இன்ஷஆ காலிபா,கல்ஸ்தான்,பஸ்தன், பஹதுர்தனிஷ் என்று ஆவணப்படுத்துதிய கலெக்டரை நன்றியோடு நினைவு கூர்கிறேன். செலவு குறைந்த,ஞானமும், மன மலர்ச்சியையும், ஆன்மீக விழிப்புணர்வையும், லட்சிய சமூகத்தையும், மன அழுத்தமில்லாத இலகுவான வாழ்க்கை முறையையும் அமைத்து கொள்ள உதவிய அந்த எளிய உன்னதமான கல்வி முறையை அதன் கட்டமைப்பை எப்படி மேற்கத்தியர்கள் நாசம் செய்தார்கள் என்பதையும் கோடி காட்டுகிறது இந்நூல்.
வங்கத்திலும், பீகாரிலும் 1830 களில் இருந்த பாரம்பரிய கல்வியின் பரவலை விரிவாக சொல்லும் ஆடம் அவர்களின் அறிக்கையை பார்த்தால் நமக்கு வியப்பாக இருக்கிறது. முதலில் சில ஆட்சியர்கள் பெண்கள் கல்வி பயில வில்லை என்கிறார்கள். ஆடல் மகளிரும், தேவதாசி பெண்கள் மட்டுமே பொது கல்வி கூடத்தில் பயில்கிறார்கள் என்கிறர்கள். பின்னர் தான் இல்லத்திலேயே பயிலும் கல்வி முறையையும், மூத்த மாணவர்கள் சக மாணவர்களுக்கு கற்பிக்கும் முறையும் தெரிய வருகிறது. கிறிஸ்த்தவ மத வெறியரான வில்லியம் ஆடம் மேற்கத்திய மேட்டிமை மன நிலையும் கிறிஸ்த்தவ பரப்பு வெறியும் கொண்டிருந்தாலும் சில உண்மைகளை அப்படியே பதிவு செய்திருக்கிறார். அவரின் கூற்றுப்படி ஒரு லட்சம் பள்ளிகள் வங்கத்திலும் , பீகாரிலும் இருந்ததை உரிய ஆவணஙகளோடும், வருத்தத்தோடும் பதிவு செய்ததை குறிப்பிடுகிறார். இதற்கு 50 ஆண்டுகள் கழித்து ஆய்வு செய்யும் லெய்டனரும் இந்த தரவுகளோடு பெருமளவு ஒத்து போகிறார். ஆனால் ஆடம்ஸ்க்கு புரியாத ஒரு விஷயத்தை லெய்ட்னர் புரிந்து கொள்ள முயல்கிறார். இங்கு தொழில் நுட்பம், தொழில் கல்வி இல்லத்திலும், பரம்பரை வகையிலும் கற்றுக்கொடுப்பதை அவர் இங்கிலாந்தின் அமெச்சூரான முறையோடு ஒப்பிட்டு புரிந்து கொள்ள முயல்கிறார். இரும்பு, எக்கு, கைவினைப்பொருட்கள், விவசாயக்கருவிகள்,கட்டிடக்கலை, கப்பல் கட்டுமானம், பனிக்கட்டி, காகிதம் தயாரித்தல் இவை எல்லாமே ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் ஜாதி அமைப்பு எப்படி தொழில் நுட்ப கற்றல் திறனை ஒட்டு மொத்தமாக பேணி சிறப்பாக அடுத்த தலைமுறைக்கு கடத்தியது என்பதையும் பார்க்கலாம் . இந்திய கைவினைஞர்களின் நுணுக்கத்திலும் அழகிலும், தத்துவத்திலும் பல ஆயிரம் ஆண்டுகளாக சேகரித்து வைத்த ஞானத்தின் ஆழத்தை காணலாம்.
திரு பிலிப் ஹெர்டாக், காந்தியின் பாரத பண்பாட்டில் கல்வி ஒரு மகத்தான அங்கம் என்றதோடு அதன் விரிவும், பரவலும் தொன்று தொட்டு இருந்து வருகிறது. பிரிட்டிஷார் அதன் அடிப்படைகளை அழித்து செலவு மிகுந்த மேம்போக்கான கல்வியை திணிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை மறுக்க ஆவணங்களை தேடுகிறார். ஆனால் முடிவுகள் அவருக்கு சாதகமாக இல்லை. ஆனால் அவரின் மேற்கத்திய மனம் அதை ஒப்புக்கொள்ள மறுத்து தொடர்ந்து காந்தியுடன் விவாதித்து கொண்டிருந்தார். அதே போல இன்னொரு குற்றச்சாட்டு இந்தியர்களுக்கு வரலாற்று உணர்வு இல்லை என்று கூறப்படுகிறது. நாம் வாய் மொழி வரலாறு, கலை, சடங்குகள் மூலம் வரலாற்றை தாண்டியும் அமரத்துவம் பெறச்செய்தவர்கள் என்பதை மேற்கத்தியர்களால் உணர முடியவில்லை. 18 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சி நிலை பெறத்துவங்கிய 60 ஆண்டுகளில் இந்திய பாரம்பரிய கல்வி முறை, மருத்துவம், வானசாஸ்திரம், கட்டிடக்கலை, கைவினைக்கலை, துவங்கிய பல வகைக்கல்விகளும் எப்படி சுத்தமாக சிதைக்கப்பட்டு கைவிடப்படுகிறது என்ற் சித்திரத்தை உணர முடிகிறது.
கணக்கிடுதல், வரி வசூல், பொருளாதாரக்கல்வி இவைகளில் இந்திய பாரம்பரிய கல்வி பிரிட்டிஷாருக்கு முன் எப்படி இருந்தது என்பதை தாமஸ் மன்ரோ வரி வசூல் செய்வதற்காகவும், சர்வே செய்வதற்காக நிலங்கள்,நில அளவைகளை பார்வையிட செல்லும் போதும் சொல்கிறார். நில அளவையரான மன்றோவிற்கு இங்கிருக்கும் பாரம்பரிய நில அளவீட்டு முறைகள், சாமானிய மக்களிடம் கூட வரிகள், வரி விதிப்பு விகிதங்கள், பற்றிய விழிப்புணர்வும் தெளிவும் இருப்பதை ஆச்சர்யத்தோடு பதிவு செய்கிறார். பிரிட்டிஷாரின் வரி விதிப்பு முறையும் எப்படி பாரம்பரிய கல்வியை சிதைத்து நாசம் செய்தது எனும் சித்திரத்தையும் பார்க்கலாம். உதாரணமாக 1830 களில் 1,30,000 கல்விக்கூடங்கள் இருக்கும் பீகார் மற்றும் வங்கத்தில் வரியினங்கள் மூலமான வருவாய் மிகவும் குறைவு என ஆட்சியாளர்கள் சொல்லி பின்னர் பல வகையான மானியங்கள் ஒழிக்க்கப்பட்டு
அந்த நிலங்கள் பொது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. ஆனால் இதன் மூலம் இவ்வளவு காலம் பயன் பெற்ற கல்வி நிறுவனங்கள், பொது காரியங்களுக்கான சமூக அமைப்புகள் புதிய நிதி ஆதாரங்களை கண்டடைய முடியாமல் சிதைந்து நாசமாகிறது. அடுத்த 100 ஆண்டுகளில் சமூக பங்களிப்புடன் கூடிய பாரம்பரிய கல்வி மு றையை முற்றொழித்து விட்டு குமாஸ்த்தாக்களை உருவாக்கும் ஆழமில்லாத மேம்போக்கான ஆனால் செலவு மிகுந்த கல்வி முறையை வெற்றிகரமாக நிறுவி பலரின் எழுத்தறிவு எண்ணறிவு கனவை அழித்து ஒழித்தது பிரிட்டிஷ் மேலதிகாரம். இதை தான் இங்கிருக்கும் அரசியல் வியாபாரிகள்,கருத்து வேசைகள் பிரிடிஷார் வராவிட்டால் நம் கல்லாமல் இருந்திருப்போம் என்ற பொய்யை ஓங்கி சொல்லி நம்மை திசை திருப்புகிறார்கள்.
இந்த நூலின் மாபெரும் சாதனை என நான் எண்ணுவது 18 ஆம் நூற்றாண்டிலும், அதற்கு முன்பான காலகட்டத்திலும் பெண்களுக்கான கல்வி , தலித்களின் கல்வி நிலை இவற்றின் மீது உண்மை யின் ஒளியை பாய்ச்சி இருப்பது தான். தலித்துகளுக்கு பரந்து பட்ட அளவில் கல்வி கற்பிக்கப்பட்டிருக்கிறது. எல்லா ஊரிலும் அனைத்து பிரிவினரும் முறையான கல்வியை 7 ஆண்டுகள் முதல் சராசரியாக 16 ஆண்டுகள் வரை பெற்றிருக்கிறார்கள். பெண்களுக்கும் அதே போல கல்வி கற்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும் வீட்டில் பெண்களுக்கு கல்வி கற்பிக்கப்பட்டிருக்கிறது. மதுரை, திருச்சி, ராஜ முந்திரி போன்ற சில இடங்களில் 40% மேலாக பெண்கள் கற்றிருக்கிறார்கள். இத்தனையும் எந்த அரசு ஆதரவும் இன்றி சமூகத்தின் பங்களிப்போடு நிகழ்ந்திருக்கிறது. இது ஒரு லட்சிய தேசத்தின் வெற்றிகரமான செயல் திட்டம். அதை உருத்தெரியாமல் அழித்தது பிரிட்டிஷ் அரசு. இந்த ஆவணங்களில் சிறப்பானது பெல்லாரியின் கலெக்டர் திரு கேம்பல் அவர்களுடையது தான். 1830 களிலேயே இந்திய பாரம்பரிய கல்வி முறையின் இயங்கு தளங்களை, மாணவர்கள் ஆசிரியர்கள் உறவை, தொழில் நுட்ப கல்வியை, மருத்துவம், நியாய சாஸ்திரம், சட்டம், வானசாஸ்திரம், பாரசீக, அரேபிய மொழிகளை , மருத்துவ முறைகளை, கைத்தொழில்களை எப்படி கற்பிக்கிறார்கள். இது ஒரு ஜீவ நதி போல தேசம் முழுக்க எப்படி பொங்கி பிரவாகித்து மக்கள் மனங்களை மலரச்செய்கிறது என்பதை கண்கூடாக கண்டு எழுதி இருக்கிறார். இதில் என்ன விசித்திரம் என்றால் காந்தியை போன்ற ஆன்ம விழிப்புணர்வு கொண்ட ஒருவரால் தான் இந்திய பாரம்பரிய கல்வியின் ஆழத்தை, விரிவை, பரவலை உணர முடிந்திருக்கிறது. மீதம் உள்ளவர்கள் எல்லாரும் பிரிட்டிஷாரின் பிரச்சாரத்தை அப்படியே மறு கேள்வியின்றி ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இந்த அவலம் இன்றும் நீடிக்கிறது. மாபெரும் தவம் போல இந்த நூல் நம் அறிவின் மீது பாரம்பரிய கல்வி முறை மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது. இந்த பொன்னாள் மீண்டும் வரும் என்ற நம்பிக்கையோடு பிரார்த்திக்கிறேன்.
*****
சந்திரசேகரன், ஈரோடு
அழகிய மரம் – தரம்பால்
யுவா நோவல் ஹராரியின் சேப்பியன்ஸ் மற்றும் சஞ்சீவ் சந்யாலின் ஏழு நதிகளின் நாடு தொடர்ந்து அழகிய மரம் என்ற இந்த புத்தகத்தை படித்தேன். அழகிய மரம் பேசுகிற 18 ஆம் நூற்றாண்டில் இந்தியாவையும் சமகாலத்திய பிற நாடுகளை பற்றி புரிந்து கொள்ள மேற்கண்ட இரண்டு புத்தகங்களும் உதவிகரமாக இருந்தது. 12 ஆம் நூற்றாண்டு வாக்கில் நாளந்தா பல்கலைக்கழகம் பக்தியார் கில்ஜீயால் முழுவது அழிக்கப்படுகிறது. அதே சமயத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இங்கிலாந்தில் தோற்றிவிக்கப்படுகிறது. இருண்ட காலத்திற்கு பிறகு ஐரோப்பிய மறுமலர்ச்சியும் அறிவியல் புரட்சியும் ஐரோப்பாவை முன்னோக்கி செலுத்துகிறது. 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த அல்-பிரூனி என்ற அரேபிய அறிஞர் இந்திய அறிஞர்களை பற்றி குறிப்பிடும் போது அவர்கள் தங்களை பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, உலகில் நடைபெறும் பல நிகழ்வுகிளலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார். 12 லிருந்து 15 ஆம் நூற்றாண்டு வாக்கில் இந்தியாவும் சீனாவும் தன்னை விரிவாக்கி கொள்வதிலிருந்து விடுத்து உள்முகமாக திருப்பிக் கொண்டன. 15 ஆம் நூற்றாண்டு சமயத்தில் சீனா மற்றும் இந்தியாவின் ஒட்டு மொத்த உற்பத்தி உலக உற்பத்தியில் சரிபாதியாக இருந்துள்ளது. அப்பொழுதே வீழ்ச்சிக்கான விதை விழுந்துவிட்டது. 15 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் இந்தியாவில காலடி எடுத்துவைக்க துவங்கிவிட்டிருந்தார்கள்.
பிரிட்டீசார்கள் 1757 பிளாசிப்போரில் வென்றதிலிருந்து இந்தியாவில் அவர்களின் ஏகாதிபத்தியம் தொடங்குகிறது.
இந்த புத்தகத்தின் தலைப்பு அழகிய மரம். காந்தி எப்படி உப்புச் சத்தியகிரகத்தை உள்ளுணர்வு சார்ந்து தேர்ந்தெடுத்தாரோ அப்படியே இந்திய பாரம்பரியக் கல்வியை மரத்தோடு ஒப்பிட்டுள்ளார். மரத்தை உவமையாக இந்திய மரபு தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்துள்ளது. பகவத்கீதையில் 15வது அத்தியாத்தில் ஒட்டு மொத்த மானுட சமூகத்தோடு மரம் ஒப்பிடப்பட்டுள்ளது.
18ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் பாரம்பரியக் கல்வி என்பது எப்படி இருந்தது என்பதை பற்றி இந்நூல் பேசுகிறது. அதற்கு ஆதாரமாக வெவ்வேறு காலகட்டத்தில் பிரிட்டீஷ் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட ஆவணிங்களின் தரவுகளையே இந்த புத்தகம் ஆதாரமாக கொண்டு எழுதப்பட்டுள்ளது.
1. 1820 ஆண்டில் தாமஸ் மன்றோ கவர்னராக இருந்த காலத்தில மெட்ராஸ் பிரசிடென்சியில் சேகரிக்கப்பட்ட கல்வியை பற்றிய ஆவணங்கள்
2. 1835-38 ஆண்டில் வில்லியம் ஆடம்ஸ் என்பவரால் வங்காளம் மற்றும் பிகாரில் சேகரிக்கபட்ட ஆவணங்கள்
3. பஞ்சாபில் 1882ல் லெயிட்னர் அவர்களின் தலைமையில் தொகுக்கப்பட்ட ஆவணங்கள்.
மேலும் சில மேற்கத்திய அறிஞர்களின் புத்தகங்களையும் குறிப்புகளையும் இணைத்துள்ளார் தரம்பால். அவையாவன
ஃப்ரா பாலினோ தா பர்தால்மோ 1776லிருந்து 1789 வரை இந்தியாவில் இருந்தவர். அவருடைய புத்தகம் பர்த் அண்ட் எஜீகேஷன் ஆஃப் சில்ட்ரன் என்ற புத்தகத்தில் இந்திய சிறுவர்களின் கல்வி பற்றி பதிவு செய்துள்ளார். இந்தப் புத்கத்தில் கணித மேதையான பிதகோரஸ் கூட இந்திய தத்துவ கல்வி முறை கடன் வாங்கி பின்பற்றினார் என குறிப்பிட்டுள்ளார்
16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பீட்டர் டெல்ல வலெ மலபார் கல்வி முறையை பற்றி விரிவாக பதிவு செய்துள்ளார். மாணவர்கள் கணிதத்தை ராகம் போட்டு படிக்கு முறையை அவருடைய குறிப்புகளில் பதிவு செய்துள்ளார்.
கிட்டதட்ட ஆங்கிலேய ஆட்சியின் 60 ஆண்டுகளுக்கு பிறகுதான் இந்திய பாரம்பரியக் கல்வியை பற்றி ஆங்கிலேயே அதிகாரிகள் முதல் ஆவணங்களை தயாரிக்கிறார்கள்.
17 மற்றும் 18ஆம் நூற்றாண்டில் ஆங்கிய அறிஞர்களுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் ஒரு முக்கிய கேந்திரமாக இருந்துள்ளது. இந்தியாவை பற்றிய அவர்களின் பார்வை இந்திய வரலாறாக நம்ப வைக்கப்பட்டுள்ளது.
HISTORY OF BRITISH INDIA என்ற புத்தகத்தை எழுதிய ஜேம்ஸ் மில் இந்தியாவின் நாகரிகத்தையும் கலாச்சாரத்தையும் முற்றாக நிராகரிக்கிறார்.
வில்லியம் விலபர்ஃபோர்ஸ் என்ற அறிஞர் இந்திய கிறிஸ்தவ மயமாக்கப்படவேண்டும் என்றார்.
டி.பி.மெக்கலே இந்தியாவை ஆங்கில மயமாக்கப்பட வேண்டும் என்றார்.
கார்ல் மார்க்ஸ் இந்திய மேற்கத்திய மயமாக்கபடுவதே அதன் மீட்சிக்கான வழி என்றார்
மேற்கண்ட அறிஞர்களின் தாக்கமே இந்தியாவை ஆண்ட ஆங்கில அதிகாரிகளுக்கு இருந்துள்ளது. இந்த புத்தகத்திற்கு மையமான ஆவணங்களை தயாரித்த ஆங்கிலேய அதிகாரிகளுக்கும் அதுவே இருந்துள்ளது.
இந்த ஆவணங்களிலிருந்து முக்கியமாக இந்திய பாரம்பரிய கல்வியை பற்றி தெரிந்து கொண்டவைகள்
1. கல்விக்கான செலவுகள். – கல்விக்கான செலவுகளை அந்த அந்த கிராமங்களே முழுவதுமாக செய்தன. அதற்கான தொகையை எந்த மைய அமைப்பிலிருந்தும் பெறவில்லை. அன்றை மக்கள் தங்கள் வருமானத்தில் கிட்டதட்ட மூன்றில் ஒரு பகுதியை சமூகத்திற்காகவே செலவு செய்துள்ளார்கள்.
2. கல்வி கற்பிக்கப்படும் முறை, - அனைத்து மாணவர்களும் ஒரே வகுப்பில் தான் படித்துள்ளார்கள். அறிவிற் சிறந்த மாணவன் ஆசிரியரின் மேற்பார்வையோடு மற்ற மாணவர்களுக்கு கற்பித்துள்ளான். இதைத் தான் இங்கிலாந்தில் MONITORIAL METHOD என்று அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.
3. ஆரம்ப மற்றும் உயர்நிலை கல்வி- ஆரம்பநிலை கல்வியை கல்வி கற்க வாய்ப்புள்ள மாணவர்களில் நான்கில் ஒரு பகுதியிலிருந்து மூன்றி ஒரு பகுதி மாணவர்கள் வரை கற்றுள்ளார் (தாமஸ் மன்றோ குறிப்பு). உயர் கல்வியை நவ்தீப், பட்னா போன்ற தூரத்து இடங்களுக்கு சென்றும் கற்றுள்ளார்கள்.
4. கல்விக்கான புத்தகங்கள். வாழ்வியல் சார்ந்த விஷயங்களும் ஞானம் சார்ந்த விஷயங்களுக்கான முக்கிய பொருளாக இருந்துள்ளது. புராணங்களும் தத்துவ நூல்களும் இருந்துள்ளன.
மேலும் 18ஆம் நூற்றாண்டின் இந்திய பாரம்பரியக் கல்வியில் ஆரம்ப நிலை கல்வி அனைத்து சமூகத்தினருக்கும் கற்பதற்கு சமமான வாய்ப்பையே வழங்கியுள்ளது. ஆசிரியர்களும் கூட அனைத்து சமூகத்திலிருந்து வந்துள்ளார்கள். ஆனால் உயர் நிலை கல்வியில் பிராமணர்களின் பங்கே அதிகமாக இருந்துள்ளது.
சமகாலத்திய இங்கிலாந்தின் ஆரம்ப நிலை கல்வியோடு இந்திய கல்வியை ஒப்பிடும் போது இந்திய பாரம்பரியக்கல்வியே தரம் உயர்ந்துள்ளதாக இருந்திருக்கிறது. இங்கலாந்தின் கல்வி பரவலாக்கம் CHARITABLE SCHOOL, SUNDAY SCHOOL, MONITORIAL METHOD (இந்திய கல்வி முறையிலிருந்து எடுக்கப்பட்டது) என மாற்றமடைந்துள்ளது.
1770 களில் இந்திய அறிவு கல்வி மையங்கள் தொடர்பாக மூன்று அணுகுமறைகள் பிரிட்டீஷாரின் பிடியில் இருந்த இந்திய பகுதிகளில் நடைமுறைபடுத்தப்பட்டன.
1. பிரி்டடீசாரின் அதிகார பெருக்கம் மற்றும் நிர்வாகத்தேவைகளுக்காக உருவானது.
2. ஒரு நாகரிகத்தை ஆக்ரமித்து தோற்கடிப்பது என்பது அனைத்து அரிய அறிவுச்சேகரிப்புகளையும் ஒரேயடியாக இல்லாமல் ஆக்கிவிடுகிறது. எனவே ஒரு சமூகத்தின் யதாரத்தமான நிலைமை என்ன என்பதை அப்படியே ஆவணப்படுத்த வேண்டும் வாரணாசி போன்ற கல்வியில் சிறந்த பகுதிகளிலிருந்து எதையெல்லாம் எடுத்துக்கொள்ள முடியும் என்பதை பார்த்தார்கள்.
3. மக்களை நிறுவனமயப்படுத்தி எளிள சட்டத்திற்குட்பட்ட கிறிஸ்து்துவ சமுதாயத்தை உருவாக்குதல் .
பிரிட்டீசாரின் பிரதான நோக்கம் ஆரம்பித்திலிருந்தே வருவாயை அதிகரிப்பதாகவும் அரசுக்கு எந்த வரியையும் தராமல் இருக்கும் வருவாய்க்கான புதிய வாய்ப்புகளை கண்டுபிடித்து அவற்றுக்கு வரி விதிப்பதுமாக இருந்தது.
மேற்கண்ட அணுகுமுறைகள் பொருளாதார விஷயத்தில் தன்னிறைவாக இயங்கிக் கொண்டிருந்து இந்திய பாரம்பரியக் கல்வியை மையம் சார்ந்ததாக மாற்றி பின்பு கண்டுகொள்ளப்படாமல் அது அழிந்தொழிய விடப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் பள்ளிச் சூழல் மிகவும் இயல்பாகவும் நெருக்கடிகள் இல்லாததாகவும், குறைவான செலபு பிடிப்பவையுமாக இருந்துள்ளது. இந்திய ஆசிரியர்கள் அர்பணிப்பு உணர்வும் பொறுப்பானவர்களுமாக இருந்துள்ளார்கள்.
இந்திய பாரம்பரியக் கல்வியில் சாதி சார்ந்த ஏற்றத்தாழ்வுகள் கடந்த 2000 வருடங்களாக இருந்துள்ளதாக தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு இந்து மதத்தை முக்கிய காரணமாக குற்றம் சாட்டுகிறார்கள் (முக்கியமாக திரவிட கழகத்தாரால்) ஆனால் நிலவுடமை சமுதாயத்திலிருந்த சமூக படிநிலைகளை முதலாளித்துவ சமுதயாத்தில் அதே சாதி சார்ந்த படிநிலைகளை தங்கள் சுயலாபத்திற்காக கடைபிடித்து அதன் பாதகங்கள் முழுவதையும் இந்து மதத்தின் மீது போடுவது எவ்விதத்தில் நியாயம்? என்ற கேள்வியை இந்த புத்தகம் உருவாக்குகிறது.
இந்திய பாரம்பரியக் கல்வியை அழித்த பிறகு புதிய கல்வி அமைப்பு இன்றை அட்டவணை சாதிகளின் நிலைமைக்கும் பின்தங்கிய வகுப்பினரின் தாழ்ந்த நிலைக்கும் காரணமாகும். சமூக சாதிகளின் கல்வியில் இருந்த சமநிலையை புதிய கல்வி அமைப்பு குலைத்துவிட்டது.
புதிய கல்விமுறை நம் சமூகத்ததை பற்றிய அறியாமையை வளர்த்தெடுக்கிறது. கலாச்சாரத்தை பற்றியும் சகமனிதர்கள் பற்றியும் புரிதலற்றவர்களாக ஆக்கியுள்ளது. ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக தன்னம்பிக்கையை பலவீனமாக்கியிருக்கிறது, இந்திய பாரம்பரியத்தை பற்றிய பெருமித உணர்வை இழக்கச் செய்திருக்கிறது.
இப்போதைய நிலையில் பாரம்பரியக் கல்வியை மீட்டெடுத்துக் கொண்டு வந்தாலும் அதன் பெரும்பாலான அம்சங்கள் இன்றைய காலகட்டத்திற்கு பொருந்தாததாக இருக்கக் கூடும்.
பாரம்பரிய சூழலையும் , அமைப்பையும் புரிந்து கொண்டு தற்கால நிலைக்கு தகுந்தவாறு புதிய கல்வி அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என இந்த புத்தகம் அபாரமாக பதிவு செய்துள்ளது.
இப்படிக்கு சந்திரசேகரன்
ஈரோடு
விஜயபாரதி, சென்னை
நண்பர்களுக்கு வணக்கம். "முன்னுரை இருக்கிறது , ஆவணங்கள் இருக்கின்றன, புத்தகம் எங்கே?" என்ற ரீதியில்தான் ஆரம்பம் அமைந்தது. நவீன் கூறியது போல ஆவணங்களின் உள்ளடக்கங்களே சுவாரசியமான சித்திரத்தை அளித்தன. ஆங்கில வடிவத்தை வாசித்து தமிழில் எழுதியிருக்கிறேன். இங்குள்ள மேற்கோள்கள் என்னுடைய மொழிபெயர்ப்புக்களே. தமிழ்ப்புத்தக உள்ளடக்கத்திலிருந்து மாறுபட்டிருந்தால் பொறுமைகாக்கவும்.
--
எட்வர்ட் தாம்சன் அவரது கடிதத்தில் "இந்திய கல்வி முறையையும் தொழில் துறையையும் நாம் திட்டமிட்டு அழிக்கவில்லை. அது தவிர்க்க முடியாமல் நடந்தது" என்று எழுதுகிறார். கிட்டத்தட்ட தரம்பால் எடுத்து வைக்கும் வாதத்தின் சாரம் இதுவே. தரம்பால் இப்புத்தகத்தின் உள்ளடக்கத்திற்குக் கொடுத்திருக்கும் பங்களிப்பு அறிமுக உரை மட்டுமே. முக்கால்வாசி ஆவணங்களும் கடிதங்களும். எனவே அவரது அறிமுக உரை மேலும் எடைகொள்கிறது.
காந்தி மற்றும் ஹார்டாக் இடையேயான விவாதத்திற்கு, அவர்களிருவருமே மறைந்து கிட்டத்தட்ட 35 வருடங்களுக்குப் பின் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. உண்மை நோக்கிய இருவரின் தேடலுக்கு தரம்பால் வெளிச்சம் பாய்ச்சியுள்ளார் என்பது உறுதி.
ஆனால் இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது தரம்பாலின் இறுதி வரிகள். அவை மேலும் கேள்விகளுடனும் தேடலுடனும் முன்னோக்கி செல்ல நம்மை அறிவுறுத்துகின்றன என்றே தோன்றுகிறது. "ஆங்கிலேயர்கள் கொண்டுவந்த கல்வி நம் பண்பாட்டுக்கு ஒவ்வாததே. ஆனால் இன்றைய சூழலுக்கு 1800களில் இருந்த நமது கல்விமுறையின் பல கூறுகளும் இணக்கமற்றவையே". என்கிறார். இன்றைய சூழலுக்கும், இந்தியப் பண்பாட்டுக்கும் பொருத்தமான ஒரு கல்வியை வடிவமைக்க இவ்வரலாறு உதவும் என்பதே அவரது நம்பிக்கை.
நமது பாரம்பரிய கல்விமுறையின் பல கூறுகள் இன்றைய சூழலுக்கு பொருத்தமற்றவையாக துருத்தி நிற்கும் எனும்போது, எந்தக் கூறுகள் முன்னெடுத்துச் செல்ல உகந்தவை என்பதற்கு இப்புத்தகத்தில் பதில் இல்லை. இப்புத்தகத்தின் நோக்கமும் அதுவன்று.
கடிதங்கள் சிலவற்றை வாசிக்கும்போதும், ஆட்சியாளர்களின் அறிக்கைகளிலும் அவ்வப்போது அவர்களது மனச்சாய்வுகளைப் பொருத்து இந்தியர்கள் மீதான பார்வை மாறுபடுவதை அவதானிக்க முடிந்தது. அதே நேரத்தில், இந்திய வாசகனாக எனக்கு ஆங்கில ஆட்சிமீதான விலக்கமும் ஒரு மனச்சாய்வே என உணர இடம் கிடைத்தது முக்கியம் என நினைக்கிறேன். விலகி நின்று வாசிக்க முயன்று எதிர்திசையில் அதிகம் சாய்ந்துவிட்டேன் என நினைக்கிறேன்.
அவ்வகையில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விமுறை பற்றி எதிர்மறையான பதிவுகளே அதிகம் காணமுடிந்தது. வெண்முரசு நாவல் காட்டும் கல்வி அமைப்பு எந்த அளவுக்கு வரலாற்றை ஒட்டியது என்று அளவிட முடியவில்லை, எனினும் உபநிடத காலத்தின் நம் கல்விமுறை மீதான ஒரு பெருமிதம் இருந்தது. ஆவணங்களின் உள்ளடக்கம் 1800களில் நிலமை அப்படி அல்ல என்று காட்டுவதாகவே உணர்கிறேன்.
மாணவர்களை எடுத்துக்கொள்வோம். அவர்கள் பற்றிய பதிவுகள் இப்போதும் பொருந்தி வரும் என்றே எண்ணுகிறேன்.
"பேசக்கற்றுக்கொடுத்த ஒரு கிளிக்கு எப்படி அச்சொற்களின் பொருள் தெரியாதோ அதேபோன்றுதான் இந்திய மாணவர்களும் இருக்கிறார்கள்" என்ற ரீதியிலான குற்றச்சாட்டை கிட்டத்தட்ட அனைத்து ஆங்கிலேயர்களும் பதிவுசெய்திருப்பதைப் பார்க்க முடிகிறது. விதிவிலக்காக ஒருவர் மட்டுமே காவியப்பாடல்களையும் வேத மொழிகளையும் நினைவில் நிறுத்துமாறு உரக்கப்பாடுவது உச்சரிப்பை மேம்படுத்த உதவுகின்றது என்கிறார். இதில் நமக்கு உகந்ததை எடுத்துக்கொள்வதா இல்லை காந்தி மற்றும் ஹார்டாக்குடன் சேர்ந்து உண்மையைத் தேடிச்செல்வதா?
"கற்றலின் இ னிமையையும் பயனையும் அறியும் அளவுக்கு தன்னைத் தயார்செய்துகொள்வதே 10 வயது வரை யாவரும் செய்யக்கூடுவது. உண்மையான கற்றல் அதன் பின்னரே நிகழ்கிறது. ஆனால் அத்தகைய கற்றல் முளைக்கும் முன்னரே மாணவர்கள் பள்ளிகளிலிருந்து பணிக்கு வெளித்தள்ளப்படுகிறார்கள்" என்பதையும் ஒருவர் பதிவு செய்கிறார். விவசாயக் குடும்பத்திலிருந்து வரும் மாணவனுக்கு நில அளவை, கொள்முதல் பற்றி கற்பித்தால் போதும். வணிகப் பின்புலம் கொண்ட மாணவனுக்கு கொடுக்கல் வாங்கல் பற்றிய கணித அறிவு கிட்டியதே போதும். கற்றவை கருதுகோளாக அமைந்து புதிய வாசிப்பினூடே மேலெழுந்து சிந்திக்க வெகு சிலரே இருந்துள்ளனர். ஒரு சிலர் 35 வயது வரை கல்லூரிப்படிப்பை தொடர்ந்திருக்கின்றனர் என்பதும் விதிவிலக்கே. காந்தியுடனான சந்திப்பில் ஹார்ட்டாக் "அழியாமல் தாங்கிப்பிடிக்குமளவு இந்திய கல்விநிலையங்கள் எந்த பங்களிப்பையும் ஆற்றிவிடவில்லை" என்று பதிலளித்ததும் இதன் பின்னணியிலேயே.
ஆசிரியர்களுக்கோ, இப்போதிருக்குமளவு சமூக அந்தஸ்து அன்று இல்லை என்றே தோன்றுகிறது. கற்றலில் ஆர்வமும் இருந்ததாகத் தெரியவில்லை.
"பேசக்கற்றுக்கொடுத்த ஒரு கிளிக்கு எப்படி அச்சொற்களின் பொருள் தெரியாதோ அதேபோன்றுதான் இந்திய மாணவர்களும் இருக்கிறார்கள்" என்ற ரீதியிலான குற்றச்சாட்டை கிட்டத்தட்ட அனைத்து ஆங்கிலேயர்களும் பதிவுசெய்திருப்பதைப் பார்க்க முடிகிறது. விதிவிலக்காக ஒருவர் மட்டுமே காவியப்பாடல்களையும் வேத மொழிகளையும் நினைவில் நிறுத்துமாறு உரக்கப்பாடுவது உச்சரிப்பை மேம்படுத்த உதவுகின்றது என்கிறார். இதில் நமக்கு உகந்ததை எடுத்துக்கொள்வதா இல்லை காந்தி மற்றும் ஹார்டாக்குடன் சேர்ந்து உண்மையைத் தேடிச்செல்வதா?
"கற்றலின் இ னிமையையும் பயனையும் அறியும் அளவுக்கு தன்னைத் தயார்செய்துகொள்வதே 10 வயது வரை யாவரும் செய்யக்கூடுவது. உண்மையான கற்றல் அதன் பின்னரே நிகழ்கிறது. ஆனால் அத்தகைய கற்றல் முளைக்கும் முன்னரே மாணவர்கள் பள்ளிகளிலிருந்து பணிக்கு வெளித்தள்ளப்படுகிறார்கள்" என்பதையும் ஒருவர் பதிவு செய்கிறார். விவசாயக் குடும்பத்திலிருந்து வரும் மாணவனுக்கு நில அளவை, கொள்முதல் பற்றி கற்பித்தால் போதும். வணிகப் பின்புலம் கொண்ட மாணவனுக்கு கொடுக்கல் வாங்கல் பற்றிய கணித அறிவு கிட்டியதே போதும். கற்றவை கருதுகோளாக அமைந்து புதிய வாசிப்பினூடே மேலெழுந்து சிந்திக்க வெகு சிலரே இருந்துள்ளனர். ஒரு சிலர் 35 வயது வரை கல்லூரிப்படிப்பை தொடர்ந்திருக்கின்றனர் என்பதும் விதிவிலக்கே. காந்தியுடனான சந்திப்பில் ஹார்ட்டாக் "அழியாமல் தாங்கிப்பிடிக்குமளவு இந்திய கல்விநிலையங்கள் எந்த பங்களிப்பையும் ஆற்றிவிடவில்லை" என்று பதிலளித்ததும் இதன் பின்னணியிலேயே.
ஆசிரியர்களுக்கோ, இப்போதிருக்குமளவு சமூக அந்தஸ்து அன்று இல்லை என்றே தோன்றுகிறது. கற்றலில் ஆர்வமும் இருந்ததாகத் தெரியவில்லை.
பல ஆவணங்களில் , "விதிவிலக்கான புகழ்பெற்ற ஆசிரியர்களைத்தவிர மற்ற ஆசிரியர்களுக்கு மரியாதையே இல்லை" என்ற பதிவைப் பார்க்க முடிகிறது. "குற்றேவல் புரியும் எளிய ஏவலர்கள்" என்றும், "தான் கற்பிப்பதன் பொருள் அவர்களுக்கே தெரிவதில்லை" என்றும் பதிவுகளைப் பார்க்கும்போது இன்று சற்றேனும் நிலமை மேம்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது. அரைகுறை அறிவோடு சுவடிகளைப் பிரதியெடுத்து பிழைகளைப் பெருக்கிய குற்றச்சாட்டும் இத்தகைய அறிவை வளர்த்துக்கொள்ளும் ஆர்வமில்லாத ஆசிரியர்களே மீதே.
ஆசிரியர்கள் வேதத்தையும் மந்திர உச்சரிப்புகளையும் வெறுமனே நினைவில் நிறுத்தி சடங்குகளில் அவற்றை உச்சரித்து ஊதியம் பெற்றுச்செல்வதையும் பதிவு செய்துள்ளனர். "பொருளறியாமல் வேதம் ஓதுவது மருந்தின் இயல்பு அறியாமல் நோயாளிக்கு பரிந்துரைப்பது போன்றது" என்ற விவாதம் இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கியது என்கிறது வெண்முரசு நாவல். 1800 களில் இருந்த கல்வியைவிட பின்னோக்கிச் சென்றால் இன்னும் சீரான மேம்பட்ட கல்விமுறை இருந்திருக்க வாய்ப்புள்ளதோ?
மேலும் நுண்ணிய அவதானிப்பு என்று நான் கருதுவது, அன்றைய கல்விமுறையில் கிராமத்தினரே மாணவர்களுக்கு உணவு, உடை கொடுத்து உதவுவதும் ஆசிரியர்கள் உயர்கல்விக்கு கட்டணம் வசூலிக்காததும் அச்சூழலில் மிகுந்திருந்த வறுமையின் நெருக்கடியால் இந்திய சமூகம் கண்டடைந்த ஒரு சிறப்பான மாற்றுவழி என்ற பதிவே. ஆங்கிலேயர்களின் வரவுக்கு முன்னரும், வளமான சூழலிலும் இதே முறைதான் இருந்துள்ளது. ஆனால் "வளம் பெருகும்போது இம்முறை தானாக கைவிடப்படும்" என்ற கூற்றை இன்றைய தனியார் கல்வி நிறுவனங்களுக்கு வரிசையில் அடையும் நம் தலைமுறையை பொருத்திப் பார்க்கலாம். அரசுப்பள்ளிகளை "தரம் குறைவு" என்ற பின்னணியிலோ சமூக அழுத்தத்தினாலோ நம்மில் பலர் கைவிட்டுவிட்டோம் என எண்ணியிருந்தேன். கையிருப்பு அதிகமானதும் காரணமாக இருக்கலாம். மறுபக்கம் அளவில்லா நுகர்வு அன்றில்லாததும் ஆசிரியர்களின்[அனைவரின்] எளிமையான வாழ்வுக்கு காரணமாக இருந்திருக்கலாம்.
---
நூறு வருடங்களுக்கு முன் தாம்சன் எழுதியது. "[இந்தியாவில்] பொதுக்கல்வியில் பாராட்டுமளவு நாம்[ஆங்கிலேயர்கள்] ஏதும் சாதித்துவிடவில்லை" (I feel more and more that in this matter, of general education, we did precious little to congratulate ourselves on). அன்று ஆங்கில அரசுக்கு பொருந்தி நின்றது, நூறு வருடங்களுக்குப் பின், இன்று இந்திய அரசுக்கும் நமக்கும் பொருந்தும் என்றே தோன்றுகிறது.
எடுத்த குறிப்புகள் தரம்பாலின் அறிமுகத்தைவிட அளவில் பெரிதாக வளர்ந்து நிற்பதால் இப்போது இங்கே நிறுத்திக்கொள்கிறேன். பெரும்பாலும் அன்றைய சமூக சித்திரம் குறித்தவையே [முழுநிலவன்றும் இருள்நிலவன்றும் இரண்டிரண்டு நாட்கள் என மாதம் நான்கு நாட்களே விடுமுறையாம், ஆங்கிலக்கல்விமுறை எட்டு நாட்களு விடுமுறை கொடுக்கின்றது, எது வேண்டும்? :-)]. மீண்டும் வாசித்து சற்று அசைபோட்ட பிறகே விரிவாக எழுதமுடியும் என்று தோன்றுகிறது.
நன்றி. மிக முக்கியமான நூல். 1800களில் இந்திய கல்வி குறித்த நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறது.
அன்புடன்,
விஜயபாரதி
சென்னை
****
கிருஷ்ணன், ஈரோடு
அழகிய மரம் வாசித்துக் விட்டேன். இந்த திரி முழுவதும் வாசித்துக் விட்டேன்.
விஜய சாரதியின் கருத்துடன் கிட்ட தட்ட முழுவதும் ஒத்து போகிறேன். செந்தில் கல்பனா உரையாடலும் சிறப்பாக இருந்தது.
நமது கல்வி அதி சிறந்ததாக இருந்திருக்க வாய்பில்லை என்பதை நிறுவ கூட இப்புத்தகத்தை சான்றாக்கலாம். பெண் கல்வி சாத்தியமான மிக குறைந்த அளவு, ஆசிரியர் தரம் கல்வி தரம் போன்றவை இந்தியா முழுவதும் சீராக இல்லை. பள்ளி கல்லூரி என எவ்வாறு வேறு படுத்தப்பட்டது என்பதற்கு பதில் இல்லை. நிரந்தர பள்ளி கட்டிடம் என்பது அரிதினும் அரிது. கிபி 1800 க்கு முன் நம்மிடையே புள்ளி விபரம் இல்லை.
ஷாவின் பதில் கடிதத்தில் அவ்வாறு எந்த நாட்டிலும் புள்ளி விபரம் இல்லை என கூறி இருப்பது கவனிக்கத் தக்கது. அச்சிட பட்ட புத்தகங்கள், அதன் விற்பனை அளவு ஆகிவை வைத்து இதை அணுகலாம் என்பது ஏற்க தக்கது.
கல்வியை இந்த தேசம் அபரிமிதமாக பேணி இருக்கிறது, இது பிற தேசத்தில் நிகழ்ந்திருக்க வாய்ப்பு குறைவு என எண்ணுகிறேன். கல்வி நமது பண்பாட்டின் ஒரு பகுதி. இந்த கடிதம் பதில், அறிக்கைகள் மூலம் நாம் மேம்பட்டு இருந்தோம் என உறுதியாக உணரலாம் ஆனால் நிரூபிக்க இயலாது. காந்தியின் உள்ளுணர்வை நாமும் ஏற்போம்.
ஆறுமுக தமிழனின் திருமூலரின் காலம் நூலில் கிபி 4 ம் நூற்றாண்டு வரை மாத விலக்கு குருதியை இந்தியாவெங்கும் பல இடங்களில் கடவுளுக்கு படைத்து, புனிதமாக கருதிய வழிபாட்டு முறையை குறிப்பிட்டிருப்பார். அப்போது பெண்களுக்கு விலக்கில்லை, மாறாக முன்னுரிமையே. பின்னர் தலை கீழ் ஆனது. இந்திய வரலாறு இவ்வாறு மாறி கொண்டே இருப்பது. முன்பு பெண் கல்வி அதிகமாக இருந்திருக்க வாய்ப்புண்டு. சுதந்திர இந்தியா தனது முதல் தேர்தலிலேயே பெண்களுக்கு வாக்குரிமை அளித்து விட்டது.
கிருஷ்ணன்.
****
பாரி, பெருந்துறை
2010 வாக்கில் எனது பொறியியல் இரண்டாம் ஆண்டின் போது அப்போதைய அரசு முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான சில சலுகைகளை அறிவித்தது. ‘முதல் தலைமுறை பட்டதாரி’ எனும் சொல் அப்போதுதான் எனக்கு அறிமுகமானது. பலநூறு வருடங்கள் தொடர்ச்சிகொண்ட ஒரு பரம்பரையில் முதன்முறையாக ஒருவன் கல்வி அடைகிறான் எனும் பரவசத்தை அளித்த சொல் அது. மிகச் சமீபம் வரையிலும் இவ்வாறான முதல் தலைமுறை பட்டாதாரிகள் பெரும்பாலான குடும்பங்களில் சென்ற இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளுக்குள்தான் உருவாகி வந்திருப்பார்கள் என்ற எண்ணமே எனக்கிருந்தது. அழகிய மரம் புத்தகம் இவ்வெண்ணத்தை மாற்றியுள்ளது. பள்ளிக் கல்வி என நாம் இன்றைக்கு உருவகிக்கும் வடிவிலும் தரத்திலும் இல்லாவிட்டாலும் நம் முன்னோர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினர் குறைந்தது இரு நூற்றாண்டுகள் முன்னரே அடிப்படைக் கல்வியை அடைந்திருக்கிறார்கள் என்று நம்பலாம். பாடத்திட்டம், கால அளவு, எண்ணிக்கை என அனைத்திலும் அன்றைய ஐரோப்பாவுடன் ஒப்பிடத்தக்க அளவிலோ அல்லது அதனினும் மேம்பட்டோ நம் பாரம்பரிய கல்வி இருந்துள்ளதான சித்திரத்தை இப்புத்தகம் அளிக்கிறது. நால்வகை வருணத்தினரும் கல்வி பெற்றுள்ளனர் என்பதும் மெட்ராஸ் பிரெசிடென்ஸியின் பல பகுதிகளில் சூத்திர மாணவர்களின் சதவீதம் 60க்கும் மேல் இருப்பது புதிய அறிதல்.
பெண் கல்வியை பொறுத்தவரை பத்தொன்பதாம் நூற்றாண்டு துவக்கத்தில் மிக சொற்பமான எண்ணிக்கையில் (ஐந்து சதத்திற்கும் குறைவு) மட்டுமெ இந்திய பாரம்பரியக் கல்வியில் கல்வி பெற்றிருப்பதை தரவுகள் காட்டுகின்றன. இவ்விஷயத்தில் அக்காலகட்டத்தின் உலகின் வேறெந்த பகுதியைப் போலவே இந்தியாவும் முன்னேறிவிடவில்லை. பல பகுதிகளில் நடன மங்கையர் பிரிவினர் கல்வி பெற்றிருக்கின்றனர். மேற்கு கடற்கரை மலபாரிலும் ஒரிஸாவின் ஜெய்ப்பூரிலும் மட்டும் ஆண்களை காட்டிலும் பெண்கள் அதிகம் கல்வி பெற்றிருப்பது சுவாரசியமான தகவல். பிரிட்டிஷ் ஆவனங்களின் படி பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதி முதலே இந்தியாவில் கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்குகிறது. இது பிரிட்டிஷாரால் ஏற்பட்ட மாற்றமாக அன்றி அக்காலகட்டத்தின் உலகளாவிய போக்கின் பகுதியாகவே பார்க்கிறேன். மேலும் பாரம்பரிய கல்வியில் பெண்களின் சதவீதம் குறைவாக இருப்பினும் முற்றிலுமாக விலக்கப்பட்டிருக்கவில்லை என்பதால் பெண் கல்வியின் வளர்ச்சி எளிதாக இருந்திருக்கலாம்.
இப்புத்தகத்தின் பின்னிணைப்பாக வரும் 1822ல் இந்திய கல்வி குறித்து கலெக்டர்கள் அனுப்பிய ஆய்வறிக்கைகளில் இரு அறிக்கைகளை குறிப்பிட்டாக வேண்டும். முதன்மையாக பெல்லாரி கலெக்டர் ஏ.டி.கேம்பெல் அனுப்பிய அறிக்கை. புள்ளிவிவரங்கள் மட்டுமின்றி குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படுவது முதல் பள்ளியின் அன்றாட நிகழ்வுகள், உபகரணங்கள், கற்கப்படும் பாடத்திட்டம், கற்றலின் பொதுவான குறைபாடுகள் என பல தகவல்களை விவரிக்கிறது இவரது அறிக்கை. பள்ளிக்கு முதலில் வரும் குழந்தைக்கு கையில் சரஸ்வதி வரையப்படுவதும் அடுத்து வரும் குழந்தைக்கு பாராட்டும் அல்லாமல் தண்டனையும் அல்லாமல் பூஜ்ஜியம், அடுத்து வரும் குழந்தைகளுக்கு தண்டனைக் கோடுகள் என்பது ஒரு ஒழுக்கமான பாரம்பரிய பள்ளியின் சித்திரத்தை அளிக்கிறது.
கல்வித் தரம் குறித்த கேம்பெல்லின் அவதானிப்பும் நம்பகமானதாகவே படுகிறது. ஆண்டுக் கணக்கில் ஒருவர் படித்தாலும் அவர் சொற்களை கூட அல்ல எழுத்துகளைத்தான் படிக்கிறார் என்பதும், செய்யுள்களை ஆசிரியர்கள் உட்பட யாரும் அர்த்தமறிந்து படிப்பதில்லை என்பதும், கல்வி கற்ற ஒருவனால் எழுத்து இலக்கண பிழையின்றி தன் நண்பனுக்கு ஒரு சாதாராண கடிதம் கூட எழுதிவிட முடியாது போன்றவை இன்றளவும் நம் தரப்படுத்தப்பட்ட பொதுக் கல்வியிலும் சந்திக்கும் சவால்கள்.
பள்ளி, கல்லூரிகளில் பயன்படுத்தப்படும் புத்தகங்களின் பட்டியலை அளித்த வகையில் ராஜமுந்திரி கலெக்டெரின் அறிக்கை முக்கியமானது. இப்பட்டியலில் பெரும்பாலும் புராணங்களாக இருந்தாலும் அதுபோக கணிதம், வேதங்கள் (திராவிட வேதம் உட்பட), தர்க்கம், ஜோதிடம், இலக்கணம் ஆகியவையும் உள்ளன.
இப்புத்தகத்தின் துவக்கமாக அமைந்த 1932ல் காந்தி இங்கிலாந்தில் ஆற்றிய உரையும் அதைத் தொடர்ந்து காந்தி ஹெர்டாக் இடையேயான கடித பரிமாற்றங்கள் அக்கால விவாத முறைமையின் சித்திரத்தை அளிக்கிறது. இன்றைய உடனடி எதிர்வினைகளும் எதிர் தரப்புடன் விவாத சாத்தியமே இல்லாத நிலையை காணும்போது ஒருவகையில் கடித பரிமாற்றங்களே விவாதத்திற்கான உகந்த வடிவம் எனப் படுகிறது. கடிதத்தில் எதிர் தரப்புடன் நேரடியாக பேசுவதால் மரியாதையும் அவர் பதில் அளிப்பதற்கான சாத்தியத்தையும் திறந்தே வைக்க வேண்டி இருக்கிறது. எனவேதான் ஏழு ஆண்டுகள் கழித்தும் எந்த கசப்பும் இன்றி 1939ல் ஹெர்டாக்கால் காந்தியுடன் இவ்விவாதத்தை தொடர முடிகிறது. காந்தி ஒவ்வொருமுறையும் தனக்கு இன்னும் நம்பகமான புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை என்று தன் தரப்பு பலவீனத்தை ஒப்புக் கொண்டே விவாதத்தை தொடர்கிறார். இரு தரப்புமே தங்கள் தரப்பை வலுப்படுத்த தேவையான ‘நம்பகமான தகவல்களை’ சேகரிக்க பெருமுயற்சி எடுத்துக் கொள்கின்றனர். பேராசிரியர் கே.டி.ஷா, எட்வார்ட் தாம்சன், லெய்ட்னர், தாமஸ் மன்ரோ என பலரின் ஆய்வறிக்கைகளை ஹெர்டாக் பரிசீலித்தாலும் எதையும் அவர் ஏற்கவில்லை. துல்லியமான புள்ளிவிவரங்கள் கிடைக்க சாத்தியமில்லாத விவாத காலகட்டத்தில் அத்தகைய புள்ளிவிவரங்கள் கிடைப்பது மட்டுமே ஒற்றை அளவுகோலாக ஹெர்டாக் வாதிடுவது அவரது முன்முடிவைக் காட்டுகிறது. எவ்வாறாயினும் இதுபோன்று எதிர் தரப்புடன் ‘உரையாடும்’ விவாதங்கள் இன்றைய நோக்கில் முன்னுதாரணமானவை.
18, 19 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் பாரம்பரிய கல்வி என்பதோடு அக்கால சமூக சித்திரம், பிரிட்டிஷ் நிர்வாகத்தின் ஈடுபாடுகள், காந்தி பிரிட்டிஷாருடன் விவாதிக்கு முறை என பலவகையிலும் முக்கியமான சித்திரங்களை அளிக்கும் நூல்.
****





