செந்தில்குமார், சென்னை
வரலாறு தன்னுள் பல்வேறு மரண வாக்கு மூலங்களை கொண்டுள்ளது. பெரும்பாலான மரண வாக்குமூலங்கள், வாழ்க்கை அளித்த கசப்புகளை பற்றியும், வாழ்க்கையைத் தொடர முடியாத அவல நிலையை விவரிப்பதாகவும் உள்ளது. சில வாக்குமூலங்கள் தன் மரணத்திற்கான காரணத்தையும், நியாயத்தையும் விளக்குவதாக அமைந்துள்ளது. ஆனால் ஜூலிஸ் பூசிக்ன் வாக்குமூலம், சிறந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கையை விதைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒருஆவணமாகும்.
சிறையில் நடக்கும் கொடுமைகளையும் தோழர்கள் சந்திக்கும் வேதனையையும் விரிவாக விளக்கினாலும் அவர்களின் பொதுவுடமை கனவு வியக்கத்தக்க வகையில் உள்ளது. கைது செய்யப்பட்டு கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுநிற்கதியாய் நிற்கவைத்து இதோ நீ தோற்றுவிட்டாய் என்று கூறும் பொழுது நான் தான் தோற்றேன் பொதுவுடமை தோற்கவில்லை என்று கூறும் பூசிக்ன் கூற்றின் மூலம் தோழர்கள் பொதுவுடைமை சமுதாயத்தின் மீது கொண்டுள்ளமாபெரும் நம்பிக்கையை பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.
“நான் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தேன்,மகிழ்ச்சிக்காக சாகிறேன். என் சமாதியில் துக்க வேதனையை நிறுத்துவது கொடுமையாகும்.” “சுதந்திரத்திற்கான இறுதிப் போரில் ஒரு வீரனாய் இருப்பது எவ்வளவு மகத்தான பாக்கியம்.” போன்ற அறிக்கைகளின் மூலம் அவர் வாழ்ந்த நிறைவான வாழ்க்கையும், கொண்ட கொள்கையின் மேல் உள்ள தீவிர பற்று வெளிப்படுகிறது.
கொள்கை, போராட்டம், புரட்சி, சதி, சித்ரவதை, தண்டனை, இறுதிப் போருக்கான அழைப்பு என்று மட்டும் இருந்திருந்தால் இந்த குறிப்பும் ஆயிரமாயிரமான கம்யூனிஸ்ட் அறிக்கைகளில் ஒன்றாக இருந்திருக்கும் மாற்றாக வாழ்வின்மகத்துவத்தை புரிந்து கொண்டு தனது இறுதிக் காலத்திலும் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் மகிழ்ச்சியாகவும் நிறைவாகும் வாழ்ந்த ஜூலிஸ் பூசிக்ன் வாழ்க்கை இன்று வரலாற்றில் நிலைத்து நிற்கின்றது.
மரணத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் வேளையிலும் பாட்டு,கோலாஸ் உணவு, அப்பா, காதல் மனைவி, சக தோழர்களின் அன்பு என்று வாழ்க்கையை பரிபூரணமாக நேசித்து கொண்டிருந்திருக்கிறார்.
யுவால் நோவா ஹராரேவின் கூற்றுப்படி காடுகளில் குரங்கு கூட்டமாய் திரிந்துகொண்டிருந்த சேப்பியன்ஸ் ‘ஏதோ ஒன்றை நம்பிக்கொண்டு’, அதன்படி செயல்பட்டதால் தான் இன்று மாபெரும் மனித சக்தி ஆக மாறியுள்ளது. அந்த ஏதோஒரு நம்பிக்கை, இங்கு மனித சுதந்திரம் மற்றும் சமத்துவமாக உள்ளது.அது உள்ளதா, கிடைக்குமா என்பது அல்ல கேள்வி ஆனால் அப்படி ஒன்றுக்கான நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு அதை நோக்கி செயல்படும் ஜூலியஸ் போன்றமனிதர்கள்தான் சிறப்பான எதிர்காலத்தை கட்டமைக்கிறார்கள்.
தூக்குமேடைக் குறிப்பு பின் ஒவ்வொரு பக்கத்திலும் அந்த நம்பிக்கைக்கான உறுதி தெரிகின்றது ஆனால் அதே ஒவ்வொரு பக்கத்திலும் அதே ‘ஏதோ ஒரு நம்பிக்கைக்காக’ மற்ற ஒரு மனிதக் குழு செய்யும் கொடூரமும், அழிவும் புரிந்துகொள்ள முடியாத இயற்கையின் பெரிய புதிர்.
நவின்.ஜி.எஸ்.எஸ்.வி.
தூக்குமேடைக் குறிப்பு:
ஆகாயத்தின் உச்சியில் நின்று கொண்டு ஓர் பருந்து மிருகங்களையும்,
மற்ற பறவைகளையும் வேட்டையாடும் தருணம், உச்சமென்றால் அதனைத் தாண்டி வேறொன்றுமில்லை
அல்லது இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லலாம். அதே சமயத்தில் அந்த பருந்தால்
தாக்கப்பட்டு நலிவடைந்த எலிக் கூட்டங்கள் தாங்கள் வாழ வழித் தேடிக்
கொண்டிருக்கின்றன.
இரையாக மற்ற பறவைகள் சற்று கீழே இறங்குகையில் கிடைக்கின்றன
எடுத்துக் கொள்கிறது மேலும் கீழிறங்குகிறது வேறு சில பறவைகள் எடுத்துக் கொள்கிறது.
மேலும் கீழே சில மிருகங்கள் இரையாகுகின்றன ஒரு சில மனிதர்களும் கூடவே, அது
விடவில்லை. இறுதியாக வந்து அந்த எலி கூட்டத்தையும் கவ்விச் செல்கிறது.
இப்போது இந்த எலி கூட்டத்தை மொத்தமாகக் கொன்று அதில் சிலவற்றைக் காலால் பற்றிக்
கொண்டு மேலும் முன் நகர்கிறது. மேலும் சில மிருகங்கள், பறவைகள், மனிதர்கள்
எல்லாவற்றையும் எடுத்துக் கொள்கிறது காலிலிருந்த
நலிவடைந்த எலியையும் விடாமல். தீரத் தீரத் திகட்டாமல் சென்று கொண்டேயிருக்கிறது.
கி.பி.1941-43, கிட்டத்தட்ட அதே கழுகின் உச்சத்தில் நாசிசமிருந்த தருணம். மொத்த ஐரோப்பாவையும் தன் குடையின் கீழே நிறுவியிருந்தது.
சோவியத் யூனியன் ரஷ்யாவும் கொஞ்சம்
கொஞ்சமாக அதன் கீழ் வந்து கொண்டிருந்தன.
கி.பி. 1938 ல் முழுவதுமாக தடை செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி அதன்
பின் மறைமுகமாகச் செயல்பட்டு வருகிறது. நலிவடைந்த எலியாகக் கம்யூனிசத்தின் வேர்கள்
கூட ஜெர்மனியில் மறைய தொடங்கிய காலகட்டம் (1941-45) சொல்லப்போனால் கம்யூனிசம் என்ற பெயரே
ஜெர்மானியர்கள் மத்தியில் மறந்துவிட்ட காலம் அவை.
இத்தருணத்தில் மாட்டிக் கொண்ட எலியைப் போலவே ஜூலியஸ் பூசிக் மாட்டிக் கொள்கிறான். கெடாபோ என்னும் கழுகுக் கூட்டம் தன்னோடு ஜூலியஸ் பூசிக்கை கவ்விச் செல்கிறது. இவன் தன் சாவையே எதிர் நோக்கிக் காத்துக்
கொண்டிருக்கிறான், இனி வாழ வழியில்லை என்பது ஐயமற தெளிவாகிய பின்பு எழுகிறது இந்த தூக்குமேடைக் குறிப்பு.
ஏறக்குறைய முரணியக்கமான தருணங்கள், வெளியில் ஐரோப்பா முழுவதும் தன்
கொடியை நாட்டிச் சென்று கொண்டிருந்த ஜெர்மனி, உள்நாட்டில் ஓர் சர்வாதிகாரத்தின்
பிடியில் மாட்டிக் கொண்டு நாடு பலவாக பிரிந்து கிடக்கிறது. அதில் ஒரு தூண்டாக நிற்பது இந்த அறை எண் 400,
பற்பல ஏகாதிபத்தியத்தையும், சர்வாதிகாரத்தையும் சவால் விட்டு எதிர்த்துக் கோஷமிடாமல்,
நடைமுறையில் நடக்கும் சின்ன சின்ன தவறுகளால் நடக்கும் பெரிய பெரிய இழப்புகளைக்
காட்டிச் செல்கிறது இக்குறிப்பு.
வஞ்சம், துரோகம், சுயநலம் ஒருபுறம் நின்று அடிக்க மறுமுனையில்
நின்று தாங்கிக் கொள்ளும் சுயநலமில்லாத அர்ப்பணிப்புகளே இதனைத் தாங்கிச் செல்கின்றன.
சிறை அறை: 267 இல் இருந்து கொண்டு தனக்கு ஏற்பட்ட சுற்றத்தை ஒவ்வொருவராகச்
சுட்டிச் செல்லும் போது மனித முகங்களில் பல்வேறு அவதாரங்களைப் படம்பிடித்துச் செல்லும் போதே இந்த
குறிப்புகள் அர்த்தம் கொள்கின்றன. ஒவ்வொரு ஏமாற்றத்திலிருந்து வெளிப்படும்
நம்பிக்கையே இதனை வாசிப்பதற்கான அர்த்தத்தைத் தருகின்றன.
தனி மனித கனவுகள், வெற்றி/தோல்விகளிலிருந்து மேலெழுந்து செல்ல
காரணமான பொதுவுடைமை என்னும் கனவே ஓர் கசப்பான சாவின் விளிம்பில் நின்று
கொண்டிருக்கும் ஒருவரின் குறிப்பை நம்பிக்கையோடு அணுக வழி செய்கிறது.
விஜயபாரதி
போர்க்காலத்தில் மரணத்தின் அருகாமையில் மானுடம் செல்லக்கூடிய இருண்டஆழங்களும், அவற்றைக் கடந்து நிற்கும் விழுமியங்களும் பற்றிய குறிப்புகள்
அழகிய மணவாளன்
ஜூலிஸ் பூசக் தன்னைக்
கைது செய்ய வரும்போது துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டு யோசிக்கும்
பல்வேறு
சாத்தியக்கூறுகளில் ஒன்று மிரேக்கைப்பற்றியது. ஸ்பெயின் போரில் மரணத்திற்கு
அஞ்சாமல் நின்ற,
மந்தைவெளிச்சிறையில்
இரண்டு வருடம் எண்ணற்ற சித்திரவதைகளுக்கு நடுவில் உறுதிகுலையாத மிரேக்,இங்கு
பான்கிராப்ட்ஸ்
சிறையில் அனைத்தையும் உளறிவிடுவான் என ஜூலிஸ் பூசக்கால் எப்படி ஊகித்திருக்க
முடியும்?
போரில் துப்பாக்கி
முனையில் மரணத்திற்கு அஞ்சாதவன் சித்திரவதைக்கு அஞ்சினானா? எனில்
உறுதிகுலையாமல்
மந்தைவெளிச்சிறையில் அவன் இருந்தது எப்படி?
பூசக்கின்
குறிப்புகள்படி பார்த்தால் சிறையில் உறுதிகுலையாத மனிதர்களும் இருக்கிறார்கள்.
அப்பாஸ்
கொரிபா,குஸ்தினா,
ஜிலினிக் தம்பதிகள் போன்றவர்கள். கம்யூன் உயிர்த்துடிப்புடன் செயல்படுகிறது. ஆனால்
தனிமனிதர்கள்
வீழ்ந்தபடியே இருக்கிறார்கள். காட்டிக் கொடுக்கிறார்கள் அல்லது நம்பிக்கை இழந்து
அப்படியே
செயலின்மைக்குப்
போய்விடுகிறார்கள். சூழல் அழுத்தும்போது அதிமானுடர்கள் மேலும் அதிமானுடர்களாக
ஆகிறார்கள்.
மற்றவர்கள், தான் நம்பிக்கொண்டிருந்ததற்கும், கற்பனை செய்துகொண்டதற்கும் மாறாக
உண்மையிலேயே தான் யார் என்பதை கண்டுகொள்கிறார்கள்.
****
விசாரணையின் பகுதியாக
வெளியே அழைத்துச்செல்லப்படும் பூசக் பிரெக் நகரில் மக்களின்
களிப்பைக்கண்டு ஒருகணம்
அடையும் கசப்பும் பின்னர் தான் அப்படிக் கசந்திருக்கக்கூடாது என்று நினைக்கும்
ஒரு இடம் வருகிறது. பல
லட்சம் ஜுலிஸ் பூசக்குகள்,தியாகங்கள், மரணங்கள்,சாகசங்கள் வரலாற்றில் தடமே
இல்லாமல் அழியலாம்.
ஆனால், இதையெல்லாம் மறந்து (அவர்களின் சொந்த வாழ்க்கையையும் சேர்த்து)
மக்கள் வாழ மட்டுமே
விரும்புகிறார்கள் என்ற உண்மை நிச்சயமாக ஒவ்வொரு போராளியும் தவிர்க்கவே
முடியாத ஆனால் கடக்கவேண்டிய
கசப்பு.
இந்தக்குறிப்பின்
மையத்துடன் அவ்வளவாக சம்மந்தமற்றது என்றாலும் கம்யூனிச சிந்தாந்தத்தின் அடிப்படை
பிசகுகளில் ஒன்று என்று
தோன்றவைக்கும் கார்ல் மார்க்ஸின் மேற்கோள் ஒன்று ஜுலிஸால் குறிப்பிடப்படுகிறது.
”ஒரு தொழிலாளி
தனிப்பட்ட முறையில் என்ன நினைக்கிறான்,செய்கிறான் என்பது அவ்வளவு முக்கியம்
அல்ல. ஒரு தனி வர்க்கம் என்ற நிலையில் தன்னுடைய
சரித்திரப்பூர்வமான காரியத்தை நிறைவேற்ற
அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதுதான் முக்கியம் “
தனிமனிதனை அவன்
உணர்வுகளை, அவனது கொள்கைப்பிடிப்பின் வலிமையை, தனி வாழ்க்கையை முற்றிலும்
கணக்கிலெடுத்துக்கொள்ளாமல்
சமூக மாற்றத்தை கற்பனை செய்த கம்யூனிசத்தின் ஆதாரப்பிழைகளில் ஒன்று.
கிருஷ்ணன், ஈரோடு
செந்தில், விஜயபாரதி,நவீன் மற்றும் மணவாளன் ஆகியோரது
விமர்சனங்களையும் வாசித்துவிட்டேன்.
இந்த குறிப்புகள் எனக்கு இரண்டு நாவல்களை நினைவூட்டுகிறது, ஒன்று
தஸ்தியவெஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள். இன்னொன்று காம்யூவின் அந்நியன். கரமசோவ் சகோதரர்களில்
ஒரு கிளைக்கதை வரும் அதில் தூக்கில் இடப்படுவதற்கு முன் கடக்கும் 18 அடிகளை
நான்காக பகுத்துக்கொண்டு அதை குழந்தைப்பருவம், இளமைப்பருவம், மத்திய வயது பின்
அடுத்ததாக நிகழ்ந்தவை என எண்ணிக்கழிக்க ஒரு பாத்திரம் திட்டமிடும், அது
தஸ்த்யவேஸ்கியே தான். அந்நியனில் தூக்கிலிடப்படுவதற்கு முந்திய இரவு அந்த நாவலின் நாயகன் எண்ணுவதாக
அமைந்திருக்கும், அவனுக்கு வயது முப்பதுக்குள் இருக்கும். வாழ்க்கையயையே அவ்வளவாக பார்த்திராதவன். ஆனாலும் அவன் கூறுவான்
ஒரே ஒருநாள் ஒருவன் வாழ்ந்திருந்தால் கூட போதும் அவன் எண்ணி முடிப்பதற்கு அநேக
சம்பவங்கள் இருக்கும் அது சாவு நெருங்கும்போது எழுந்துவரும். இந்த இரண்டு
பாத்திரங்களும் ஒரு எழுத்தாளரின் மாதிரிகள்.
ஆனால் ஜுலிஸ் பூசிக் ஒரு போராளி. அவனுக்கு அந்த தன் மைய்ய உலகம் இல்லை, மே தினமும், மானுட
விடுதலையும் அவன் இலக்கு. ஒரு அசல் போராளி அல்லது ஒரு லட்சியவாதி ஒப்பு நோக்க ஒரு
கற்பனாவாதியைவிடவும் மகிழ்ச்சியாகவே இருக்கிறான். கிடைத்த வாழ்வை ஒளியுற
வாழ்கிறான். சில நாடுகளில் தூக்கு மேடை பணியாளர் தூக்கில் இடுவதற்கு முன் கைதியை
முத்தமிடும் வழக்கம் உள்ளது என்கிற தகவல் ஒரு புனைவுத்தருணம்.
வீரப்பனின் சகாவாக இருந்து 18 ஆண்டுகள் சிறையில் கழித்த அந்தியூர் அன்புராஜை நங்கள் சந்தித்தபோது,
அவர் கூறிய சிறை அனுபவங்களில்
முக்கியமானது சூரியனுக்காக ஏங்குவது. மார்கழி பங்குனி மாதங்களில் அறைக்குள்
ஒரு முக்கால் மணிநேரம் முக்கோணவடிவில் சற்று சூரிய வெளிச்சம் ஜன்னல் வடிவில் படரும்,
அதில் 3 பேர் தான் நிற்க முடியும். 15 கைதிகள் உள்ள அறையில் முறைவைத்து நின்று
வெய்யிலை அனுபவிப்பார்கள்.
இந்த குறிப்புகளிலும் இந்த சூரிய ஏக்கம் தெரிகிறது. எல்லைக்கு
துரத்தப்பட்ட வாழ்க்கையில் சிறு சிறு வசதிகளை கூட ஒரு சொகுசாக்கிக்கொள்ளலாம், அது அதே நிறைவைத்தரும்.
தவறான நம்பிக்கை குறித்து பூசிக் எழுதியது தான் எனக்கு இந்த
புத்தகத்திலேயே மிக முக்கியமானது. ஒரு மெய்தேடியாக அவர் தெரிகிறார். போராளிகளுக்கு
நம்பிக்கை அளிப்பதற்காக அவர்களது முன்னேற்றத்தயும் எதிர்தரப்பின் வீழ்ச்சியையும்
மிகைப்படுத்தி கூறுவது ஒரு அமைப்பின் இயல்பு. பூசிக் இந்த செயல்களை மறுக்கிறார்,
அது மேலும் தீங்கையே தேடித்தரும் என்கிறார். உண்மையே போராட்டத்தை வெல்லச் செய்யும்
என்கிறார். ஒரு உறுதிப்பாடுடைய முதல் தர போராளி பூஸிக்.
ஒரு பூனை 108 சப்தங்களை எழுப்பும் ஆனால் ஸ்டாமடான்ஸ் என்கிற
கண்காணி மூன்று வார்த்தை தான் எழுப்புகிறார், ஆகவே அவனுடன் ஒப்பிடும் போது பூனை
ஒரு மேதை எனக்கூறும் இடம் மிக நகைச்சுயுவையானது.
இது ஒரு பின்னாளைய புனைவா அல்லது கடும் காவலையும் மீறி வெளியே சென்ற அசல் குறிப்புகளா என ஐயத்தை ஏற்படுத்தும்
சூழல் இதன் இயல்பிலேயே உள்ளது. பெர்கின்ஸின் "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்", ஸ்னோடென் அசாஞ்சே அம்பலக்குறிப்புகள்
கூட அமெரிக்காவால் வேண்டுமென்றே கசியவிடப்பட சாத்தியமிருக்கிறது, இதில் சில
சதிகளும் கூட வேண்டுமென்றே பொய்யாக மிகையாக சித்தரிக்கப்பட்டிருக்க வாய்ப்பும் உண்டு. இதன் மூலம் அதன்
உளவுத்துறையின் வல்லாதிக்கத்தையும்
ராணுவ பொருளாதார மேன்மையையும் உயர்த்திக்காட்டலாம். நாம் ரகசியம் அம்பலமானதாக
மகிழலாம், அமெரிக்க சதிகளை ஏசலாம் கூடவே அதன் ஆற்றல் குறித்து நமக்கு அச்சமும் கூடும். இதேபோல வெற்றிபெற்ற
ரஷ்ய கம்யூனிச அரசு போராளிகளின் தியாகத்தையும் மேன்மையையும் காண்பிக்க இப்படி ஒரு குறிப்பை
வெளியிட்டிருக்க வாய்ப்பும் உண்டு. இது விவாதத்திற்கு உரியது.
இதை எழுதும் போதே இந்த குறிப்புகள் அகப்பட்டால் என்னவாகும் என
எண்ணித்தான் பூசிக் எழுதியிருக்கிறார். அதாவது பிடிபட்டவர்கள் பெயர் மட்டும் தான்
உள்ளது, தற்போது வெளியே தலைமறைவாக உள்ளவர்கள், நிகழ்காலத்தில் சிறைக்குள் உதவும்
பணியாளர்களின் பெயர்கள் சொல்லப்படவில்லை இது இதன் நம்பகத்தன்மைக்கு வலுசேர்க்கிறது . அதேசமயம் ஒரு
யுக்திமிக்க போராளி இந்த குறிப்புகளில் வேண்டுமென்றே சில ஜெர்மன்
அதிகாரிகளின் பெயர்களை எழுதி அதை தற்செயலாக கிட்டச்செய்வான் என்றோ அல்லது தாமாக அகப்பட்டாலும் அப்பெயர்கள்
இருக்கட்டும் என எழுதியிருப்பான் எனவோ நாம் யூகிக்கலாம். அவ்வாறு எதுவும் இக்குறிப்பில் இல்லாதது
இதன் நம்பகத்தன்மையை சற்று பலவீனப்படுத்துகிறது.
பாரி
தூக்குமேடை குறிப்புகள்
– எஞ்சும் சொல்
“விடியும்
வரை பிழைத்திருக்க மாட்டான்” என்ற குறிப்புடன் முடிகிறது முதல் அத்தியாயம். அதாவது ஜூலிஸ்
பூசிக் கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்தின் முடிவில். ஒரேநாளில் போலீஸாரால் அந்தளவு
அடிக்கப்படுகிறார். அடுத்த நாள் காலை ஜூலிஸ் பூசிக் மயக்கத்திலிருந்து
விழித்தெழும்போது கேட்பதோ மரண கீதம், அதுவும் இறந்துவிட்டவர் எனக் கருதப்பட்டு
அடக்கத்திற்காக தூக்கி செல்லப்படும் நிலையில் அவர் செவியில் விழும் தன்னுடைய சொந்த
மரண கீதம்!
முதலிரு அத்தியாயங்களை
வாசிப்பதற்குள் இக்குறிப்புகளை எழுதியது யாரென்றும் எந்த காலத்தில் எழுதபட்டது
என்றும் மீண்டும் மீண்டும் சரிபார்த்துக் கொண்டேன். ஏனெனில் இத்தனை மோசமான நிலையில்
இருக்கும் ஒருவருக்கு மரணம் விரைவில் வந்துவிடும் என்றோ அல்லது பிழைத்துக்
கொண்டாலும் புத்தகமாக வெளியிடும் அளவுக்கு தெளிவான குறிப்புகளை எழுதிவிட முடியும்
என்றோ மனம் நம்பவில்லை. ஆனால் நம்பமுடியாத வகையில் அவரது உடலும் பிரக்ஞையும்
மீண்டெழுவதை பின்னர் காண்கிறோம். இக்குறிப்புகளின் மைய இழையாக நான் காண்பது
வாழ்வின் மீட்பு குறித்தான அவரது நேர்மறை தரிசனத்தைதான்: ‘வாழ்வை எந்த
இக்கட்டிலும் நசுக்கிவிட முடியாது. கிடைக்கும் சிறு இடைவெளியிலும் அது பொங்கி
பீரிடவே முயல்கிறது’. வாழ்வின் மீட்பு குறித்தான அவரது இந்நம்பிக்கை அடுத்தடுத்த
தளங்களிலும் வெளிப்படுகிறது. அதாவது கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலர்
கைதுசெய்யப்பட்டு அதில் பெரும்பாலானோர் கொல்லப்பட்ட பின்னரும், கட்சியின் பல
கிளைகளுடன் தகவல் தொடர்பே அறுந்துவிட்ட பின்பும்கூட கட்சியின் மீட்பு குறித்து
அவருக்கு எவ்வித சந்தேகமும் இருப்பதில்லை. அதேபோல சமூக அளவிலும் நாஜிகளின்
வீழ்ச்சி என்பது அவரை பொறுத்தவரை தீர்மாணிக்கப்பட்டுவிட்ட ஒன்று. இன்னும் எத்தனை
நாட்கள் என்பது மட்டுமே கணக்கிட வேண்டியது.
இக்குறிப்புகளில்
ஜூலிஸ் பூசிக்கின் மனம் ஓர் எழுத்தாளனின் பார்வையிலும் ஒரு கம்யூனிஸ்ட் லட்சியவாதியின்
பார்வையிலும் தாவிக்கொண்டே இருப்பது என்னை மிகவும் கவர்ந்தது. உயிராபத்துமிக்க
சூழலில் தன் இறுதிநாட்களில் எழுதகிடைத்த வாய்ப்பிலும் சுவாரஸ்யமான குணாம்சம்ங்கள்
கொண்ட ஜெர்மன் அதிகாரிகள் குறித்து இவரால் எழுதாமல் இருக்கமுடியவில்லை. ஒருவகையில்
இக்குறிப்புகளை கம்யூனிஸ்ட் லட்சியவாதிகள், நாஜி மற்றும் செக் காவலர்களில்
வெளிப்படும் மனிதகுணங்களின் பல்வேறு வகைமாதிரிகள் என சொல்லிவிடலாம். அதேசமயம் ஒரு
கம்யூனிஸ்ட்டாக ஒவ்வொரு தோழரின் பங்களிப்பையும் பதிவுசெய்ய முயல்கிறார்.
சமயோசிதமும் வீரமும் மிக்க தோழர்களின் தியாகங்கள் வரலாற்றில் கரைந்துவிடக் கூடாது
என பதற்றம் கொள்கிறார் (பல இடங்களில் நினைவுக்கு வந்தது சிவா கிருஷ்ணமூர்த்தியின்
‘மறவோம்’ சிறுகதை). அவ்வப்போது தங்கள் லட்சியமான ஒட்டுமொத்த மானுடத்திற்கான
மகிழ்ச்சி என்பது குறித்தும் வாசகர்களிடம் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.
இக்குறிப்புகளின்
உச்சமாக நான் கருதுவது நான்கு மற்றும் ஐந்தாம் அத்யாயங்கள். இப்பகுதிகளில் இவரது
பேசுபொருள் அதிகம் அலைபாய்கிறது, ஆனால் இந்த அலைபாய்தலே அவரது மனம் செயல்படும்
விதத்தையும் காட்டுகிறது. நான்காம் அத்யாயத்தில் ’400’ என்றழைக்கப்படும் சிறை
வளாகம் குறித்து சொல்ல ஆரம்பிப்பவர் நடுவில் ‘இடைவேளை’ விட்டுவிட்டு சிறை
வளாகத்தில் அவர்கள் தங்களுக்குள் நிகழ்த்திக் கொண்ட மகத்தான மேதின (1943)
கொண்டாட்டத்தைப் பற்றி விவரிக்கிறார். நிகழ்ச்சிகளின் காலவரிசைப்படி மேதினக்
கொண்டாட்டம் அவரது அன்றைய எழுத்துத் திட்டத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால்
மேதினத்தன்று அவரால் அதுகுறித்து எழுதாமல் இருக்க முடியவில்லை. இக்குறிப்புகளின்
உச்சமென நான் கருதுவது இப்பகுதியை தான். மீண்டும் கம்யூனிஸ்ட் பத்திரிக்கையாளனாக
ஆகிவிட்டதில் அவர் பரவசம் கொள்கிறார். பக்கத்து அறை தோழர் பீத்தோவன் மெட்டை
சுவரில் தட்டுவதில் துவங்குகிறது மேதினம். தோழர்கள் தங்கள் பார்வையாலும் கணநேர
தொடுகையினாலும் தங்கள் வாழ்த்துகளை பரிமாறிக் கொள்கின்றனர். ஏவல் கைதியான தோழர்
ஸ்கொரிபா ஒரு பன்ரொட்டி அதிகமாக தருவதன் மூலம் தன் வாழ்த்தை பகிர்கிறார்.
உடற்பயிற்சியின் போது கத்தியால் அடிப்பது போன்றும் அறுவடை செய்வதுபோன்றும் பயிற்சி
செய்கின்றனர். தோழர்கள் மட்டும் புரிந்து கொள்ளும் அந்த மெளனமான கொண்டாட்டத்தில்
அவர்கள் புன்னகைக்கின்றனர். சோவியத் பாடல்கள் சீட்டியடிக்கப் படுகின்றன. இந்த
ரகசிய கொண்டாட்டம் எத்தகைய குதூகலத்தை அவர்களுக்கு அளித்திருக்க வேண்டும் எனப்
புரிகிறது.
ஐந்தாம் அத்யாயத்தில்
தோழர்களின் குணாம்சங்களை விவரித்து வருகிறார். இடையில் அவரது மனைவி ’கடின
வேலைக்காக’ (மே 19) இழுத்துச் செல்லப்பட்டதும் அவள்மீது கவனம் குவிகிறது. அவளும்
தகுதிவாய்ந்த போராளி என்பதால் இதில் நமக்கு புகாரேதும் இல்லை. தினமும் இரவில்
அவளுக்காக பாட்டு பாடுகிறார். இங்கும் அவர் சிலாகித்து விவரிப்பது போராளி
குஸ்தினாவைதான். அந்த பொதுவான லட்சியம் தாண்டி அவர்களிடையே தனிப்பட்ட உறவு
சாத்தியமா என்பதுகூடத் தெரியவில்லை.
அடுத்து அவர் சொல்வது
அவரது ‘உயில்’. அதாவது அவரது சொத்தாக எஞ்சப்போகும் அவர் எழுதிய புத்தகங்கள். அவை
எவ்வாறு தொகுக்கப்பட வேண்டும் என விரிவாக குறிப்பிடுகிறார். இவ்வாறு அவசரமாக
சொல்லியாக வேண்டியவை சொல்லப்பட்டுவிட்ட பின்னர் மீண்டும் ஜிலினிக் தம்பதிகள், பிற
தோழர்கள் பற்றிய குறிப்புகள் தொடர்கின்றன.
பூசிக்கே சொல்வதுபோல
சிறையில் தனிமை குறித்த பிம்பத்தை அவர் உடைக்கிறார். அங்கு எவரும் தனியாக இல்லை,
சுவர்கள் கூட மெளனமாக பேசுகின்றன. ஒருவேளை பொதுவான லட்சியம்கொண்ட அரசியல் கைதிகள்
என்பதால்கூட இது சாத்தியமாகி இருக்கலாம். சிறிய கண்ணசைவுகளும், தொடுகையுமே
பலசெய்திகள் சொல்கின்றன. முக்கியமான விஷயங்கள் பகிரப்படுவதற்கு சில வினாடிகளும்
ஓரிரு சொற்களுமே போதுமானதாக இருக்கின்றது. கட்டுப்படுத்தப்பட்ட சூழலில்தான்
தொடர்புறுத்தல் மேலும் செறிவு கொள்கிறது போலும்.
துயரப்படும் மனிதனுக்கு
முதல் மீட்பராக அமைவது இயற்கையே. சிறையின் காவலுக்கிடையே கசிந்து உள்நுழையும்
சிறுதுளி இயற்கையும் பெறும் மீட்பாக அமைகிறது. வருடத்தில் ஓரிரு நாட்கள் ஜன்னல்
வழியே வரும் சூரிய ஒளிக்கீற்றும், சகதோழர் மைதானத்திலிருந்து மறைத்து எடுத்து
வரும் ஒரு கைப்பிடி மண்ணும் புல்லும் அபார்மான உளஎழுச்சியை தருகின்றன.
பல்வேறு கொலைகள்,
சித்ரவதைகள், துரோகங்கள், சிறுமைகள் என இக்குறிப்புகள் முழுக்க இருந்தாலும் இந்த
ஆவணம் ஒட்டுமொத்தத்தில் மனுடத்தின் மீதும் மகிழ்ச்சியின்மீதும் நம்பிக்கை
கொண்டிருப்பதாகவே படுகிறது. ஏனெனில் பூசிக்கிற்கு எவர்மீதும் கசப்பு இருப்பதாகத்
தெரியவில்லை. மனிதன் – மனிதனல்லாதோர், லட்சியத்தை புரிந்து கொண்டோர் – அல்லாதோர்
என்பது மட்டுமே அவர் கொண்டுள்ள பிரிவு. மற்றபடி மனிதர்களை ஆர்வத்துடன் வேடிக்கை
பார்க்கும் பத்திரிக்கையாளனாகவே அவர் எனக்குத் தெரிகிறார்.
வெண்முரசின் தீயின் எடை
பகுதியில் படைவீரன் ஒருவன் திருஷ்டத்யும்னனிடம் உரைக்கும் வரி ஒன்று:
// அனைவரும்தான் இறக்கிறார்கள். ஆனால் ஷத்ரியர்கள் மட்டுமே இறந்த இடத்தில் ஒரு சொல்லை எஞ்சவிட்டுச் செல்கிறார்கள். //
ஜூலிஸ் பூசிக்
தூக்குமேடை குறிப்புகளின் மூலம் அழுத்தமான பல சொற்களை எஞ்சவிட்டு
சென்றிருக்கிறார்.
கல்பனா ஜெயகாந்தன்
’தூக்குமேடைக்
குறிப்புகள்’, புத்தகத்தை முதன்முறை வாசிக்கத் தொடங்கும் போது, மிகவும் ‘gory’ யாக
இருப்பதாகத் தோன்றியது. ஷோபா சக்தியின் பாக்ஸ் நாவல் நினைவில் வந்து கொண்டே
இருந்தது. முள்ளிவாய்க்கால் படுகொலை சமயத்தில் வெளிவந்த அநேகக் கட்டுரைகள்,
உண்மைச் சம்பவங்களின் சித்தரிப்புகள் ஆகியவை நினைவுக்கு வந்து கொண்டிருந்தன.
மிகவும் துயர் தருவதாக இருந்ததால், வாசிப்பதை நிறுத்தி விட்டேன். அடுத்த முறை
வாசிக்கத் தொடங்கிய போது அத்தனை இம்சிக்கவில்லை. பழகிவிட்டது. ‘தீவிரவாதிகள்’ என்ற
சொல் மனதில் சுற்றிக் கொண்டிருந்தது. கண்மூடித்தனமான ’தீவிரம்’ அது நாஸிஸமோ,
ஃபாஸிஸமோ, கம்யூனிஸமோ எதுவானாலும் லட்சோப லட்சம் உயிர்களை எடுக்க வல்லது.
இந்தக் குறிப்புகள்
1943-ல் எழுதப்பட்டவை. 1936-38 ல் தான் ஸ்டாலினின் ஆட்சியில், ‘the great purge’
நடக்கிறது. ஃபாஸிஸமோ, கம்யூனிஸமோ இரண்டும் ஒன்றுக்கொன்று வன்முறையில் குறைந்தவை
அல்ல. கதாநாயகனின் தரப்பு என்பதால், ’கம்யூனிசம்’ ஒரு பொன்னுலகை உருவாக்கப்போகிறது
என்று அவர் நம்புவதால் அது சுபக்கமாக இருப்பதற்கான அவசியமில்லை.
சமீபத்தில் Georgia
நாட்டிற்குச் சென்றிருந்தோம். Erstwhile USSR-ன் பகுதியாக இருந்த நாடு அது. அங்கு மக்கள்
ரஷ்யாவை அடி வயிற்றிலிருந்து வெறுக்கிறர்கள். ரஷ்யர்கள் கட்டிய பெரிய கட்டிடங்களை
அவர்கள் கட்டியது என்பதற்காகவே உபயோகிக்காமல் போட்டு வைத்திருக்கிறார்கள்.
டூரிஸ்டுகளுக்கு அங்கே ரஷ்யர்களைப் பற்றிப் பேச வேண்டாம் என்றே எச்சரித்து
அனுப்புகிறார்கள். Raw hatred for Russians அவர்களிடம் தெரிகிறது.
எந்த சித்தாந்தக்காக
ஜுலியஸ் ஃபுசிக், இத்தனை கஷ்டங்களை சகித்துக் கொள்கிறாரோ அந்த சித்தாந்தம் 70
ஆண்டுகளில் வெறுப்புக்குரிய ஒன்றாக மாறி விடுகிறது. அவருடைய வலிகளுக்கும்
கனவுகளுக்கும் எந்த அர்த்தமும் இல்லை இப்பொழுது.
ஆனால் ஆதாரமான ஏதோ
ஒன்று இவ்வெழுத்தில் நம்மைக் கவர்கிறது. அது ஆசிரியர் பூர்ணமாக நம்பும்
சித்தாந்தில் இருந்து கற்றுக் கொண்டிருக்கிறாரா என்றால், இருக்கலாம் ஆனால்
முற்றிலுமாக இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. விதை, inspiration வேண்டுமானால்
அதிலிருந்து விழுந்திருக்கலாம். ஆனால் அவ்விழுமியங்கள் முளைத்தது அவர் மனதில்.
அதனாலேயே அவர் கொண்டாடப்படுகுறார்.
ஆசிரியரின் ‘சக
மனிதர்களின் மீது இருக்கும் அக்கறை, நம்பிக்கை; மரணத்தின் தருவாயில் கூட
இருக்கக்கூடிய பதற்றமின்மை; சுற்றிலும் நடக்கும் விஷயங்களின் மீது உள்ள கூர்ந்த
அவதானிப்பு, எதிர் காலத்தின் மீது உள்ள நம்பிக்கை; தான் தேர்ந்தெடுத்த பாதைக்கு
முழுமையாக தன்னை ஒப்புக் கொடுத்தல்--ஆகியவையே நம்மைக் கவர்கின்றன. இவை அவர்
communist என்பதால் அல்ல, மேன்மையான மனிதர் என்பதால் அவரில் வாய்த்தவை.
அனைத்திற்கும் மேலாக இந்த எழுத்தில் உள்ள நேர்மையே இதை இலக்கியமாக்குகிறது.
இதன் ஆங்கில வடிவம்
மிகச் சிறந்த கலைப்படைப்பு. தமிழ் மொழிப்பெயர்ப்பு மிகவும் சுமார். நிகா, ஜாப்தா
போன்று ஒரு குழுவுக்கு மட்டுமே தெரிந்த சொற்களை கையாள்கிறார். திடீரென்று வற்றல்
குழம்பு என்கிறார். Intelligensia-வை படிப்பாளி என்று மொழிப்பெயர்க்கிறார். Devil
என்பதை பேய் என்கிறார். பல சமயம் என்ன சொல்ல வருகிறார் என்பதை ஆங்கிலத்தில்
retranslate செய்து வாசித்தேன். தமிழ் வடிவம் வாசிப்பின்பத்தைக் கண்டிப்பாக
குறைக்கிறது.
வெ கண்ணன்
தூக்குமேடைக் குறிப்புகள் பற்றி,
ஜூலிஸ் பூசிக்கின் சிறைக்குறிப்புகளாக பதிவிடப்பட்டிருக்கும்“தூக்குமேடை
குறிப்புகள்” தன் 14 மாத
சிறை மற்றும் அதற்கு முந்திய தலைமறைவு வாழ்க்கையின்போது
சந்தித்த மனிதர்களைப்பற்றிய அவரது சுய அவதானிப்பு என்று சொல்லிவிடலாம்.
தன் முடிவை எதிர்நோக்கியிருக்கும் ஒருவனின் ஓலமாகஇல்லாமல், கொண்ட
கொள்கையின்பால் தீராப்பிடிப்பும்,சக மனிதர்களையும், வெளியில்
நடக்கும் சமூக-ராஜீய மாற்றங்களை
தன் சிறைவாசத்தின் மிகக்குறுகிய நித்திய அனுபவங்களினூடேயே கண்டுகொள்ளும் ஒரு
பத்திரிகையாளனின் குறிப்புகளாக அமைந்ததாலேயே
இப்படைப்பு முக்கியமாகிறது.
ருஷ்ஷிய உதவியுடன் கம்யூனிஸ ஆட்சியை
செக் நாட்டில் நிறுவி ஹிட்லரின் ஜெர்மானிய நாஜி அரசாங்கத்தை அகற்ற முயற்சிக்கும்
ஒரு புரட்சிக்குழுவின் திரைமறைவுப் பத்திரிகையாளனின் (பூசிக்) கைதுடன்
துவங்குகிறது.
அதீத கட்டுப்பாடுகளையுடையசிறைச்சமூகத்திலும், கைதிகள்
தங்களுக்குள் பாடுவதன்மூலமும், அறைசுவர்களை சங்கேதமுறையில் தட்டுவதன் மூலமும்
செய்துகொள்ளும் தகவல் பரிமாற்றங்கள், சககைதிகளின்
மீதானஅக்கரை
என எந்த உயிரினமும் தனக்குக் கிடைக்கும் மிகச்சிறிய இடைவெளிகளையும் எப்படித் தன்
தேவைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளும்
என்பதற்கானதிறப்பு.
சிறை வாழ்க்கை மற்றும் விசாரணை முறைகளைத்தவிர, இக்குறிப்புகளின்
பெரும்பகுதி, பூசிக்கின்
உளவியல் பார்வையில் அவருடன் திரைமறைவு இயக்கத்தில் பனிபுரிந்தவர்கள், சிறைக்
காவலர்கள்,விசாரணை
அதிகாரிகள் போன்றவர்களின் எண்ண ஓட்டங்களை சொல்வதாகவே அமைந்துள்ளது.
அதிகாரிகளை பகுப்பிடும்போது, இயந்திரத்தானமானவர்கள்,அதிகாரம்
மாறும்போது தங்கள் நிலையும் தலைகீழாகும் எனத்தெரிந்தது அதன்படி நடப்பவர்கள், தன்
குறைகளையும் இயலாமைகளையும் தனக்குள்ள அதிகாரத்தைவைத்து மறைக்க முயலுபவர்கள், மனிதாபிமானிகள்
என மிகவிரிவான சித்திரத்தையளிக்கிறார்.
தலைமறைவுக் குழுவிலும் போர் அனுபவமுள்ள, மிகவும்
திடமானவன் என நம்பப்பட்டவன் தன் குழு உறுப்பினர்களை காட்டிக்கொடுப்பதும், மிகச்சாதாரணமானவர்கள்
எனக் கருதப்பட்டவர்கள் சித்திரவதைகளை மௌனமாக அனுபவித்து உறுதி காத்து நின்றதும்
சம்பவங்களாகின்றது.
//யுத்தத்தில் கடைசி சோல்ஜராக இருப்பது
எத்துனை துக்கமான விஷயம்/// உண்மைதான், ஆனால் போராடி
வென்று நிறுவிய கோட்பாடுகள் தன் கண் எதிரே நொறுங்குவதை காண்பது அதைவிட துக்கமானது
என்றே படுகிறது. கம்யூனிஸம் கிட்டத்தட்ட வழக்கொழிந்துவிட்டபின்
இந்தக் குறிப்புகளைப்படிப்பது ஒரு பின்னனி சோகத்தை அளிக்கிறது.
இந்த குறிப்புகள், அன்றிருந்த அரசு
அடக்குமுறைகளிலிருந்து மிக கவனமாகப் பாதுகாக்கப்பட்டு, அரசமாற்றத்திற்குப்
பிறகு பூசிக்கின் மனைவியால் தேடித்தொகுக்கப்பட்டது என்பது அதற்கு ஒரு கவர்ச்சியை
அளிக்கத்தான் செய்கிறது.
மொழிபெயற்ப்பு, பெரும்பாலும் வாசிப்பிற்கு இடையூறு இல்லாமல் இருந்தபோதிலும், அவ்வப்போது
வரும் “வற்றல்
குழம்பு” போன்ற சொற்பிரயோகங்கள் நம்மை ஐரோப்பாவிலிருந்து அன்னியப்படுத்திவிடுகிறது.
நன்றி.
~மதன்.எஸ்
தூக்குமேடை குறிப்புகள்
ஜூலிஸ் பூசிக் சிறையில் அடைக்கப்பட்ட போது எழுதிய இக்குறிப்புகள் பற்றியும், அது
பின்னர் கம்யூனிச ஆட்சியில் எப்படி பயன்படுத்தி கொள்ளப் பட்டது என்பதை பற்றியும்
நண்பர்கள் விரிவாகவே எழுதி விட்டனர். அதனால், அதை தவிர்த்து இப்புத்தகத்தில் உள்ள
விஷயங்களை பற்றிய எனது அவதானிப்புகளை பகிர்ந்து கொள்கிறேன்.
அவரது வாழ்நாளிற்கு பிறகு, கம்யூனிச ஆட்சி இதை கிட்டத்தட்ட ஒரு
பிரச்சாரமாகவே பயன்படுத்தி கொண்டாலும், இக்குறிப்புகள் வழி வெளிப்பட கூடிய போராளி
மிக நேர்மையையானவராகவே இருக்கிறார். அவர் முதல் முதல் கைது செய்யப்பட்ட இடத்தில
கூட, அவரை கைது செய்யும் நோக்கத்துடன் காவலர்கள் அங்கு வரவில்லை, மேலும்
அவர்களுக்கு இவர் யார், கட்சியில் என்ன பொறுப்பில் இருக்கிறார் என எதுவும்
தெரியாது, ஒருவேளை தப்பிக்க வேண்டும் என நினைத்திருந்தால் இவரது நண்பர்களை பலி
கொடுத்து தப்பித்திருக்கலாம். ஆனால், தானாகவே சரணடைகிறார். மக்களை வழி நடத்த கூடிய
ஒரு தலைவனாய் தன்னை உருவகித்து கொள்ளாமல், அனைவரும் சேர்ந்து விடுதலையை, சம
உரிமையை நோக்கி செல்லவே விரும்புகிறார்.
சமீபத்தில் தான் ஆல்பர்ட் காம்யூவின் "அந்நியன்" வாசிக்க
நேர்ந்தது. புனைவு என்றாலும் சில இடங்களில் இரண்டுக்குமான ஒப்புமைகள்
வியப்பூட்டியது. இரண்டு படைப்புகளின் நாயகர்களும் தன்னளவில் மிக நேர்மையானவர்கள்,
தங்களுக்கு என்ன நடக்கும் என்பதை முன் கூட்டியே அறிந்தவர்கள் அதற்காக கவலை
படாதவர்கள், இருவருக்கும் தாங்கள் வாழும் அமைப்பை பற்றி வலுவான அபிப்ராயங்கள்
உள்ளது. அந்நியன் நாயகன் அந்த அபத்தத்தை சுட்டி காட்டி ஒரு புன்னகையுடன் கடந்து
செல்கிறான், ஆனால் பூசிக் அதை களைந்து நாளை உருவாக போகும் ஒரு லட்சிய உலகத்தை
கற்பனை செய்யும் லட்சியவாதியாக இருக்கிறார்.
இயல்பாக சில கணங்கள் சூரியனில் வாய்ப்பு கிடைக்கையில் பூசிக்கின்
மனம் எல்லாருக்குமான வெளிச்சத்தை பற்றியே கவனம் கொள்கிறது,
"சூரியன், அவன் எவ்வளவு தாராளாமாய் தனது கிரணங்களை அள்ளி வீசுகிறான்!
ஆனால் எவ்வளவு குறைவான ஜனங்கள் சூரிய வெளிச்சத்தை பெற்று வாழ்கின்றனர். ஒருநாள்,
அவன் எல்லாருக்கும் - ஆமாம் எல்லாருக்கும் - வெளிச்சம் தரும் வண்ணம்
பிரகாசிப்பான். நாம் எல்லாரும் அவனது இதமான கிரந்தங்களில் வாழ்வோம். இதை தெரிந்து
கொள்ள எவ்வளவு ஆனந்தமாய் இருக்கிறது”
போலிஷ் மற்றும் ஜெர்மன் அதிகாரிகளை பற்றிய குறிப்புகள், சிறைக்கு
வருகையில் அழிந்து போகும் மேற் பூச்சுகள் பற்றிய பகுதிகள், பல சிறு அவதானிப்புகள்
ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கு உரியவை. சிறைக்கு வருகையில் ஏற்படும் மாற்றங்களை பற்றி
குறிப்பிடுகையில்,
"இங்கே வருவதற்குள் உன்னுடைய நிஜ உருவத்தை அலங்கரித்த அல்லது
பலஹீனப்படுத்திய எல்லாப் புற தோற்றங்களும் சாவுக்கு முன் வீசுகிற கடும் புயலால்
வழித்து ஏறிய பட்டுவிடுகின்றன. நம் எல்லாருக்குள்ளும் பலமும் பலவீனமும்
இருக்கின்றன, பீதியும் பயமும் இருக்கின்றன, ஆனால் இங்கு அவ்விரண்டில் ஒன்றுதான்
மிஞ்சுகிறது" என்கிறார்.
ஊமைச்செந்நாய் கதையில் வரும் வெள்ளைக்காரன் ஓரிடத்தில் தான்
இங்கிலாந்தில் இவ்வளவு கீழ்மையை நடத்தப்பட்டவன் என்பதை சொல்வான். அவனே இங்கு வந்து
இந்தியர்களை ஆள்வதை பற்றி சொல்வான். இங்கிலாந்தில் இப்படி இரண்டாம், மூன்றாம் தர
மக்களாய் நடத்தப்பட்டவர்களே காலணிகளை சென்று, அவர்களை ஆட்சி செய்யும் பொறுப்பை
ஏற்றார்கள். அதே போல ஜெர்மனியில்
இருப்பதை விட போலிஷ் போல அடிமை நாட்டில் இருக்கவே அந்த அதிகாரிகள் விரும்பினார்கள்
என்கிறார் பூசிக்
" பெர்லினில் இருப்பதை விட, இருண்ட ஆப்ரிக்க காலணியிலோ அல்லது
பிரேக் போன்ற அடிமை நாட்டுத் தலைநகரிலோ காலனிய அதிகாரியாக இருப்பவன் சக்தி
வாய்ந்தவனாக இருப்பதோடு மட்டுமல்லாமல், தன் பாங்கு கணக்கை விருத்தி செய்து கொள்ள
நிரம்ப வசதியும் பெற்று இருக்கிறான்”
குறிப்புகளின் ஆரம்பத்தில் அடுத்த கட்ட தலைவர்கள் வருவார்கள்,
அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி கொள்ளலாம் என எண்ணியிருந்த பூசிக் , மெல்ல மெல்ல
நிலையை உணர்ந்து அதை பற்றி பேசுவதை குறைத்து கொள்கிறார். இப்போராட்டத்தில்
ஈடுப்பட்ட அனைவரையும் நினைவில் வைத்து கொள்ள செல்லும் ஜூலியஸ் பூசிக் இன்றுவரை
அம்மண்ணில் நினைக்க பட்டு கொண்டே இருக்கிறார்.
ஸ்வேதா
தூக்குமேடைக்
குறிப்பு எனக்கு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தைப் பற்றி அறிய ஒரு நல்ல அறிமுக நூலாக அமைந்தது. விமர்சனமாக அல்லாமல் இந்நூல் வழியே ஜூலியஸ் பூசிக்கையும் அவர் வாழ்ந்த காலத்தையும் நான் கண்டறிந்ததை வைத்து எழுதிய அறிமுகக் கட்டுரையை பகிர்கிறேன். அதன் சுட்டி கீழே,


No comments:
Post a Comment