Tuesday, August 20, 2019

மாமிசப் படைப்பு - நாஞ்சில் நாடன்





Chennai Senthil


பெரிய சிறப்புகள் ஏதுமில்லாத வழக்கமான நாவல். ஆசிரியர் புறவுலகை விவரிப்பதற்கு மிக அதிகப்படியான கவனம் செலுத்தியுள்ளார்.


 காலம் காலமாக வருகின்ற பணக்காரன் ஏழை, பண்ணையார் விவசாயக் கூலி இவர்களுக்கு இடையே உள்ள முரண், ஏற்றத்தாழ்வு,  உரிமைப் போராட்டம், என்று தேய்ந்து போன கதை களத்தை அடிப்படையாகக் கொண்ட நாவல். 

யதார்த்தவாத நாவல் என்ற அடிப்படையில் இதை அணுகலாம். ஆனால் வலுவான உணர்ச்சிக்களும் கதைக்கட்டுமானமும் இல்லை.


நாவலின் சிறப்பு என்றால் நாஞ்சில் நாட்டு சமூக வாழ்க்கையை, மிக விரிவாகவும் பல்வேறு நுட்பமான தகவல்களுடனும் கிட்டதட்ட ஓர் ஆய்வு நூல் அளவிற்க்கு விரிவாக விளக்குகிறது. நிலம்,பயிரிடுதல், காலநிலை, இடங்கள், தாவரங்கள், விசேஷங்கள், சமையல் என்று ஒவ்வொன்றைப் பற்றியும் பிரமிக்க வைக்கும் அளவிற்கு தகவல்கள். 


சில நேரங்களில் தகவலுக்கு இடையே ஆங்காங்கே கதாபாத்திரங்கள் வந்து செல்வது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. தகவல்கள் வெறும் தகவல்களாகவே நின்று போய் விடுகின்றன கதைக்களத்தோடு பெரிதாக ஒட்டுவதில்லை. 


இதற்கு முக்கிய காரணம் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாத மிக சாதாரணமான உவமைகள். 

பெரிய அழகியலோ தரிசனமோ இல்லாதது நாவலின் மிக பெரிய குறைபாடு.


“ஒரு தனி மனிதரை கடவுளாகவும் இரண்டு தனி மனிதர்களை தலைவர்களாகவும் கொண்டு இயங்கும் திராவிட கட்சிகள்”

"குறுக்குக் கடுக்க  வேலை செய்த அலுப்பு கூலியைக் கண்டத்தான் ஆறும்"

"வெளியே இத்தனை குதூகலத்தோடு இருக்கும் பூசாரி சடையப்ப பிள்ளை கோவிலுக்குள் புகுந்தால் வேறு மனிதர்.

வக்கிரமான ஒரு முகம் வந்து பொருந்திக் கொள்ளும் பிறவிக் சுமையை இறக்க முடியாமல் திணறும் வேதனையும் கோபமும் எரிச்சலும் கொண்ட முகம்," போன்ற சில இடங்களில் ஆசிரியரின் தன்னியல்பு வெளிப்படுகிறது.


மணவாளன்
நாஞ்சில் நாடனின் நாவல்களிலேயே மிகச்சுமாரான நாவல் இது என்று
எண்ணத்தோன்றுகிறது. நுண் விவரணைகள்(micro-detailing) ஒரு நாவலின் மற்ற
சிறப்பியல்புகளோடு(சமநிலை,தரிசனம்) இணையும்போதுதான் பொருள் கொள்கிறது.
இல்லாவிட்டால் இந்த தகவல்களை வைத்துக்கொண்டு
 கிராமிய பொருளியல் அமைப்பு செயல்படும் முறை,
விவசாயம்,வழிபாட்டுமுறைகள்,சமையல் இவற்றை மேலும் நுண்மையாக
அறிந்துகொள்ளலாம்.

  இருந்தாலும் குண்டாமுட்டி குற்றாலம்பிள்ளை, சமையல்காரன் பொன்னு,
சாமியாடி மாலையப்பப்பிள்ளை, தகவல்சொல்லி மாணிக்கம் போன்றவர்கள் ஒரு நல்ல
நாவலுக்கான தனித்தன்மைகொண்ட கதாப்பாத்திரங்கள் என்பது என் எண்ணம். கோள்
சொல்பவர்தான் என்று தெரிந்திருந்தும் குற்றாலம்பிள்ளையின் சொற்களை
ஊர்காரர்களால் தவிர்க்கமுடியவில்லை.

          பொன்னு ஆத்மார்த்தமாக சமையல் செய்யத்தான் ஒவ்வொரு முறையும்
முயற்சிக்கிறான். கலையில் அர்ப்பணிப்பின் role என்ற கேள்வி
எழுப்பிக்கொள்ள உதவும் கதாப்பாத்திரம். ஊர்காரர்களுக்கும் அவனைவிட்டால்
வேறு வழியும் இல்லை.

           மாலையப்பப்பிள்ளை சாமியாடிக்கே உரிய
ஒதுக்கமும்,சிடுசிடுப்பும் கொண்ட கதாப்பாத்திரம். மொண்ணைத்தனத்தை தன்
ஆளுமையாக கொண்டவரால் மட்டுமே செய்ய சாத்தியமான முறையாம்பிள்ளை வேலை
செய்யும் மாணிக்கம். வெண்டைக்காய், சேப்பங்கிழங்கு,உளுந்து அரைத்த அம்மி.

            நாவல் இன்னும் அதிக பக்கங்கள் எடுத்துக்கொண்டு விரிவாக
எழுத்தப்பட்டிருந்தால் இதுபோன்ற மேலும் தனித்தன்மையுள்ள
கதாப்பாத்திரங்கள் வந்திருக்கலாம். ஆனால் நாவலின் அடிப்படை
கதாப்பாத்திரங்களான கங்காதரன்பிள்ளை, கந்தையா, விக்கிரமசிங்கம்பிள்ளை
போன்ற கதாப்பாத்திரங்களின் டெம்ப்ளேட்த்தனத்தை அப்படியே தக்க
வைத்துக்கொண்டால் பொன்னு செய்த விரிவான சமையல்போல ஆகியிருக்கும்.

அடுத்து எடுத்து சொல்லத்தக்கவை நாஞ்சில் நாடன் டச் கொண்ட ஒரே சமயம்
குழந்தைத்தனமானது என்றும் ரொம்ப crude ஆனதும் என தோன்றவைக்கும்
வர்ணனைகள்:

”நிலவை வெளிவட்டத்தை நன்றாக அம்மியில் பொடித்து வீசியது போல
நட்சத்திரங்கள் சிதறிக்கிடந்தன.”

” உலக்கை அருவி கோடைகாலத்தில் நாசி அடைப்புக்காரனின் மூக்குபோல ஒழுகும்”

வெ கண்ணன்

இதற்கு முன் நான் நாஞ்சில் நாடனின் சில சிறுகதைகளைப் படித்துள்ள போதிலும்,அவரின் எந்த ஒரு நாவலையும் படித்ததில்லை. இணை வாசிப்பில், முதல் நாவலாக நாஞ்சிலின் மாமிசப் படைப்பு எனும் தலைப்பு முன்வைக்கப்பட்டவுடன், ஒரு உற்சாகம் தொற்றிக்கொண்டது.

மாமிசப்படைப்பு படிக்கும் போது ஒரு விறுவிறுப்பையும்,முடித்தவுடன் அவ்வுளவுதானா என்கிற எண்ணத்தையும் கொடுத்தது ஒரு விந்தைதான். நாஞ்சிலின் பிற நாவல்களைப் படிக்கவேண்டும்.

மிகவும் பிடித்ததை தெய்வத்திற்கு படைப்பதென்பது நிவேதனம்; பிடிக்காததை கழித்துக்கட்டுவதற்கும் படையலைத் துணைக்கு அழைக்கலாம்போலும். கதைக்களம், நிலச்சுவாந்தார்களுக்கும், முன்னேற எத்தனிக்கும் பண்ணை வேளையாட்களுக்கும் இடையில் நடப்பதுதான்.


நீர்வெளி,நிலவெளி விவர்ணணைகள், நாஞ்சில் மொழியில் படிப்பதனாலேயே, மிக இலகுவாக கதைப்பிரதேசத்துடன் ஒன்றமுடிகிறது. துணைக் கதாபாத்திரங்கள் அவ்வப்பொழுது அதிகபட்ச அறிமுகத்துடன் வந்து தன் கடன் கழித்து செல்கிறார்கள். புன்முறுவலுடன் படிக்க நாஞ்சிலின் சொல் தெறிப்புகள் நெடுக :

ஆனாலும் எதோ ஒரு நிறைவிண்மை. கிட்டத்தட்ட முழு நாவலுமே ஒரு பெரிய கதைத் தளத்திற்கு முன்னோட்டம் போல் விரிந்து திடீரென முடிந்ததாலா ? 80 களில் எழுதப்பட்டதாக இருந்தபோதும்,வெகுஜன புரட்சி நாயகன் சாய்வது போன்ற எதிமறை முடிவாலா ? கொள்வதற்கு ஏதுமில்லாததாலா ? சொல்லத் தெரியவில்லை ? 
----------------------------------------------------------------------------------------------------
Navin Gssv
யதார்த்தவாத படைப்புகளில் மிக சிலவே நம்மை கவர்ந்திழுத்து ஒரே மூச்சில் வாசிக்கச் செய்கின்றன. கற்பனாவாதம் எப்போதுமே நமக்கு அணுக்கமானவை, நம் வாழ்க்கை சூழலுக்குள் எட்டாத நாம் அணுபவிக்க இயலாத தளங்களாக அவை விரிந்து செல்பவை. ஆனால் யதார்த்தவாதமென்பது வாழ்ந்து பழகிய கணங்களை, ஏற்கனவே நமக்கு ஏற்பட்ட அனுபவங்களை மீண்டும் மொழியில் வாசிப்பது. அதனாலேயே பெரும்பாலான யதார்த்த நூல்கள் வெற்றி பெறாமல் போகின்றன.
ஒரு வாசகன் ஒரு நாவலை படித்து முடிக்க எடுக்கும் சிரத்தை எவ்வளவு முக்கியமோ அதே அளவு அவனை கட்டியிழுக்கும் விசையை (இங்கே நான் கட்டியிழுக்கும் விசை எனக் குறிப்பிடுவது கேளிக்கை அம்சங்களையோ, விளையாட்டு தனமான தந்திர யுத்திகளையோ அல்ல. சீரான வாழ்க்கையோட்டமும், நேர்த்தியான கதையோழுக்கும் அமையப் பெற்றாலே நல்ல இலக்கிய தரம் வாய்ந்த நாவல்கள் உருவாகிவிடும்) அவனிடம் செலுத்துவது ஆசிரியனின் கடமையாகும்.
அந்த வகையில் நாஞ்சில் நாடன் தனது மாமிசப் படைப்பில் தனக்கே இயல்பான இரண்டு வழிமுறைகளைப் பயன்படுத்துகிறார்.
  தனக்கு சொந்தமான நாஞ்சில் நாட்டு வளத்தை எடுத்துக் கொண்டு, அவ்வியற்க்கையின் வழியே தனக்கே சொந்தமான தனி ரசனையை வாசகனுக்கு படைத்தல். இவ்வியல்பு மாமிசப் படப்பு முழுவதும் இலையோடுவதைக் காணலாம்.
  இரண்டு தனக்கே உரித்தான நகைச்சுவை மொழிகளையும், அத்தன்மைக் கொண்ட கதாப்பாத்திரங்களையும் பயன்படுத்துதல்.
  குண்டாமுட்டி குற்றாலம்பிள்ளை அதன் உச்சம். இத்தகைய மனிதர்களை நாம் இரு வேறு வடிவில்/சந்தர்ப்பத்தில் நம் வாழ்வில் பயணிக்க அனுமதித்திருப்போம், ஒன்று அவர்கள் கோள்மூட்டி விடுவதை அறிந்த அவர் உண்மை தன்மையை கலையவிடாமல் நம் மனதிற்குள்ளே சிரித்துக் கொண்டிருப்பது, இரண்டு நம்மை அறியாமலயே அந்த போலி உண்மையை நம்பி நாம் அதனோடு பயணிப்பது குற்றாலம்பிள்ளை அதில் இரண்டாம் வகை மிகத் தந்திரமான நாரதர். எதேர்ச்சையாக போகிற போக்கில் நம்மை அவர் சொல் வசம் இழுத்துக் கொண்டு செல்பவர்.
  கிட்டதட்ட நாவல் முடியும் தருணத்தில் கூட புது புது கதாப்பாத்திரங்கள் முலைத்துவருகின்றனர். அவற்றுள் பொன்னு தன் வித்யாசமான சமையல் கலை மூலம் நம் மனதில் நின்றுச் செல்கிறான். “புளிசேரி இம்புட்டுப் போல வச்சிருக்கியே… எல்லோருக்கும் பத்துமா?” எனக் கேட்கும் போது “அதுக்கென்ன பாட்டா கொஞ்சம் நீட்டிருவோம்” என பதில் சொல்லுமிடத்தில் அவன் ஆளுமையின் இயல்பை ஒற்றை வரியில் சொல்லிச் சென்று நம்மை அதனோடு ஒன்றச் செய்கிறது, சமையல் கலை உச்சத்தைத் தொடும் தருணங்கள் அதிலிருந்து எழுந்து வரும் எதார்த்தமான நகைச்சுவை/வெகுளி தன்மைகள், லாயர் செல்லம்பிள்ளை வீட்டில் கூட்டாஞ்சோறு செய்யும் போது உப்பு கூடியதால் அதனை துப்பி அவனை ஏசும் லாயரை நோக்கி, ”ஒரு சொல்லு கூடிருச்சி, கொஞ்சம் தேங்காய் திருவிப் போட்டு கிண்டிறேன்.” என சொல்லுமிடத்தில் எதார்த்தமான வெகுளி தன்மையும், போகிற போக்கில் எடுத்து செல்லும் நகைச்சுவைத் தன்மையும் தென்படுகின்றன.
  இவை இரண்டு தன்மைகளும் போதுவான வேறு சில படைப்பாளிகடமும் நாம் காண இயலும் ஆனால் இதனைத் தாண்டி நாஞ்சில் நாடனுக்கே உரித்தான ஒரு தன்மை உண்டு அதனை இது நாள் வரையில் எந்த எழுத்தாளனும் தட்டிப் பரிக்கவுமில்லை, இனியும் தட்டிப் பரிக்கப்போவதில்லை என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அது அவரிடமுள்ள சமையல் இரசனை. நாகர்கோவில் பொன்னு சமைக்கும் மாமிசப் படைப்பானாலும் சரி, திருநெல்வேலி பிள்ளைமார் வீட்டில் சமைக்கும் அவியல் சாம்பாரானாலும் சரி நாஞ்சல் அதனை ஒரு பிடி பிடித்த பின் தான் விடுகிறார். சமையலிலேயே தன் ஆளுமையின் உச்சத்தைக் கண்டடைகிறார். வண்ணக்கடலில் வரும் பீமனைப் போல் !
இத்தனை சுவாரஸ்யமான அம்சங்கள் நிறைந்திருந்து நாவல் தன் முழுமையை எட்டவில்லை என்றே நினைக்கிறேன். நாஞ்சில் பாணியில் சொல்ல வேண்டுமென்றால் வடை, கரி, பாயசம், கூட்டு, பொரியல், வத்தக் குழம்பு என பிரமாதமாக சமைத்துவிட்டு சாதத்தை கொழைய விட்டுவிட்டார்.
முக்கிய கதாப்பாத்திரங்களான கந்தையா, கங்காதரம்பிள்ளை தன்னிகராக தன் ஆளுமையை முன் வைக்க இயலவில்லை. நாவலின் மையக் கதாப்பாத்திரமென்பது மனிதரில் வாழ்வது அதுவும் ஒரு வாழ்வியல் பாத்திரமாகவே வாழக்கூடயது. ஒப்புநோக்கி உதாரணம் கேட்டால் ஜெயகாந்தனின் ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்  நாவலில் வரும் ஹென்றி, காடு நாவலில் வரும் கிரி. இதனை இங்கே கூறுவது ஒரு உதாரணத் தன்மைக்காக மட்டுமே தவிர இரண்டையும் நான் ஒப்பிடவில்லை. இதனை எழுதும் போது என் மனதில் உடனே உதித்த கதாப்பாத்திரங்கள். இந்த கதாப்பாத்திரங்கள் ஏற்படுத்திய தாக்கத்தின் அளவிற்கு கந்தையா இடம் பெறாமல் போனதே சற்று சுமார் தன்மைக் கொள்ளச் செய்கிறது.
நாவல் இறுதி பாகம் கூட மடமடவென கடந்து சட்டென முடிந்துவிடுகிறது. சாம்பாரில் தொடங்கினால் வத்தக் குழம்பு, ரசம், மோர்குழப்பு, பாயசம் என இறுதியில் தயிர் வருவதே உவப்பானது. சட்டென தயிர் வந்துவிட்டதில் கிடைக்கும் ஏமாற்றமே இந்நாவலின் பலவீனமாக உள்ளது.
இத்தனை போதாமைகளையும் மீறி மாமீசப் படைப்பு காலங்கடந்து நிற்பதற்கான காரணம் அது நாஞ்சில் நாடனுடைய தனித் தன்மைகளால் மட்டுமே எனச் சொல்ல வேண்டும். ஒரு சீறான வாசிப்பு அனுபவத்திற்கும், தன் வர்ணனையால் வாசகனைக் கட்டியிழுக்கும் தன்மைக்கும் எவ்வித குறைவும் இல்லாமல் இப்படைப்பை இயற்றியிருக்கிறார் நாஞ்சில். நாஞ்சில் நாட்டு வர்ணனக்காக வேணும் இந்நாவல் ஒரு முறை படிக்க வேண்டுமென்பது என் எண்ணம்.


விஜயபாரதி
சென்னை

நாஞ்சில் நாடனின் தாத்தா கோவில் நிர்வாகம் தொடர்பான பிரச்சனையில் கத்தியால் குத்தப்பட்டார்.தந்தையிடமிருந்து வாய்மொழியாகக் கேட்டறிந்த அந்த வரலாற்றை நாஞ்சில் நாடன் தனது நிலத்தின் சமூகக்கட்டமைப்பின்மீது நாவல் வடிவத்தில் பொருத்திப் பார்க்கும்போது தாத்தாசுப்பிரமணியபிள்ளை கந்தையாவாக உருவெடுக்கிறார்.  

முதல் அத்தியாயத்திலேயே கூலிவேலை செய்யும் அறுப்படிப்பு குழுவினருக்கும் நிலவுடைமை கொண்டபண்ணையார்களுக்கும் இடையே இருக்கும் உறவும் எல்லைகளும் தெளிவடைகின்றன. ஆண்டான்-அடிமைகதை என்று குறுகிய வகைப்படுத்தலினுள் அடைக்கலாம்தான். இருப்பினும் இந்த நாவலில் காட்டுவதுபொதுவாக திரைப்படங்கள் காட்சிப்படுத்தியது போன்று நிலவுடைமையாளர்முன் துண்டை அவிழ்த்துகக்கத்தில் அழுத்தியவாறு குனிந்து வாய்பொத்தி நிற்கும் விளிம்பு நிலை அல்ல. கன்றை மருட்டிஇளம்பெண்ணை அச்சுறுத்தும் நிலவுடைமையாளரின் மகனை உச்சிமயிரைப் பிடித்திழுத்து அறைவிடும்துணிவும் வாய்ப்பும் கொண்ட அறுப்படிப்புக் குழுவினர் வாழும் சமுதாயம். 

நாஞ்சில் நாடன் தன்னுடைய கட்டுரையில் கந்தையாவை "பிள்ளை" சமூகத்தைச் சேர்ந்தவர் என்று சுட்டும்வகையில் "கந்தையாபிள்ளை" என்றே விளிக்கிறார். மற்றொரு அத்தியாயத்தில் அங்குள்ள பள்ளியில்படிக்கும் தலித் குழந்தைகள் பற்றிய குறிப்பு வருகிறது. ஆனால் நாவலின் உள்ளடக்கத்தில் வேறெங்கும் தலித்சமூகத்தினர் இல்லை. இக்கதைக்குத் தேவையில்லை என்று ஆசிரியர் நினைத்திருக்கலாம். எனவே நாவலில் துலங்கிவரும் முரண் இருவேறு விளிம்பில் நிற்கும் சமூகத்தினரிடையே திரண்டு வருவது அல்ல. நிலவுடைமைதவிர மற்ற கூறுகளில் ஏறக்குறைய சம அந்தஸ்தில் இருக்கும் இரு குழுவினருக்கிடையேயான மோதலாகவேபார்க்க முடிகிறது. 

சூழல் குறித்த விவரணைகள் நம்மை அந்த கிராம வாசிகளில் ஒருவராக நிறுத்தும் வல்லமைகொண்டிருக்கின்றன. விரைந்தோடும் நிகழ்வுகளுக்கு முன்னுரையாக வரும் விவரணைகள் அவசியமானவேகத்தடையாக அமைகின்றன. நிகழ்வுகளை மட்டும் அடுக்கிப்பார்த்தால் உள்ளீடற்ற கதையோட்டமாகவடிவெடுக்கும் அபாயம் இருப்பதாகத் தோன்றும் அளவுக்கு விவரணைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. 

எலி வளையைத் தோண்டிச் செல்லும் சிறுவர்கள் அந்த வளையை எலி அடைத்து வைத்திருப்பதைக் கண்டுகொண்டாடும் இடம் ஒரு உதாரணம். இரு வரிகளில் கடந்து செல்லும் நிகழ்வு. ஆனால் அத்தகைய இடத்தில்நின்று எலி எப்போது தப்பி ஓடிவரும் என்று நெஞ்சு துடிப்பதை தம் வாழ்வில் அனுபவித்தவர்களுக்கு இனியநினைவாக எஞ்சும் வரிகள்.

அறுப்படிப்புக் குழுவினர் தாம் முன்னேற எடுக்கும் முயற்சிகளையும், அதிகார வர்க்கத்தின் ஒடுக்குமுறையும்ஊடும் பாவுமாக்கி நாவலை நெய்திருக்கிறார். நாவல் முழுக்க பல புதிய நாஞ்சில் நாட்டு சொற்கள்புழங்கினாலும் அவை தடையாகத் தோன்றவில்லை. அவ்வப்போது இணையத்தில் தேடிப் புரிந்துகொண்டுமுன்செல்வதும் உவப்பாகவே இருந்தது. 


நாவல் முழுக்க வாசனைபோல் பரவியிருக்கும் நாஞ்சில் நாடனின் நகைச்சுவை நாவலுக்கு பெரும்பலம். "நெஞ்சத்து வஞ்சங்களைப் பிளந்து காட்ட நரசிங்கத்தின் நகங்களுக்கே கூர்மை போதாதபோது..." போன்று பக்கத்துக்கு ஒன்று என நூறுக்குமேல் உதாரணம் காட்டமுடியும்.

ஒரு படைப்பு சிறுகதையா, நீள்கதையா அல்லது நாவலா என்ற கேள்விக்கு ஆசிரியர் சொல்லும் பதிலேதொடக்கப்புள்ளி. ஆசிரியர் இதனை நாவலாகவே சுட்டுகிறார். எனினும் நாவல் முடியும்போது ஆசிரியர்அளவுச்சாப்பாட்டில் பாதியை மட்டுமே மட்டுமே நமக்கு பரிமாறிய உணர்வு. வேண்டுமென்றே வளர்க்கத் தேவையில்லைதான், ஆனால் சாந்தப்பன், இசக்கியம்மாள், கந்தையாவின் குழந்தைகள் போன்ற கதாபாத்திரங்களின் பார்வை நாவலில் இல்லாதது எட்டு முழ வேஷ்டியின் சிறு துண்டு மட்டுமே நம் கைக்குக்கிடைப்பது போன்றது. வேட்டி இல்லாதபோது தன்னளவில் துண்டு பயனுள்ளதே.

## முதலாளிகளும் பாட்டாளிகளும்

பண்ணையார் கங்காதரம் பிள்ளையின் இளக்காரத்துக்குப் பதிலாக கந்தையா மார்பளவு உயரமானநெற்கட்டைத் தூக்கிச் சென்று களம் சேர்க்கும் அறிமுக நிகழ்விலிருந்தே நாம் கந்தையாவை பதற்றத்துடன்பின்தொடர்கிறோம். ஓடியாவது சேர்ந்துவிடடா என்று வேண்டிக்கொள்ளும் நம் முன் நிதானமாக நின்றுதலையிலிருக்கும் நெற்கட்டைக் கொண்டு முருங்கைக்கிளை ஒடிக்கும் கந்தையாவின் பிம்பம் நல்ல ஆரம்பவிசையைக் கொடுக்கிறது. 

அறுப்படிப்பு குழுவினரின் உழைப்பு சுரண்டப்படுவதை சுட்டும் அத்தியாயம் அச்சமூகத்தின் பொருளியல்,வேளாண்மையுடன் இணைந்து சுழல்வதைக் காட்டுகிறது. பயிர் வளரும்வரை சோம்பியிருக்கும் வேலைஇல்லாத காலங்களில் கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். எண்பது ரூபாய்க்குக் கீழேபோகாத ஒரு கோட்டை நெல்லுக்கு ஐம்பது ரூபாய் கடனாகக் கொடுக்கிறார்கள். இப்போதைய கடன்அட்டைகள் வங்கிகளுக்கு ஈட்டித்தரும் லாபத்தைவிட அதிகம். அடுத்த அறுவடையின்போது கொடுத்துவிடவேண்டும் என்பது ஒப்பந்தம். எனில் எதிர்காலத்தையும் அடகு வைத்தாகிவிட்டது. மீட்பே இல்லை.

வருடம் முழுதும் உழைத்தும் தனது அறுப்படிப்பு குழுவினர் சில சமயம் எதிர்காலக் கூலியைக் கூட அடகுவைக்கும் நெருக்கடியைக் கண்டு சோம்பிக்கழிக்கும் நாட்களை பயனுள்ளதாகக் கழிக்கவழிசெய்கிறான். நாவலின் ஒரு மையம் கந்தையா புறம்போக்கு நிலத்தில் தன் அறுப்படிப்பு குழுவினரைக்கொண்டு சீர்செய்து உருவாக்கும் காய்கறித்தோட்டம். அந்த நிலம் வாசகர்கள் விரித்தெடுக்கும் உருவகமாகவளரும் வாய்ப்பு கொண்டது.

இந்த நாவலை வாசிக்கும்போது இணை வாசிப்பாக மற்றொரு திரியில் பொதுவுடைமைக் கட்சியின்முதலறிக்கையையும் வாசித்துக்கொண்டிருந்தேன். கந்தையா குழுவினர் சீர்செய்யும் நிலத்தைபொதுவுடைமைக் கொள்கையின் ஒரு சிறிய மாதிரியாக அளவிடலாம் எனத்தோன்றியது. 

கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையில் முதலாளிகளை எள்ளி நகையாடும் கூற்று ஒன்று உண்டு:

> முதலாளித்துவ சமுதாயத்தின் உறுப்பினர்களில், உழைப்பவர்கள் சொத்து எதுவும் சேர்ப்பதில்லை,சொத்துகளைச் சேர்ப்பவர்கள் உழைப்பதில்லை.

கந்தையா வடிவமைத்த தோட்டத்தில் அனைவரும் உழைப்பவர்களே. அனைவருக்கும் விளைச்சலில் பங்குஉண்டு. அந்நிலமும் விளைச்சலும் யாருடைய தனிச்சொத்தும் இல்லை. தோட்டம் தொடங்கும் முன்பூதலிங்கத்தின் வீட்டில் நடக்கும் கூட்டம் கிட்டத்தட்ட கட்சிக்கூட்டம்தான். 

பலரின் உழைப்பில் தழைத்து வளரும் தோட்டமும் காய்கறிகளும் வேண்டுமென்றே மாடுகளை விட்டுஅழிக்கப்படும்போது அதனை முதலாளித்துவத்தின் எதிர்ப்பாக இணைநிறுத்திப்பார்க்கலாம். அந்தஎதிர்ப்பின் ஊற்று எங்குள்ளது என்று தேடிச்சென்றால் விக்கிரமசிங்கம்பிள்ளை மாடுகளை தோட்டத்தினுள்அவிழ்த்துவிடும் நிகழ்வில் சென்று முட்டுவோம். நன்கு விளைந்து நிற்கும் பசுமையை அழிக்க ஒருவர் மனதில்வரும் வெறி என்ன வகை மனநிலை? தன் மகன் ஒரு பெண்ணிடம் வம்பு செய்ததை கந்தையா கண்டித்ததுமட்டுமே காரணமா? வாசகர்கள்தான் இதனை அசைபோடவேண்டும்.

கந்தையாவின் மன ஓட்டத்தில் இயல்பாகத் தோன்றும் பழிவாங்கும் வாய்ப்புகள் ஆழத்தில் உறையும்வன்முறையினை திரை விலக்கிக் காண்பிக்கின்றன. ஆனால் கந்தையா அவசரகதியில் மரத்துக்கும்,மாடுகளுக்கும் விஷம் வைப்பது என்று அழிவுப்பாதையில் இறங்கி நடப்பவன் அல்லன். "ஆட்சேதம் இல்லாமல்,பொருட்சேதம் இல்லாமல்" விஷமிகளுக்குப் பாடம் புகட்ட நினைப்பவன். வன்முறையைவிட மாற்றுவழியைத்தேடும் முனைப்பு ஒத்திசைவைத் தருகிறது. கூடவே உழைக்காமல் வந்து சேர்ந்த நிலவுடைமை மீதுதொழிலாளி வைத்திருக்கும் மதிப்பை "இவனுகெல்லாம் எட்டு ஏக்கரும் பத்து ஏக்கரும் அம்மைக்குவயத்திலேருந்து வரச்சிலேயே கூட கொண்டா வந்தானுகோ? எவனோ எழுதிவச்சான்" என்று தொடங்கும்கூரிய விமரிசனம் மூலம் பதிவுசெய்கிறார். 

அழிக்க முடியாத அளவு வலுவான தோட்டம் வேண்டுமென்றால் என்ன செய்யலாம்? வாழையும் தென்னையும்பயிரிடலாம். அதனையும் முதலாளித்துவம் அழித்தால்? 

## வர்க்கப்போர் 

பந்தயத்தில் வென்ற பின் பரிசைக் கொடுக்காத நிலவுடைமையாளருடன் சண்டை, வம்பு செய்யும் மேல்தட்டுஇளைஞனை அறைந்து கண்டித்தது, புறம்போக்கு நிலத்தில் தோட்டம் போட்டு தன் அறுப்படிப்பு குழுவினரைகடனிலிருந்து மீட்க முனைந்தது, தட்டிக்கேட்ட பாத்தியக்காரருக்கு ரூபாயும் காய்கறியும் கொடுத்துசரிகட்டியது, தோட்டத்தை நாசப்படுத்திய விக்கிரமசிங்கம்பிள்ளையின் கள்ளத்தனத்தை ஊர்ப்பெரியவர்கள்முன் வெளிச்சம்போட்டுக்காட்டியது என்று அதிகாரத்துக்கு எதிரான கந்தையாவின் குற்றங்கள் பெருகிஅழுத்தம் அதன் எல்லையை அடைகிறது. 

"மொறட்டு நியாயக்காரன்" என்றாலே அதிக அளவில் எதிரிகளை ஈட்டிக்கொள்ள வாய்ப்பிருப்பவன்என்றுதானே பொருள். இருந்தாலும் நியாயத்தின் பக்கம் நிற்கும் பலர் கந்தையாவுக்கு உடந்தையாகஇருப்பதால், கங்காதரம்பிள்ளைகூட தட்டிக்கேட்க முயலவில்லை. கந்தையா பார்த்தியக்காரருக்கு பணமும்பொருளும் கொடுத்து "சரிகட்டுவதையும்" நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். "மொறட்டு நியாயக்காரன்"தானே தவிர முற்றிலும் நியாயக்காரன் அல்லன்.

முதல் அத்தியாயத்தில் பூதலிங்கம் மற்றும் குழுவினர் கந்தையாவின் சவாலைக்கண்டு மெலிதாகமனப்புழுக்கம் அடைவதைத் தவிர உட்குழுப்பூசல்கள் குறித்த எந்த முகாந்திரமும் உள்ளடக்கத்தில்காணக்கிடைக்காதது ஒரு இழப்பே. அப்படியென்றால் கந்தையாவை அகற்றவேண்டும் என்ற கட்டாயம்யாருக்கு வந்திருக்கும்? எப்போது?  நாவல் இக்கேள்விகளுக்கான பதில்களை விளக்கவில்லை. பதில்கள் வாசகஊகத்துக்கே விடப்பட்டுள்ளன.

கந்தையா இறுதியாகக் கொடுத்த அழுத்தம் கங்காதரம்பிள்ளைக்கே எதிரானது. அவரது நேர்மையைக்கேள்விகேட்பது. ஊர்க்கூட்டத்தில் "அதிகாரத்துக்கு எதிராய் எழுந்த ஒற்றைக் குரல்", அதுவும்புள்ளிவிவரங்களுடன். நேர்மையாளர்களால் நேரும் இழப்பை அதிகார வர்க்கம் ஓரளவுக்கேபொருத்துக்கொள்ள முடியும். ஊர்மக்கள் முன்னும் கந்தையாவிடமும் நல்ல பேர் வாங்கவேண்டும்என்பதற்காக கோவில் நிலத்தில் விளைந்ததை அவ்வாறே கணக்கில் எழுத முடியுமா என்ன? அப்படியேஎழுதினாலும் விற்ற விலையை திரிக்காமல் பதிவுசெய்வதனால் கோவில் முதலடிக்கு என்ன ஆதாயம்?இத்தகைய பொருளாதார இழப்புகளை எடைபோட்டுப் பார்த்தால், கந்தையாவை துடைத்தெறிவது எளிதானமாற்றுவழி.

## காற்புள்ளி

அதிகாரத்துக்கு எதிரான போரில் கந்தையாவுக்கு நேர்ந்ததைப் பாதியில் நிறுத்தி ஆசிரியர் முற்றுப்புள்ளிவைக்கிறார். கந்தையா செல்ல வாய்ப்பிருக்கும் இரு வழிகளைக் கொண்டு அதனை காற்புள்ளியாக்கித்தொடர வாசகர்களுக்கு சுதந்திரம் உண்டு. மீளமுடியா வழி ஒன்று. அதில் எனக்கு உடன்பாடில்லை. அந்த"மொறட்டு நியாயக்காரன்" மீண்டெழுந்து கூறுவடியிலிருந்து பொதுவுடைமை முதலடியாக வளரவேண்டும்என்பதே விருப்பக்கனவு. அவனும் கங்காதரம்பிள்ளைபோல் பண்ணையார் வர்க்கத்தின் ஓர் அங்கமாகதிரிந்தெழுந்தாலும் நாவலில் அது ஏற்கத்தக்கதே. ஏனென்றால், நாஞ்சில் நாடனின் தாத்தாகத்திக்குத்திலிருந்து குணமாகி மீண்டார் என்பதே வரலாறு.

பின்குறிப்பு: நாவல் முடிந்து மீண்டும் தேடியபோது கந்தையாவுக்கு 45 வயது என்பது அதிர்ச்சிதான். இங்கு அவன் இவன் போன்ற ஏகவசனங்கள் கந்தையா சற்று அணுக்கமாகிவிட்டதால் விளைந்தவை. மன்னித்தருளவும் :) 


Ayutha ezuthu (krishnamoorthy)

கதை துவங்கி நான்காவது பக்கத்திலே தெரிந்துவிடுகிறது  கூலி தொழிலாளர்களுக்கும் 
பண்ணையார்களுக்கும் இடையேயான  உரிமை போராட்டம் கொண்ட பழைய காலத்து கதை. எனினும் என்னை நாவலில் இழுத்தது நான் நாஞ்சில் வட்டாரத்திற்க்கு புதியவன் என்பதால் (இலக்கிய வாசிப்பிற்க்கும் புதியவன்). 

கூறுவடி- வயலில் வேலை செய்பவர்களின் தலைவர்

ஒக்கல் - இடுப்பு

சமுண்டுதல் - குதித்தல்

போன்ற வட்டார வழக்கு வார்த்தைகளை தேடி தேடி படித்து புதிய வார்த்தைகளை தெரிந்து கொண்டதில் ஓர் அக மகிழ்வு.

நாஞ்சில் வட்டாரத்தின் நிலங்கள், அவர்களின் சமூக முறை, விவசாயம், உணவு ஆகியவற்றை சிறப்பாக பதிவு செய்தார். ஆனால் கதை மாந்தர்கள் அனைவரும் செதுக்கப்பட்ட வடிவங்களிலே இருந்தனர். மானுட மனதின் நுட்பங்கள் அல்லது மனதின் எதார்த்தம் வெளிப்பட்டதாக எனக்கு தெரியவில்லை. 

     குறிப்பெடுத்து விமர்சனம் எழுதும் அளவிற்கு இன்னும் தேர்ச்சி பெறவில்லை, அடுத்தடுத்த நாவல்களில் முயற்சிக்கிறேன்...

Madhan.S 

பலி கேட்கும் சிறு தெய்வங்களுக்கு பூப்படப்பும், சைவப்படப்பும் மட்டும் நிறைவு அளிப்பதில்லை, சமயங்களில் மாமிசப் படப்பும் தேவையாகிறது. மரத்தடிகளிலோ இல்லை தெருமுனை கோவில்களிலோ தன் இருப்பை உணர்த்திக்கொண்டு அமைதியாக இருந்து விடுவதில்லை அவை, தனக்கான மவுசு குறைகையிலோ, தனது அதிகாரத்தை பற்றி மக்கள் மனதில் சந்தேகம் அரும்புகையிலோ தவறாமல் சாமியாடியின் கனவில் வந்து திருவிழாவையும் படையலையும் வாங்கி கொள்கிறது.

மாங்கோணம் நாஞ்சில் நாட்டின் நடுப்பகுதியில் அமைந்த சிற்றூர். மலைகளும், ஆறுகளும் எல்லைகளாய் அமைய ஆற்றுப் பாசனம் குளத்து பாசனம் என நீருண்டு வாழும் நெல்வயல்கள் நிறைந்த ஊர். ஊரின் முதலடி கடுவாய் (அவர் தொண்டை கனைத்து பேசுவதை கேட்டிருந்தால் உங்களுக்கு பெயர் காரணம் விளங்கும்) கங்காதரம்பிள்ளை மற்றும் அவரது மைத்துனன் விக்ரமசிங்க பிள்ளைக்கும் அதே கிராமத்தின் கூறுவடி கந்தையாவிற்குமான மோதல்களே இந்த நாவலின் மையம். அந்த மோதல்களுக்கு ஊற்று கண்ணாய் இருப்பது அதிகாரத்தை கேள்வி கேட்கும் தன்மையையும், அதற்கான ஆதரவும், அவன் எய்தி விடக்கூடிய பொருளியல் வளர்ச்சியும்.

கடும் வெய்யிலில் வரப்பில் குடைக்கடியில் நின்று காப்பி குடித்து கொண்டு "ஒரு கெட்டுல எவ்வளவு நெல்லுடா இருக்கும்?", "பந்திரெண்டு மரக்கா கூட இருக்காதா?" என இளக்காரமாய் கங்காதரம் பிள்ளை கேட்கையில், அதற்கு மேல் இருந்தால் "அந்த கெட்டுல உள்ள மொத்த நெல்லையும் எங்களுக்கு விட்டிருகேரா.." என்கிறான் கந்தையா. சரி என போட்டிக்கு சம்மதித்து விட்டு கடைசியில் குறுணி நெல் அளந்து எடுத்துக்கொள்ள சொல்கையில், வேண்டாம் என கந்தையா வெளியேறுகிறான். அங்கு தொடங்கும் அந்த பிளவு, ஒரு பெண்ணை சீண்டியதால் அவரது மைத்துனன் மகன் கந்தையாவிடம் அடி வாங்குகையில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்கிறது.

முதல் இரண்டு அத்தியாயங்களிலேயே பண்ணையார் இருவருக்கும் கந்தய்யாவிற்குமான மோதலை நாஞ்சில் இயல்பாக கட்டமைத்து விடுகிறார். எளிய காரணங்களாய் அவைகளை தவிர்த்து விட்டு கங்காதரம் பிள்ளையாலும் விக்ரமசிங்க பிள்ளையாலும் மேலெழுந்து சென்று இருக்க முடியும். ஆனால், அவர்கள் மனம் இனி கந்தையாவை எப்படி சிக்க வைக்க வேண்டும் என்பதிலும், அவன் மீது எப்படி மேலும் வெறுப்பை வளர்த்து கொள்ள வேண்டும் என்பதிலேயே இருக்கிறது. உதாரணமாக, கோவிலில் இரவு தீப ஆராதனைக்கு அரை மணி நேரம் கழித்து வருவது (அதற்கான காரணம் சொல்லப்பட்டாலும்), கோவில் திருவிழா நடத்துவது பற்றி பேசுகையில் அதிக படியான நெல் கேட்பது என. கந்தையாவை அழிப்பதற்கு தனக்கு தாம சொல்லி கொள்ள காரணங்கள் தேடி கொள்வது போலவே அதற்கடுத்தது நிகழ்வுகள் அமைந்து உள்ளது. 

நேரடியாக உழைப்பாளிக்கும் முதலாளிக்குமான வர்க்க மோதலாக கட்டமைக்க பட்டிருந்தாலும், கந்தையா, கங்காதரம் பிள்ளை, குண்டமுட்டி குற்றாலம் பிள்ளை ஆகியோரின் உளவியலை நேர்த்தியாக சித்தரித்தது மூலமாகவே இது மேலும் நுட்பமான படைப்பாகிறது. கூலி வேலை செய்து கொண்டு, நெல் அடிப்புக்கு பிறகு சில மாதங்கள் வெட்டியாய் இருப்பது தான் தன்னை போன்றோர் முன்னேறாததற்கு காரணம் என புரிந்து கொள்ளும் கந்தையா, கிராமத்து மக்களுடன் சேர்ந்து தோட்டம் அமைக்க முடிவு செய்கிறான். அதற்கு பின் அவனுக்கு பண்ணையார்களிடம் சண்டை போட்டு கொண்டு இருப்பது கூட வீண் என்றே தோன்றுகிறது. விக்ரமசிங்க பிள்ளையை அவமான படுத்தும் இடமும் ஒரு எள்ளலுடனே செல்கிறது. கந்தையாவின் தோட்டம் அழிக்கப்பட்ட பின், ரௌத்திரம் கொண்டு விக்கிரமசிங்க பிள்ளையை அழிக்க வேண்டும் என நினைத்தாலும், அதிலிருந்து மீண்டு நேர் நிலையோடு மீண்டும் தோட்டத்தை உருவாக்கும் இடம் மிகுந்த உயிர்ப்புடடன் சித்தரிக்கப் பட்டுள்ளது. பல ஊடு பாவுகள் இணைந்து மிக பெரிய வலையாக செல்வதற்கு வாய்ப்பிருந்தும் கத்தரிக்கப்பட்டு சுருக்கமான வடிவமாகவே நாவல் விஞ்சுகிறது. அவை விரிந்து சென்றிருந்தால் இன்னும் சிறப்பான நாவலாய் வந்திருக்க கூடும்.

இறுதி அத்தியாயங்களில் திருவிழா காட்சிகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாய் கங்காதரம் பிள்ளை தன் அதிகாரத்தை இழந்து, அவரது நேர்மையும் முதல் மரியாதையும் கேள்விக்கு உட்படுகையில் திருவிழாவில் தனக்கான மாமிச படப்பை வாங்கி கொள்வதுடன் நிறைவடைகிறது நாவல்.




Swetha,bangalore
வலிமை வாய்ந்த கோலியாத், அவனைத்  தன்னம்பிக்கை நிரம்ப எதிர்கொள்ளும் தாவீது -இந்த விவிலிய சித்திரத்தை ஆதிக்க மனம் படைத்த நிலதாரர்,  அடிபணிய மறுக்கும்உழைப்பாளி என இருவேறு துருவங்கள் கொண்டு நாஞ்சில் மண்ணான மாங்கோணத்தில்அரங்கேற்றியிருக்கிறார் ஆசிரியர்.

நாவலின் மையப்பாத்திரமாக வரும் கந்தையா “ஒரு மொறட்டு நியாயக்காரன்". அவன் ஒன்றுசெய்தால் சரியாகத்தான் இருக்கும் என்று ஊர் மக்களால் மெச்சப்படுபவன்.
ஒரு வகையில் சுடலைமாடன், புலைமாடன், கழுமாடன், முண்டன், முத்துப்பட்டன், பூதத்தான்,வல்லரக்கி ஆகிய காவல் தெய்வங்கள் போல் மூர்க்க குணம் படைத்தவனாய்,மாங்கோணத்தைக் காக்க வல்லவனாய் வளம் வருகிறான். அதே சமயம் தோட்டத்தைக்காக்கத் தவறவிடும் போதும், அதிகாரியிடம் பணியும் தருணத்திலும்  பலகீனம் கொண்டஅற்ப மானுடனாக இருக்கிறான்.

கந்தையாவின் பாத்திரத்தை அளவுகோலாக வைத்து மற்ற பாத்திரங்களை அளவிடும் போதுவாசிப்பு முழுமைபெறாத உணர்வு மிஞ்சுகிறது. சுவாரஸ்யமான விவரனைக் கொண்டுஅறிமுகமாகும் பூசாரிப்பாட்டா சடையப்பப் பிள்ளை, வைரவன் சாமி கொண்டாடிமாலையப்பபிள்ளை,
‘முத்து விலாஸ்’ மீனாட்சியப்பிள்ளை, ‘தீவட்டி’ ரங்கையா, கந்தையா பெண்டாட்டிபொன்னம்மாள் நாவல் முழுதும் வரும் பாத்திரங்களாக அமைந்திருந்தால் மேலும்அணுக்கமாகியிருந்திருப்பர்.

எழுத்தாளரின் வேளாண் சார்ந்த நுண் சித்தரிப்பு வாசிப்பனுபவத்தை மேலும்செம்மையாக்குகிறது.
'சிங்கன், மட்டி, செந்துளுவன், வெள்ளைத் துளுவன், பாளையங் கோட்டான், நெய்க்கதலி,ரசகதலி' எனப் பழக்குலைகளின் வகைகள் பற்றி வரும் வாக்கியம் , 'பன்னாவும், சாளையும்,துப்புவாளையும், அயிலையும், முரலும், பாரையும், பிள்ளைச் சிறாவம் கட்டாவும் திரைச்சியும்'குமரியின் மீன் வளத்தை சுட்டும் பகுதி எனத் தொடர் எடுத்துக்காட்டுகள் நாவல் முழுவதும்வந்துகொண்டேயிருக்கிறது. நாஞ்சில் நிலத்துடன் வாசகனைப் பரிச்சயமாக்க உதவுகின்றனஇவ்வுதாரணங்கள். நாவலின் பலமும் ஆசிரியரின் இம்மொழி வளமே.

கல்பனா ஜெயகாந்த்.

நாஞ்சில் நாடனின் இந்த நாவல் ஒரு முக்கியமான சொற்களஞ்சியம்.  வயலும் உழவும் சார்ந்த கலைச்சொற்களின் ஆவணம்.  ஒரு உழவு சார் கிராமத்தில் இருக்கக் கூடிய social structure,(ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்ற போதிலும்), நிலவுடமையாளர்கள் மற்றும் நிலமற்றோர் இவர்களின் நடுவே உள்ள dynamics, ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளதால், இந்த நாவல் சமூக வரலாற்றுப் பார்வையில் முக்கியமான அனுமானங்களையும் தரவுகளையும் முன் வைக்கிறது.

மொழியியலுக்கும், சமூக வரலாற்று ஆய்வுக்கும் இந்நாவல் பங்களித்திருப்பதைப் போலவே உணவியல் என்ற ஒன்று உண்டென்றால் அதற்கும் இந்நாவல் நிறைய அளிக்கிறது. ஆசிரியரின் சுவையுணர்வைப் பற்றியும், வேளாண்மை குறித்த  அறிவைப் பற்றியும், மரம், செடி கொடிகள், உணவு வகைகள் பற்றிய தனித்த ஞானத்தைப் பற்றியும் நாம் அனைவரும் அறிந்ததே. இந்த தனித்த உள்ளீடு தான், இந்நாவலை நாஞ்சில் நாடனின் நாவலாக்குகிறது. 

நம் வீட்டில் இருக்கக்கூடிய பெரியவர் ஒருவர், தங்கள் காலத்துக் கதையை, உபரி நுண்தகவல்களுடன் சுவைபட சொல்வதைப் போல் உள்ளது இந்த நாவல். ஊர் வரியை பிரித்துக் கொடுக்கும் போது போடப்படும் கணக்கு, ‘கணேசன் மகனிடம் புத்தகம் வாங்கச் சென்றிருக்கிறான்’ என்று self-reference செய்து கொள்வது ஆகியவை புன்னகையை வரவழைக்கின்றன. ’கணக்கு’ இல்லாமல் நாஞ்சில் நாடனின் நாவல்கள் முற்றுப் பெறுவதில்லை. அனைவர் வாயிலும் சரமாரியாக எழும் வசவுகளும் மொழியியலுக்கும் சமூக வரலாற்றாய்வுக்கும்  ஆசிரியர் அளிக்கும் கொடைகளே.  இவையெல்லாம் நாஞ்சில் நாடனின் முத்திரைகள். 

ஊர்க் கொடையின் போது துடியான தெய்வங்களுக்கு வாய்கட்டி மூச்சடக்கி மாமிசப் படைப்பு அளிக்கப் படுகிறது.  அதன் மணம் கொடுப்பவர் அறியா விட்டாலும் கோவில் முழுக்க பரவியிருக்கிறது. இது இந்நாவலின் கடைசிச் சித்திரம்-கந்தையாவின் கொலைக்குத் தொட்டடுத்து வருவது. கந்தையா யாரால் எங்கனம் கொல்லப் பட்டான் என்பது ஊரறிந்த இரகசியமாக இருப்பதற்கான குறியீடாக இதைக் கொள்ளலாம்.

தன் பாட்டனாரின் கதையை ஆசிரியர் இந்த நாவலில் எழுதியிருப்பதாக அறிகிறேன்.
அதனால் தான் முக்கிய கதாபாத்திரத்தின் பெயர் கூட ’கந்தையா’.

 ஊர் அதிகார வர்க்கத்தின் முன் தலை தாழ்த்த மாட்டேன் என்னும் ஒரு rebel கந்தையா.  தனக்காக மட்டுமின்றி தன்னைப் போன்ற எழைகள் அனைவருக்காகவும் சிந்திப்பவன் அவன்.  அனைவரையும் இணத்துக் கொண்டு ஒரு சிறிய அளவு பொதுவுடைமை சமுதாயத்தை நிகழ்த்திக் காட்டுகிறான்.  சுடுகாட்டுத் தோப்பைத் திருத்தி அனைவருக்கும் பயன் சென்று சேரும் விதமாக, காய்கறித் தோட்டமாக மாற்றிக் காட்டுகிறான். விக்ரம சிங்கப் பிள்ளை அதை ஒரு முறை அழித்த போதிலும் மீண்டும் உருவாக்கிக் காட்டுகிறான. ஊக்கமுள்ள ஒரு தலைவன் அவன். 

ஊர்கொடையை விட பிள்ளைகளின் பள்ளியை சீர் செய்வதை முக்கியமாக நினைக்கிறான். பெண்களின் மானத்துக்கு ஊறு வரும் போது , அதைத் தட்டிக் கேட்கிறான். முற்றிலும் லட்சியவாத பாத்திரமா என்றால் அதுவும் இல்லை.  அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கத் தயங்குவதில்லை. தன் ஊர் அதிகார வர்க்கத்தின் முன் அவன் கலகக் காரனாய் இருப்பதற்கான காரணம் ஒரு விதமான frustration என்று தான் சொல்ல வேண்டும்.  

இந்தக் கலகக் குரலை ஆரம்பத்திலேயே அடையாளம் காணும் அதிகார வர்க்கத்தினர் , அக்குரல் வளையை ஒரேடியாக அறுத்து விடுகிறார்கள்.  கொடையில் அளிக்கப் படும் பலியாடாகிறான் கந்தையா.  அதிகார வர்க்கம் வெற்றி பெற்றது போன்ற impression தான் உருவாகிறது.

நாவல் இந்த இடத்தில் தான் வெறும் நிகழ்வுக் கோவையாகி விடுகிறார் போல் தோற்றமளிக்கிறது.. மேலெழுந்து எந்த தரிசனத்தையும் உணர்த்துவதில்லை; எதோ ஒன்று இங்கு சமன் செய்யப் படவில்லை; ஒற்றைப் படைத் தன்மையுடன் இருக்கிறது என்பதாக உணர்கிறோம்.  

ஆனால் வாழ்க்கை என்பது அங்கனம் பொருளற்ற ஒன்று தானே. அதனால் தான் இந்த நாவலும் பொருளற்ற முறையில் முடிவு கொள்கிறது  என்று நினைக்கிறேன். வாழ்க்கையை மிக நுட்பமாக நகல் செய்வதால், இந்நாவல் ஒரு வெற்றிப் படைப்பு என்றே நினைக்கிறேன்.



Sureshbabu
ஆசிரியரின் சதுரங்க குதிரைக்குப் பிறகு நான் படிக்கும் அடுத்த நாவல்.
பாரதிராஜாவின் படம் பார்ப்பது போன்ற ஒரு பிரமை. கதாபாத்திரங்களின் அறிமுகமும் அப்படித்தான் இருந்தது.

தலை முண்டினை இறுக்கி வட்டக்கட்டாக தலைப்பாகை கட்டி, வேட்டியை வரிந்துகட்டி தார்  பாய்ச்சி, கீழ் வரப்புக்கும் மேல் ஓடிக் கொண்டிருந்தான் கந்தையா....

புலியிலைக்கரை இரட்டை வேட்டியை மடித்துக் கட்டி, நெடுநீளமாக, வெளுத்த முறுக்கு நூல் துவாரத்து தோளில் துவண்டு கிடைக்க, கதிர் வாரிக் கட்டுவதை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார் கங்காதரம்பிள்ளை....

ஆனால் ஆசிரியரின் காட்சி வர்ணனைகள் அசாத்தியம் தான். வண்ணதாசனின் சாயல்கள் சில சமயங்களில், என்ன அவரைப்போல் நெகிழ்வடையச் செய்வதில்லை.

ஐந்தேகாலடி உயரம், நீர்யானை போல் எண்ணெயை மினுக்கும் மொண்டு எனும்பே தெரியாத உடம்பு, பேன் வைத்து 'சோடக்' என்று குத்தலாம் போல் திம் மென்று புடைத்த குடைவண்டி வயறு !

கிராமத்து மொழிவீச்சும் நுணுக்கங்கள் நிறைத்த வர்ணனைகளும் கம்மென்று பச்சை வாசனை நாவல் முழுக்க வீசுகிறது.  

பூவும் பிஞ்சும் காயுமாகத் தோரணம் தொங்க, முருங்கைக் கொலையோடு ஓடினான் கந்தையா... என்று காட்சி வர்ணனை மூலம் கதை நாயகனை நம் மணக்க கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் ஆசிரியர். நிலவுடைமைச் சமுதாயத்தின் முன் மண்டியிடாமல் தானும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் குரல் கொடுக்கும் ஒரு புரட்சியாளனாய் நம் முன் ஒரு உயரத்தில் நிறுத்தி வைக்கிறார். ஆனால் பிழைப்புச் சமுதாயத்தின் நேர்மையுடன் உழைக்கும் ஒரு சமுதாயத்தை சூழ்ச்சியுடன் வீழ்த்தும் ஒரு அதிகார வர்க்கத்தின் கதையாகத்தான் எனக்குத் தோன்றுகிறது,

மற்றபடி கொஞ்சம் சோர்வான நாவல் போல்தான் தெரிகிறது.  இது எனது பார்வை மட்டுமே.


Krishnan, Erode
அனைவருமே கூறியது போல இது ஒரு சாதாரணத்தில் இருந்து விலகி நிற்கும் நாவல் அல்ல. ஒரு நாவல் எனவும் இதை சொல்ல இயலாது இது ஒரு நீட்டிக்கப்பட்ட குறு நாவல் மட்டுமே. மெல்ல மெல்ல நாவல் என்றால்  நாம் ஒரு பெரிய வரைபடத்திற்கும்  தலைமுறைகள் நீளும் நீண்ட கால அளவையும்  எதிர்பார்ப்பதற்கு பழகி விட்டோம். இது ஒரு ஆண்டுக்குள் நடந்து முடிந்து விடுகிறது.  வட்டார வழக்கை ஒரு ஆக்கத்தின் பலமாக சொல்ல முடியாது என்பது என் கருத்து. ஆனால் ஒரு நுட்பமான வாழ்வியல் அதில் பதிவாகிருக்கும் என்றால் அது பலம் தான்.

டால்ஸ்டாயின் "கூட்டுக்குப்பண்ணை சோஷலிச விவசாயத்தை" முன் மாதிரியாக கொண்டது போல தோன்றுகிறது. இது ஸ்டாலின்  காலத்தில் அமலாக்க முயற்சித்து பின்னர் தோல்வி கண்டது . இந்த நாவலில் ஒரு கிராம வாழ்விற்கே உரிய சில அரிய  வினோத சம்பவங்களும் பாத்திரங்களும் நடந்தேறியுள்ளன. இவைகளே  இந்நாவலை வண்ணமயமாக்குகிறது. குறிப்பாக ஒரு விளை நிலத்தில் புற்றில் மறக்கப்பட்ட்ட தெய்வம் தோன்றுவது.  சமையல்கார பொன்னு அவதானிக்கத்தக்க கதாபாத்திரம், அனைத்தையும் ஊரார் சொல்படி  "அப்படியானால் நீட்டிவிடலாம்" மாதிரி. இது போல அனைவரின் கருத்தையும் கேட்டு அனைவரிடமும் வசை பெறும் சற்று மந்த புத்தி கொண்ட நன் மனிதர்கள் இப்போது அருகி விட்டார்கள் என தோன்றுகிறது.  வஞ்சம் கொடுத்த ஊக்கத்தில் ஒரு தோட்டம் அமைப்பது பின்னர் பயிர் வளர வளர கந்தையாவின் வஞ்சம் தளர்வது, இது தான் ஒரு ஆலை  தொழிலாளிக்கும் விவசாயிக்கும் உள்ள வேறுபாடு என எண்ணத் தோன்றுகிறது.   

ஜெ விடம் இது குறித்து பேசிக்கொண்டிருந்தபோது  இந்த நாவல் அசாதாரணமான துவக்கத்தை கொண்டிருந்தது ஆனால் அது வளர்ந்து வெல்லவில்லை என்றார். ஒரு சமூகம்  தனது  சிறந்தது அனைத்தையும் பலி கொடுத்து, அது குறித்து எந்த பிரக்ஞய்யும்  அற்று கடந்து செல்கிறது . கந்தையா தான் ஒரு ஊர் நெடிது வலுத்து வாழ காரணியானவன், கங்காதரன்பிள்ளை  அந்த ஊரின் புற்று. ஆனால் அந்த ஊரின் தேர்வு கங்காதரன்பிள்ளை தான். ஆனால் இது நாவலில் ஒரு  தரிசனமாக வளராமல் நின்றுவிட்டது. ஆனாலும் இந்நாவலின் வாசிப்பு ஒழுக்கு எங்கும் தடைப்படவில்லை.     


Chandrasekar
இந்த நாவல் கதைக்களம் கேட்டு பார்த்து சலித்திருந்தாலும்கூட நாவல் வெளிவந்து சுமார் 38 வருடங்கள் ஆனாலும் கூட  தற்போதைய நிலவரத்தில் பெரிய மாற்றமில்லை.இந்நாவலில் குறிப்பிடும்படியானவைகள் வேளாண்மை மற்றும் புறச்சூழல் சார்ந்த நுண் சித்தரிப்புகள், கதைமாந்தர்களின் நாஞ்சில் நாடனுக்கே உரிய பகடியும்விமர்சனமும் கூடிய அறிமுகங்கள். நாஞ்சில் நாட்டின் தெய்வங்கள் மற்றும் சிறு தெய்வங்கள் அவற்றிற்கான படையல்கள் ஆகியவை ஆகும்.
கூறுவடி கந்தய்யா கதையின் முக்கிய பாத்திரம் அதன் அறிமுகத்தின் போதே ஆளுயர கதிர்கட்டுகளை கொண்டு செல்லும் போதே  முருங்கை மரத்தை கொப்போடுஒடிக்கும் சாமர்த்தியமும் கந்தய்யாவை பற்றி ஒரு சித்திரத்தை அளித்துவிடுகிறார் ஆசிரியர்.   மேலும் கந்தையாவை இவ்வாறாக அறிமுகபடுத்துகிறார்.
“நெட்டான் நொட்டான் என்று ஊடு மண்வெட்டிக் கைபோல் ஒரு மூச்சு வளர்த்தி, பலகைபோல் விரிந்த உறுதியான மார்பு, பூவரச மர வைரத்தில் செய்த கோடிக் கலப்பைபோல் அழுத்தமான உடம்பு நாற்பத்தைந்து வயது தோன்றாத கயிற்று உடல்வாகு. சாமர்த்தியமானதோர் கூறுவடியாக கந்தையா இருந்தான்.”

கடுவாய் கங்காதரன்பிள்ளை பந்தயத்தால் பத்தொன்பது மரக்கா நெல் சுமந்து வந்த கந்தையாவிடம் குறுணி நெல் எடுத்துக்கொள் என்ற போது கங்காதரன்பிள்ளை யார்என்பதை நமக்கு உணர்த்திவிடுகிறது நாவல்.
“ஐந்தேகாலடி உயரம், நீர்யானை போல் எண்ணெய் மினுக்கம் கொண்டு எழும்பே தெரியாத உடம்பு, பேன் வைத்து ‘செடக்’ கென்று குத்தலாம் போல் ‘திம்’ மென்று புடைத்தகுடவண்டி வயிறு சூடு காரணமாய் சவரம் செய்யப்பட்ட கட்கங்களிலிருந்து அழுக்கான வியர்வை வரியாய் வடிந்து விலாவில் குங்குமம் படர்ந்து பரவிக் கொண்டிருந்தது.” இது கங்காதரனை பற்றிய ஆசிரியரின் அறிமுகம் ஆகும்.
குண்டாமுட்டி குற்றாளம்பிள்ளை கோள் சொல்வதில் வல்லவர் கதிர்வீசும் ஆளுமை எதிராளியை நம்பவைக்கும் தன்னை கொண்டவர்.
சடையப்பபிள்ளை ஆரம்ப பள்ளியில் பியூன் மற்றும் அம்மன் கோவில் பூசாரி.
“பிரம்பு போல் முறுகிய ஒல்லி உருவம். நெற்றியில் இருப்பது போலவே வயிற்றிலும் மடிப்பு வரிகள். எப்போது பார்த்தாலும் ஏழு நாள் பட்டினி போல் ஒட்டிய வயிறுவெற்றிலைக் காவி மின்னும் பற்கள். சிறுவர்களைக் கண்டால் முகத்தில் குறுஞ்சிரிப்பு இவரைச் சுற்றி மூன்று வயது முதல் பன்னிரெண்டு வயது வரையான சிறுவர்,சிறுமியர் கூட்டம் எப்போதும் இருக்கும்.” என்றும்,  “சடையப்பப்பிள்ளை கோயிலுக்குள் புகுந்தால் வேறு மனிதர். வக்கிரமான ஒரு முகம் வந்து பொருந்திக் கொள்ளும்.பிறவிச் சுமையை இறக்க முடியாமல் தினறும் வேதனையும் கோபமும் எரிச்சலும் கொண்ட முகம்.” என்றும் சுட்டுகின்றார். 
மலையப்பபிள்ளை வைரவன் சாமி பூசாரி
“ஐம்பதுக்கு மேல் வயதாகிவிட்டது. விளைந்தது போல் உடம்பு கணுக்கணுவாய் இருந்தது. தொந்தி சரியும் அளவுக்கு நிலபுலன்கள் உள்ள பண்ணையார் இல்லை. ஆதலால்தேங்காய் நெற்றிப்போல், வரிப்பமுத்து இருந்தார். குணத்துக்குத் தகுந்தாற்போல் ஓர் வெடுக்கு உண்டு.”
லாயர் செல்லம்பிள்ளை . இவர் படிப்பால் அல்ல செயலால் லாயர் பட்டம் பெற்றவர். இவரை பற்றிய அறிமுகம் இவ்வாறுள்ளது.
“கரியான வேட்டி, கரியான தோள் முண்டு, வேட்டியின் இடுப்பு மடிப்பில் மாட்டுக் கொம்பில் செய்த பொடி டப்பி, நெல் அவிக்கும் செம்புப் பனையப் பாதியியல் அறுத்துப்பொருத்தியது போல் குமிழ் வயிறு ஒரு பக்கா நல்லெண்ணெய்யை உடல் முழுவதும் பூசி வடியவிட்டது போல் வியர்வைக் கசகசப்பு ஒரே உயரத்தில் வளர்ந்திருத்தும்நரைத்த எட்டு நாள் தாடி, நரைத்த எட்டு நாள் தலைமுடி, முகத்தில் மட்டும் பொங்கித் திளைக்கும் நிரந்தரமான சிரிப்பு.” 
பொன்னு  
இவர்
 சூலைபிடாரி, சந்தனமாரி, வைரவன் ஆகிய தெய்வ வழிபாட்டு மாமிசப் படப்புக்கு சமையல் செய்பவர். பொன்னுவிற்கு இழகிய மனசு. யார் என்ன சொன்னாலும்மறுத்து சொல்ல மாட்டான். இவனது சமையல் புதுமையான விசித்திரமான கலவையாக இருக்கும். உள்ளுர் கோவில் திருவிழாக்களில் பெரும்பாலும் பொன்னுவின்சமையல்தான். சமையலுக்கு சம்பளத்ததை எதிர்பார்ப்பதில்லை. சிறப்பாக இருக்க முயற்சிக்கிறான் அப்படி இல்லாத போதும் அலட்டிக்கொள்வதில்லை. (லாயர்செல்லம்பிள்ளைக்கு செய்யும் சமையல்).
இந்த நாவலில் வரும் தெய்வங்கள் மற்றும் சிறு தெய்வங்கள். முத்தாரம்மன் புடைசூழ சந்தன மாரயும், சூலைப்பிடாரி ஆகிய தோழிகளோடும், பூதத்தான் என்றசேனாதிபதியோடும், வைரவன் என்ற காலலோடும் மாங்கோணத்தை பாதுகாக்கிறார்கள் என்றகிறார் நாவலாசிரியர். மேலும் தெய்வங்களுக்கான படையலையும்அதற்கான காலத்தையும் விரிவாக பதிவுசெய்கிறார் ஆசிரியர்.
“ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மண்டைக்காட்டு அம்மனுக்கு கொடை முடிந்த மறு கிழமைகளில் அம்மனுக்கு அனனக்கொடை கொடுக்கப்படுகின்றது. கார்த்திகைமாதத்துச் செவ்வாய் கிழமைகள், தை அமாவாசை, மாசிமகம்;, பங்குனி உத்திரம், சித்திரை வருட பிறப்பு, வைகாசி விசாகம், ஆடி அறுதி, இவ்வாறு மாதத்திற்கொன்றாய்வரும் பண்டிகை நாட்களில் தெய்வங்களுக்கு சிறப்பு செய்யப்படுகின்றன. கல்யாணம், மறுவீடு, சூலழைப்பு, ஆண்டு நிறைவு ஆகியவைகளுக்கு அம்மனுக்கு பாயாசம்படைத்து வழிபாடு நடத்தப்படுகின்றது. 
ஆக மொத்தம் நாஞ்சில் நாட்டு மனிதர்கள் வழியாகவும் வேளாண் சூழல் வழியாகவும் பயணிக்கும் ஒரு நாவல் அவ்வளவே.

Susheel
நாஞ்சிலின் வீராணமங்கலத்தில் ஒரு இரண்டு மாதங்கள் தங்கித் திரும்பிய உணர்வும், நாவலின் முடிவில் திருப்தி கொள்ளாத ஒரு நிலையும் என்னுள் எஞ்சி நின்றன.
ஊர் தொடக்கத்தில் இருக்கும் ஆற்றங்கரை ஆலமரம் தொடங்கி, முத்தாரம்மன், சுடலை மாடன், பூதத்தான் என எங்களூருக்கே உரிய சிறு மற்றும் குல தெய்வங்களை வழிபட்டு, புளிக்கறியும் பூசணிக்கா கூட்டுக்கறியும் உண்டு, சாலைப் புளிமுள வாசம் பிடித்து தாழக்குடி குளத்தில் ஒரு மறுகரை தொடும் நீச்சலடித்து திரும்பிய ஒரு வாசிப்பனுபவத்தைக் கொடுத்திருக்கிறார் நாஞ்சில்.
ஊரை விட்டு வெளியே இருந்த திட்டைத் திருத்தி நன்செய் நிலமாக மாற்றி பயிர் விளைத்து தோட்டமிட்டு பணம் பார்க்கும் உழைப்பாளிகளின் அடி வயிற்றில் கை வைக்கும் பண முதலைகளும் அவர்களின் ஆங்காரங்களும் நாவலில் ஆழமின்றி பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதே பெரிய இடங்கள் நள்ளிரவில் தவறிழைத்து மானம் கெட்டுப் போகும் வேளையில் கூட வெளிக்காட்டும் அவர்களுக்கே உரித்தான வறட்டு கௌரவமும் அதைத் தாங்கிப் பிடிக்கும் உள்ளூர் அல்லக்கைகளும் நாஞ்சில் நாட்டு வாழ்கையில் ஒரு அன்றாடக் காட்சிதான். “சீ இதுதான் பெரிய மனுசத்தனமா?” என்று திட்டிப் போகும் பெருசின் குரல் தேய்ந்துதான் போகிறது.
கதை மாந்தரின் குணாதிசயங்களை நேரடியாகச் சொல்லாமல் அவர்களின் கொச்சைப் பேச்சு மொழியிலும், அவர்களது தினசரி நடவடிக்கைகளிலும் வெளிப்படுத்துவது சிறப்பு. மேலும், அவர்களைச் சார்ந்தவர்களுடன் நடைபெறும் உரையாடல் வழி வாசகன் கதாபாத்திரங்களைப் புரிந்து கொள்கிறான். ஒவ்வொரு கதை நிறுத்தத்திலும் வாசகன் கதாபாத்திரங்களை நினைவில் நிறுத்த சில சம்பவங்கள் அல்லது கிளைக்கதைகள் உதவுகின்றன.
மிக எளிதான கதைக்களமும் யூகிக்கத்தக்க முடிவும் நாவலில் ஒரு திருப்தியின்மையை ஏற்படுத்தியது நிஜம்தான். ஆனாலும்கூட, ஒரு எழுத்தாளன் தன் வாழ்விலிருந்தோ அல்லது தனைச் சார்ந்தவர் வாழ்விலிருந்தோ ஒரு பகுதியை மாத்திரம் சொல்லிச் செல்லும்போது இத்தகைய குறை நிகழும் அல்லவா.
நாஞ்சிலின் கதைக்களத்தைச் சார்ந்தவன் நான்(என் சொந்த ஊரிலிருந்து நாஞ்சிலின் ஊர் 5 km தான்) என்பது இந்த நாவலை வாசிக்கும்போது உதவியாகவும் அதே நேரம் சிறு இடைஞ்சலாகவும் இருந்தது. இடைஞ்சல் என்னவென்றால், சில கதாபாத்திரங்கள் சற்று மிகைப்படுத்தப்பட்டிருப்பதாகத் தோன்றியது. உதாரணமாக, முடுக்கில் வைத்தும், பின் கோவில் திருவிழாவின் போதும் அவமானத்திற்கு உள்ளாகும் செண்பகத்தின் குடும்பத்தாரின் மறுவினையும், கந்தையாவின் நீண்ட அமைதியும் லேசாக உறுத்தியது.
என்னதான் இருந்தாலும், இந்நாவல் ஒரு சிறு வாழ்க்கை அனுபவம்தான். நாஞ்சிலின் சரள மொழிநடையும், ஊர்ப்புற அன்பும் சலம்பலும் நையாண்டியும் கலந்த கதை சொல்லலும் நாவலை விடாப்பிடியாக வாசித்து முடிக்க வைக்கும். நாஞ்சிலின் அனைத்து நாவல்களும் சேர்ந்து எழுதிச் செல்லும் ஒரு பெரிய நாவலின் பகுதியாக இந்நாவல் எனக்கு நல்ல ஒரு அனுபவமே.

Yogeshwaran
அறுவடை களத்திலிருந்து எடைகூடிய சுமையை தலையிலேற்றியபடி கதிர்களத்திற்க்கு ஓடும் கந்தையா சுமையை இறக்கிவைப்பதற்க்குள் 
பல மேடுபள்ளங்களை கடந்து (முருங்கைகாய் பறித்துகொள்ள அனுமதி மறுத்த வீடு வழி செல்கையில் கிளையை ஒடித்து சுமையோடு சேர்த்து கொண்டு) ஓடுகிறான்.

நாஞ்சில்நாட்டு பழக்கவழக்கங்கள் என்னும் எடைகூடிய சுமையை சுமந்தபடி நாவலின் கடைசிவரி வரை ஓடியிருக்கிறார் நாஞ்சில். அந்த முருங்கமர கிளை போல சில கிளைக்கதைகளும்.

கடைசி பக்கத்தை படிக்கையில் அறந்து தொங்கியது போன்ற உணர்வு. என்னளவில் முற்றுப்பெறாத நாவல்.

ஒரு ஊர், ஊர் மக்கள், ஊர் விழா, பஞ்சாயத்து, முன்விரோதம் என்று மிகச்சிலச் சொற்களில் சுருக்கிவிட முடிகிற, சுமாரான கதை.

கிராமத்து பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள் குறித்து  கூர்ந்து அவதானிக்க முயல்பவர்களுக்கு சற்றேனும் சுவாரஸ்யமாய் தோன்றலாம்.

என்னால் ஒப்பீட்டளவில் இன்றும் எங்கள் கிராமத்தில் உள்ள நடைமுறைகளோடு தொடர்ப்புபடுத்தி பார்க்கவைத்த புத்தகம். 

மிதவை,சதுரங்க குதிரைகள், தலைகீழ் விகிதங்கள் கொடுத்த வாசிப்பனுபவத்தை ஒப்பிடுகையில் இந்நாவல் மிக சுமாரான ஒன்றே.


No comments:

Post a Comment